உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் இடம்பெற்று கடந்த 21ஆம் திகதியுடன் ஐந்து வருடங்கள் பூர்த்தியடைந்துள்ளன. இந்தத் தாக்குதல்கள் பற்றிய சர்ச்சைக்குரிய கருத்துகள் அவ்வப்போது முன்வைக்கப்படுகின்ற போதும் இதுபற்றிய விவாதங்கள் இன்னமும் முடிந்தபாடாக இல்லை.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து கடந்த புதன்கிழமை முதல் மூன்று நாட்கள் பாராளுமன்றத்தில் முழுநாள் சபை ஒத்திவைப்பு விவாதம் நடத்தப்பட்டது. இதுவரையில் 11 நாட்கள் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து பாராளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட்டுள்ளது.
2019 ஒக்டோபர் 23ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்து பாராளுமன்ற விசேட குழு தனது அறிக்கையை சமர்ப்பித்திருந்தது. அன்றிலிருந்து இதுவரை 11 நாட்கள் பாராளுமன்றம் இத்தாக்குதல்கள் பற்றி விவாதங்களை நடத்தியுள்ளது.
மத அடிப்படைவாத தீவிரவாதக் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலான உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலில் 39 வெளிநாட்டவர்கள் உள்ளடங்கலாக 253 இற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டதுடன், 500 இற்கும் அதிகமானவர்கள் காயமடைந்திருந்தனர்.
இந்தத் தாக்குதல் இடம்பெற்று ஐந்து வருடங்கள் நிறைவு நினைவுகூரப்பட்ட போதும், காயமடைந்த பலர் இன்னமும் இயங்க முடியாத உடல் ஊனமுற்ற நிலையில் இருப்பது துரதிர்ஷ்டவசமானது.
அது மாத்திரமன்றி, இந்தத் தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களுக்கு நியாயம் கிடைக்கவில்லையென்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இருந்தபோதும், தாக்குதல்களின் பின்னணியில் இருந்தவர்கள் யார் என்பது தனக்குத் தெரியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறிய சர்ச்சைக் கருத்தைத் தொடர்ந்தே இவ்விடயம் மீண்டும் அரசியல் அரங்கத்தில் சூடுபிடிக்கத் தொடங்கியது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் இடம்பெற்ற போது நாட்டின் தலைவராக இருந்த மைத்திரிபால சிறிசேன, இதற்கு முன்னர் தாக்குதல் பற்றித் தனக்கு முற்கூட்டியே எதுவும் தெரியாது எனக் கூறிவந்த நிலையில், பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பது தனக்குத் தெரியும் எனக் கூறிய கருத்து சர்ச்சையானது மாத்திரமன்றி, இது பற்றி அவரிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ஐந்து மணித்தியாலங்கள் வாக்குமூலத்தைப் பதிவு செய்திருந்தனர்.
இது பற்றி நீதிமன்றத்தில் வாக்குமூலமளிக்க வருமாறு விடுக்கப்பட்ட அழைப்பும் அவரினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான பின்னணியிலேயே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து மூன்று நாட்கள் சபை ஒத்திவைப்பு விவாதத்தை நடத்த வேண்டும் என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை விடுத்தது.
இதற்கு அமைய கடந்த புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய மூன்று நாட்களும் முழுநாள் விவாதம் பாராளுமன்றத்தில் நடத்தப்பட்டது.
இந்த மூன்று நாள் விவாதத்தை ஒட்டுமொத்தமாக எடுத்துப் பார்க்கும்போது புதிய விடயங்கள் எதுவும் முன்வைக்கப்பட்டதாகத் தெரியவில்லை. எதிர்க்கட்சியினர் வழமையான அதாவது இதற்கு முன்னர் முன்வைத்த குற்றச்சாட்டுக்களையே மீண்டும் மீண்டும் சுமத்தியிருந்ததை அவதானிக்க முடிந்தது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சர்ச்சைக்குரிய கருத்துப் பற்றியோ அதன் ஊடாகப் புதிய தகவல்கள் வெளியாகியிருந்தமைக்கான எவ்வித அறிகுறிகளுமோ இந்த விவாதத்தின் மூலம் தெரியவரவில்லை.
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் மூளையாக இருந்தவர்களை அடையாளம் கண்டதாகக் கூறுபவர்கள் அல்லது படுகொலைக்கு மூளையாக செயல்பட்டவர்கள் யார் என்பதை நிரூபிக்கும் முக்கிய தகவல்களைப் பெற்றவர்கள் யானையின் உடலமைப்பின் பல்வேறு பாகங்களைத் தொட்டு யானை எப்படியிருந்தது என்பதைக் கண்டுபிடிக்க முயன்ற விழிப்புலனற்றோர் போன்ற பழமொழியைப் போலவே செயற்பட்டனர்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் அனைத்துக் கோணங்களிலும் சரியான முறையில் விசாரிக்கப்படவில்லையென்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருந்தாலும், விவாதங்களின் மூலம் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியுமா என்பது பாரியதொரு கேள்வியாகும்.
