உலகில் ஒவ்வொரு விடயத்திற்கும் ஒவ்வொரு நாள் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அந்தந்த விடயங்கள் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்நாட்களின் நோக்கமாக உள்ளது.
அந்த வகையில் உலக தொழிலாளர் தினமாக மே மாதம் முதலாம் திகதி பிரகடனப்படுத்தப்பட்டிருக்கிறது. தொழிலாளர்களின் வேலை நேரத்தை நாளொன்றுக்கு 08 மணித்தியாலங்களாக வரையறுப்பது உறுதிப்படுத்துவதை இலக்காகக் கொண்டு தொழிலாளர்கள் முன்னெடுத்த போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியின் நினைவு நாள் இது. அத்தோடு தொழிலாளர்களின் உரிமைகள் உத்தரவாதப்படுத்தப்பட வித்தூன்றிய நாளும் இது தான்.
அறிமுகம்
18ஆம் நூற்றாண்டின் இறுதியிலும், 19ஆம் நூற்றாண்டின் ஆரம்ப பகுதியிலும் கைத்தொழில் துறை வேகமாக வளர்ச்சி அடையத் தொடங்கியது. புதிய புதிய தொழிற்சாலைகள் உருவாகின. தொழில்நுட்பங்கள் பயன்பாட்டுக்கு வந்தன. அதனால் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணித்தியாலயங்கள் வேலை செய்ய வேண்டிய நிலைக்கு தொழிலாளர்கள் தள்ளப்பட்டனர். தொழிலின் நிமித்தம் தொழில் வழங்குனர்களால் தொழிலாளர்கள் பிழிந்தெடுக்கப்பட்டனர். அதற்கேற்ப ஊதியமோ, உரிமைகளோ தொழிலாளர்களுக்கு வழங்கப்படவில்லை.
உலக நாடுகளில்…
இந்நிலையில் நாளாந்தம் நீண்ட நேரம் வேலை வாங்கப்படுவதற்கு தொழிலாளர்கள் ஆட்சேபனைகளும் எதிர்ப்புக்களும் தெரிவித்தனர். குறிப்பாக பிரித்தானியாவில் 1832 இல் உருவான தொழிலாளர்களுக்கான சாசன இயக்கம் நாளாந்தம் பத்து மணி நேர வேலை உள்ளிட்ட 06 கோரிக்கைகளை முன்வைத்து தொடர் நடவடிக்கைகளை முன்னெடுத்தது.
பிரான்சில் நெசவுத் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள் 1830களில் தினமும் 15 மணி நேரம் கட்டாயம் உழைக்க வேண்டி நிலைக்கு உள்ளாகி இருந்தனர். இதற்கு எதிராக அங்குள்ள தொழிலாளர்கள் வேலை நிறுத்தங்களை மேற்கொண்டனர். குறிப்பாக 1834இல் ஜனநாயகம் அல்லது மரணம் என்ற கோஷத்தை முன்வைத்து அவர்கள் பெரும் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னில் கட்டிடத் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் முதன் முறையாக 8 மணி நேர வேலைக் கோரிக்கையை முன்வைத்து 1856இல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அவர்கள்தான் எட்டு மணி நேர வேலைக் கோரிக்கையை முன்வைத்து உலகில் முதன் முதலாக வெற்றியும் பெற்றவர்களாவர்.
இதேவேளை ரஷ்யாவில் சார் மன்னரின் ஆட்சி காலத்தில் அந்நாட்டு தொழிலாளர்கள் பலவிதமான துன்பங்களுக்கு முகம் கொடுத்தார்கள். 1895 — 1899க்கு இடைப்பட்ட காலத்தில் தொழிலாளர்கள் நூற்றுக்கணக்கான வேலை நிறுத்தங்களை முன்னெடுத்தனர். அதனால் லெனின் 1896 ஏப்ரல் மாதத்தில் மே தினத்திற்காக எழுதிய சிறு பிரசுரத்தில், ரஷ்யத் தொழிலாளர்களின் நிலைமை குறித்து விரிவாக எழுதியிருந்தார். அப்பிரசுரத்தில் ரஷ்யத் தொழிலாளர்களின் பொருளாதாரப் போராட்டம் – அரசியல் போராட்டமாக எழுச்சி கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். பிற்காலத்தில் ரஷ்ய புரட்சிக்கு தொழிலாளிகளின் 8 மணி நேர வேலைக்கான போராட்டமே வித்திட்டது.
