கவிதை எழுதிப் பார்த்துவிட்டான்
கொஞ்சம் கூட முடியவில்லை
கதையே புனைந்திட நினைத்தாலும
கதைக்குக் கருவும் கிடைக்கவில்லை
விதையே இல்லா செடி வளர்க்கும்
வித்தை கற்று வராததனால்
எதையோ எழுதி அனுப்பி வைத்தாள்
எந்த இதழும் ஏற்கவில்லை!
பழைய நூல்களைப் புரட்டுவதால்
படைத்திட முடியும் என்றெண்ணி,
இழையே யோடிச் சிக்குண்ட
அழகே யில்லா கைத்தறிபோல்,
தளையே தட்டும் நிலைவரினும்
தத்துவக் கருத்துகள் சேர்த்திணைத்து
விலையே போகும் என்றெண்ணி
விருப்புடன் ‘கவிதை’ படைத்திட்டான்!!
சொற்கள் அடுக்கி யடுக்கியவன்
செப்பனிட்ட அக்கவிதை
முட்கள் இல்லா மலராகும்
என்றே எண்ணி அனுப்பி வைத்தான்
பற்கள் பிடுங்கிய பொம்மையுரு
போலது அமைந்த காரணத்தால்
ஏற்றுக் கொள்ள முடியவில்லை
என்றோர் அஞ்சல் வந்ததுகாண்!!
மொழியின் ஆளுமை கைவந்து
மனதுள் பொங்கும் உணர்வலையும்
எழிலைப் பருகும் கவித்துவமும்
அறிவும் ஆற்றலும் ஒன்றிணைய
பொழியும் தன்னால் கவிமழையே!
பொங்கும் புனலாய் ஊற்றெடுத்தே
விழியில் கனவுகள் நிறைந்தென்றும்
விண்ணில் பறந்திட வைத்திடுமே!!