இந்தத் தாக்குதல்கள் குறித்து பல்வேறு தரப்பினர் விசாரணைகளை நடத்தியிருப்பதுடன், ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டு ஆயிரக்கணக்கான பக்கங்களைக் கொண்ட அறிக்கைகளும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. எனவே இவற்றை அடிப்படையாகக் கொண்டு முறையான விசாரணைகளை முடுக்கிவிட்டு குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதற்குப் பதிலாக, அரசியல் ஆதாயம் தேடும் நோக்கில் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுக்களைச் சுமத்துவது எந்தளவுக்குப் பொருத்தமானது என்பதை அரசியல் தலைவர்கள் சிந்திக்க வேண்டும்.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக தாம் பதவியேற்ற பின்னர், கர்தினால் அவர்களை அழைத்து, தயவு செய்து நாம் அனைவரும் இணைந்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளை ஆராய்ந்து தீர்வு காண்போம் எனக் கூறியதாகவும், குறைகள் என்னவென்று சொன்னால் அதனை நிவர்த்தி செய்து விசாரணைகளை முன்னெடுக்க முடியும் எனக் கூறியிருந்ததாகவும் அமைச்சர் டிரான் அலஸ் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்திற்கு தீர்வு காண்பது அவசியமானால் கர்தினால், கத்தோலிக்க திருச்சபை மற்றும் அவர்களது வழக்கறிஞர்கள், எதிர்க்கட்சி பிரதிநிதிகள் குழு மற்றும் பொலிஸார் இணைந்து இந்த விவகாரங்களை ஆராய்ந்து சரியான தகவல்களை பெற்று பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
பாராளுமன்றத்தில் இந்த விவாதங்களுக்காக சுமார் 130 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளோம். பொலிஸ் விசாரணையில் பல குளறுபடிகள் உள்ளன. அவை சரி செய்யப்பட்டுள்ளன. இதை முடிக்கவில்லை என்றால், இது போன்ற விவாதங்கள் தொடரும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கைகளுக்கு வழங்கப்பட்ட பின்னர் மறுநாள் தன்னைத் தொடர்புகொண்டதாகவும், ‘இதில் உள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த முடியாது. அவ்வாறு நடைமுறைப்படுத்துவதாயின் தனக்கு நெருக்கமான அமைப்புக்களைத் தடைசெய்ய வேண்டியிருக்கும்’ என்ற விடயத்தை கூறியதாகவும் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அண்மையில் கூறிய விடயத்தையும் அமைச்சர் டிரான் அலஸ் தனது உரையில் நினைவு கூர்ந்தார்.
2021ஆம் ஆண்டின் பின்னர் மூன்று வருடங்களுக்குப் பிறகு கர்தினால் இவ்விடயத்தை பெரிதுபடுத்துகின்றார். மூன்று வருடங்களாக முன்னாள் ஜனாதிபதியுடன் அவர் நெருக்கமாக இருந்தாரா என்றும் அமைச்சர் கேள்வியெழுப்பினார். அத்துடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அண்மைய வாக்குமூலத்தில் இந்நாட்டுப் பிரஜை தொடர்பிலோ அல்லது இந்நாட்டுப் பிரஜையுடன் தாக்குதல்களுக்குத் தொடர்பு உள்ளமை குறித்தோ எவ்வித தகவலும் வழங்கப்படவில்லையென்றும் அமைச்சர் டிரால் அலஸ் பாராளுமன்றத்துக்கு வழங்கிய பதில் உரையில் குறிப்பிட்டார்.
இதன் அடிப்படையில் பார்க்கும்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து எதிர்க்கட்சியின் தேவைக்கு அமைய நடத்தப்பட்ட விவாதங்களில் புதிய தகவல்கள் எதுவும் வெளியிடப்படாமல், தேர்தல் நெருங்கும் சூழ்நிலையில் அரசியல் ஆதாயம் தேடும் முயற்சிகளே முன்னெடுக்கப்பட்டுள்ளன. அது மாத்திரமன்றி சர்வதேச விசாரணைகள் மற்றும் புதிய விசாரணைகள் பற்றிய கருத்துப் பரிமாற்றங்களும் இங்கு இடம்பெற்றிருந்தன. எதுவாக இருந்தாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கும் வகையிலான விசாரணைகளே நன்மை பயக்கும். அது தவிரவும் காலத்தையும் பணத்தையும் வீணடிக்கும் வகையிலான கருத்தாடல்கள் எவருக்கும் நன்மையளிக்காது.
பி.ஹர்ஷன்