அமெரிக்காவில்…
இவை இவ்வாறிருக்க, அமெரிக்காவின் பொஸ்டனில் கப்பல் கட்டும் தச்சுத் தொழிலாளர்கள் 1832 இல் 10 மணி நேர வேலைக் கோரிக்கையை முன்வைத்து வேலை நிறுத்தம் செய்தனர். அதேபோன்று 1835இல் பிலடெல்பியாவிலும், பென்சில்வேனியாவிலும் 1877இல் பென்சில்வேனியாவிலும் சுரங்கத் தொழிலாளர்களும், ரயில்வே தொழிலாளர்களும் குறைவான வேலை நேரத்தை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தை முன்னெடுத்தனர்.
அதனால் அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள தொழிலாளர் இயக்கங்களை இணைத்து, ‘அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு’ உருவாக்கப்பட்டது. இவ்வியக்கம் 8 மணி நேர வேலைக் கோரிக்கையை முன்வைத்து தொடர்ந்து தொழிலாளர் இயக்கங்களை முன்னெடுத்ததோடு 1886 மே 01 ஆம் திகதி நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கும் அழைப்பு விடுத்தது.
அதற்கேற்ப நியூயோர்க், சிக்காகோ, பிலடெல்பியா, மில்விக்கி, சின்சினாட்டி,போல்டிமோர் என அமெரிக்கா முழுவதும் 3,50,000 தொழிலாளர்கள் பங்கேற்ற மாபெரும் வேலை நிறுத்தம் இடம்பெற்றது. இவ்வேலைநிறுத்தத்தில் 1200க்கும் மேற்பட்ட நிறுவனங்களிலுள்ள தொழிலாளர்கள் பங்கு கொண்டனர். குறிப்பாக மிச்சிகனில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களும், சிக்காகோவில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. இதன் விளைவாக அமெரிக்க பெரு நிறுவனங்கள் பல மூடப்பட்டன. ரயில் போக்குவரத்து நடைபெறவில்லை. வேலைநிறுத்தத்தில் பங்கேற்ற தொழிலாளர்களின் ஊர்வலங்கள் அமெரிக்காவை உலுக்கியன. அத்தோடு 1886 மே 3ஆம் திகதி “மெக்கார்மிக் ஹார் வஸ்டிங் மெஷின் நிறுவனத்தின்” வாசலில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அணி திரண்டு கண்டனக் கூட்டமும் நடத்தினர். இங்கு இடம்பெற்ற கலவரத்தில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் 04 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.
இச்சம்பவத்தை கண்டிக்கும் வகையில் ஹேமார்க்கெட் சதுக்கத்தில் மே 4 இல் கண்டன கூட்டத்தைத் தொழிலாளர்கள் நடத்தினர். சுமார் 2500 தொழிலாளர்கள் கலந்து கொண்ட இக்கூட்டம் அமைதியாக நடந்து கொண்டிருந்த சூழலில் பொலிஸார் அனைவரையும் கலைந்து செல்லுமாறு கூறினர். அவ்வேளையில் திடீரென்று கூட்டத்தில் வெடிகுண்டு வீசப்பட்டது. அதனால் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அவ்விடத்திலேயே உயிரிழந்தார். பொலிஸார் கூட்டத்தினர் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்ததோடு தொழிலாளர்களையும் தாக்கினர். அத்தோடு தொழிலாளர் தலைவர்களை கைது செய்து வழக்கும் தொடுத்தனர். இவ்வழக்கில் 7 பேருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. இத்தண்டனை 1887 நவம்பர் 11 இல் நிறைவேற்றப்பட்டது. அவர்களது இறுதி ஊர்வலம் 1887 நவம்பர் 13 இல் நடைபெற்ற போது நாடு முழுவதிலும் இருந்து 5 லட்சம் பேர் கலந்து கொண்டதோடு, அமெரிக்கா முழுவதும் கறுப்பு தினமாக அனுசரிக்கப்பட்டது.
இந்த பின்புலத்தில் தான் நாளொன்றுக்கான வேலை நேரம் 08 மணித்தியாலயங்கள் என்ற உரிமையை தொழிலாளர்கள் பெற்றுக் கொண்டனர்.
இலங்கையில்…
அதேநேரம் இலங்கையிலும் கூட மே தினத்திற்கு நீண்ட வரலாறு உள்ளது. இந்நாட்டு தொழிலாளர் இயக்கத்தின் தந்தை என அழைக்கப்படும் ஏ.ஈ. குணசிங்க 1922 இல் இலங்கை தொழிலாளர் சங்கத்தை ஸ்தாபித்து தொழிலாளர் இயக்கத்திற்கு முதன்முதலில் வித்திட்டார். அதன் ஊடாக அவர் தலைமை ஏற்று நடத்திய தொடர்ச்சியான தொழிலாளர் போராட்டங்கள் உழைக்கும் மக்களுக்கு நிவாரணங்களைப் பெற்றுக் கொடுத்தன.
குறிப்பாக அரசாங்க ரயில்வேயில் 20 சதவீத சம்பள உயர்வு, தற்செயல் விடுப்பு (Casual Leave) மற்றும் சுகவீன விடுப்பு (Medical Leave) உள்ளிட்ட உரிமைகளைக் கோரி 1923 இல் முன்னெடுக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை வெற்றி பெற்றது. அதேநேரம் இலங்கையின் முதலாவது மே தினக்கூட்டம் குணசிங்க தலைமையில் 1927இல் கொழும்பில் நடாத்தப்பட்டது. அதன் பின்னர் இவரது தொழிற்சங்கத்தினால் 1929இல் துறைமுகத்தில் முன்னெடுக்கப்பட்ட மற்றொரு முக்கிய தொழிற்சங்க நடவடிக்கையின் பயனாக 0.25 சதவீத சம்பள உயர்வும் மதிய உணவுக்கென 15 நிமிட இடைவேளை வழங்கும் முறையும் நடைமுறைக்கு வந்தன. 1933இல் அவர் தலைமையில் கொழும்பில் நடாத்தப்பட்ட மே தினக்கூட்டத்தில் பங்குபற்றியவர்கள் சிவப்பு மற்றும் வெள்ளை நிற ஆடைகளை அணிந்தவர்களாக காணப்பட்டனர்.
இவ்வாறு இந்நாட்டில் மே தினக் கொண்டாட்டங்கள் வளர்ச்சி பெற்று வந்த அதேவேளை, தொழிலாளர்களின் உரிமைகளும் முன்னேற்றமடைந்து வந்தன. இந்நிலையில் முன்னாள் பிரதமர் மறைந்த எஸ்.டப்ளியூ.ஆர்.டி பண்டாரநாயக்க 1956இல் மே முதலாம் திகதி, மே தினத்தை பொது, வங்கி, மற்றும் வர்த்தக விடுமுறை தினமாகப் பிரகடனப்படுத்தினார்.
மே தினம்
அந்த வகையில் தொழிலாளர்களுக்கான தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கும் இந்த தினம், இம்முறை எதிர்வரும் புதன் கிழமையாக விளங்குகிறது.
இத்தினத்தை சிறப்பாகவும் வெகுவிமர்சையாகவும் கொண்டாட உலகளாவிய ரீதியில் தொழிலாளர்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றனர். இந்நாட்டிலும் தொழிலாளர்களும் அரசியல் கட்சிகளும் அதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளன.
குறிப்பாக இந்நாட்டின் முக்கிய தேர்தல் இவ்வருடத்தின் பிற்பகுதியில் இடம்பெறவிருப்பதால் இத்தினத்தை தங்களது மக்கள் செல்வாக்கையும் பலத்தையும் வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பமாக பயன்படுத்துவதில் கட்சிகள் குறியாக உள்ளன. அதனடிப்படையில் பிரதான கட்சிகள் பல தங்களது மே தினக் கூட்டங்களை தலைநகர் கொழும்பில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு முக்கியத்துவமும் சிறப்பும் பெற்றும் விளங்கும் இத்தினம் இலங்கையில் மாத்திரமல்லாமல், உலகின் பல நாடுகளிலும் தொழிலாளர்கள் வியர்வை சிந்தி, உயிர்களை துச்சமாக மதித்து அர்ப்பணிப்புக்களுடன் முன்னெடுத்த போராட்டங்களின் பிரதிபலனேயாகும். அதாவது இன்று தொழிலாளர்கள் அனுபவிக்கும் அனைத்து உரிமைகளுக்கும் அபிலாஷைகளுக்கும் காரணம் அன்றைய தொழிலாளர்கள் இட்ட அடித்தளமே என்றால் அது மிகையாகாது.
மர்லின் மரிக்கார்