Home » அரசியல்வாதிக்காக ஒரு ஊரே அழுதது!

அரசியல்வாதிக்காக ஒரு ஊரே அழுதது!

மத்துகமவையே சோகத்தில் ஆழ்த்திய பாலித தெவரப் பெருமவின் மரணம்

by Damith Pushpika
April 21, 2024 6:48 am 0 comment

வேன் ஒன்று பயணிக்கின்றது. தொடம்கொட நுழைவாயிலிலிருந்து அதிவேக நெடுஞ்சாலையில் வரும்போது இருட்டாகவே இருக்கிறது. இருண்ட வானத்திலிருந்து வரும் வெளிச்சமும் கனமாகவே இருந்தது. அந்த வெளிச்சத்தில் தென்பட்டவர்கள் எல்லோரும் கனத்த முகங்களுடன் காணப்பட்டனர். தர்கா நகரைக் கடந்து சிறிது தூரம்சென்றதும் எங்குமே சோகம் கப்பிக்கிடந்தது. எங்குமே மரண ஓலமே நிறைந்திருந்தது. ஒவ்வொரு வீட்டின் முன்பும் வெள்ளைக் கொடிகள் பறக்கின்றன. சாலையோரத்தில் கன்னத்தில் கை வைத்து சோகத்தில் மூழ்கிய வயதான தாய்மார்கள். சிறு குழந்தைகளை தம் கைகளில் தாங்கிவாறு ஆங்காங்கே புலம்பும் தாய்மார்கள். கைகளைக் கட்டிக் கொண்டு பிரமைபிடித்தது போலிருக்கும் ஆண்கள்.

அரசியல்வாதியின் மரணம் கேலிக்கூத்தாக அமையும் நாட்டில், அரசியல் செய்த ஒருவருக்காக மக்கள் ஒன்று கூடி அழுது புலம்புவார்கள் என்று நான் நினைக்கவில்லை. உண்மையான மனிதர்கள் இறந்த பிறகுதான் வெளிச்சத்துக்கு வருவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். பாலித தெவரப்பெரும ஒரு சமூகத்தையே தனது மரணத்தின் மூலம் அதிர்ச்சிக்கு உள்ளாக்கக் கூடிய ஒரு உண்மையான மனிதராக இருப்பார் என்று இது வரை நான் நினைத்தது கூட இல்லை.

மத்துகம யட்டதொலவத்த பிரதேசத்தில் ஒரு முகத்தில் கூட புன்னகையைக் காண முடியவில்லை. வாகனத்தை சாலையில் நிறுத்திவிட்டு, இறுதி ஊர்வலம் செல்லும் வழியில் மெதுவாக நடந்து கொண்டிருந்தோம். அந்த உள்வீதியின் இருபுறமும் பாலிதவின் சகோதர சகோதரிகளின் வீடுகள் உள்ளன. ஒவ்வொரு வீட்டின் அருகிலும் மக்கள் பெருமளவில் கூடியிருக்கின்றார்கள். பாலிதவின் வீட்டுப் பகுதி மக்களால் நிரம்பியிருந்தது. வயதான தாய்மார்கள் அழுகிறார்கள். இதில் சிங்களம், தமிழ், முஸ்லிம் என்ற பேதத்தைக் காண முடியவில்லை.

மக்கள் வரிசையாக வந்து பாலிதவின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துகிறார்கள். அந்த வீட்டின் ஓரிடத்தில் பாலித நிரந்தர உறக்கத்தில் இருந்தார். சடலம் வைக்கப்பட்டிருந்த இடத்தில் ஒரு கெபினெட் இருந்தது. அதில் அவர் இதுவரை பெற்றிருந்த கௌரவங்கள் நிறைந்திருந்தன. அதில் மக்களின் உண்மையான அன்பு நிறைந்திருந்ததைக் காண முடிந்தது.

நாம் பாலித தெவரப்பெரும எனக் கூறினாலும் அவரது ஊரவர்களுக்கு அவர் சண்டி மஹத்தயா அல்லது சண்டிமாமாதான் அங்குகட்டப்பட்டிருந்த பெனர்கள், கட்டவுட்களில் அவர் விழிக்கப்பட்டிருந்தது அவ்வாறுதான். அவரது வீட்டில் பலர் இருந்தார்கள். அவர்களுள் ஒருவர் பெரும் சோகத்துடன் காணப்பட்டார். பாலித தெவரப்பெரும போன்று கட்டுமஸ்தான சரீரம் இல்லாத இந்த கேசவன் பாலிதவின் சகோதரன் சரத். நடந்த விபரீதத்தை நம்பமுடியாமல் இன்னும் அதிர்ச்சியில் இருந்தார் சரத். “எங்கள் தந்தை அவரை சண்டி மல்லி என்றுதான் அழைப்பார். எங்கள் வீட்டில் மொத்தம் 9 பேர். ஐந்து ஆண்கள். 04 பெண்கள் உள்ளனர். என் தம்பி இளையவன். நாம் இருவரும்தான் மிகவும் நெருக்கமாக இருந்தோம்” என கண்களில் பெருக்கெடுத்த கண்ணீரை அடக்கமுடியாது தடுமாறினார் சரத். என் சகோதரன் சிறுவயதில் இருந்தே கண்டிப்பானவன். தந்தை திட்டினாலும், அடித்தாலும் வீட்டைவிட்டு ஓடிப்போய் இரவில் மரங்களிலும் கல்லிலும் தூங்கிவிட்டு வருவான். சிறுவயதில் என்தந்தை என் சண்டிபுதா எனக்கூறியதாலேயே பின்னர் எல்லோரும் அவ்வாறே கூற ஆரம்பித்தார்கள்.

எனது தந்தைக்கு சமூக சேவையில் ஈடுபடுவதில் அதிக விருப்பம். இது குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் இருந்திருக்க வேண்டும். எனது மூத்த சகோதரன் முதலில் பிரதேச சபையில் இருந்தார். அவருக்கு உதவி செய்யவே முதலில் இளைய சகோதரர் அரசியலுக்கு வந்தார். அவருக்கு அரசியல் செய்யும் எண்ணம் இருக்கவில்லை. என் சகோதரனுக்கு ஒரு பெரிய நண்பர்கள் குழு இருந்தது. அந்த நண்பர்கள் குழுவின் தலைவராக இருந்தது இவர்தான். அது கேட்டு வாங்கப்பட்ட தலைமை அல்ல. அதுதான் அவரை அரசியலுக்கு வரச் செய்தது. என் சகோதரன் ஒரு போதும் எவரிடமும் கஷ்டங்களைக் கூறியதில்லை. அவரது மகன் மரணிக்கும் வரை அவர் ஒரு போதும் அழுததில்லை. தனது வேலைகளை அவராகவே செய்து கொள்வார்”. புது வருடத்தின் பின்னர் தனது சகோதரனுடன் பேசிக் கொள்வதற்கு சந்தர்ப்பம் சரத்திற்குக் கிடைக்கவில்லை. புது வருட தினத்தில் பாலித வீட்டில் இருக்கவில்லை. அவர் பொலன்னறுவையில் இருந்துள்ளார். 15ஆம் திகதி இரவே அவர் மீண்டும் வீடு திரும்பியுள்ளார். 16ஆம் திகதி அவர் இந்த அனர்த்தத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

“அவருக்கு அவரது மரணம் ஏற்கனவே விளங்கியிருக்க வேண்டும். தனது மரணத்தின் பின்னர் இறுதிச் சடங்கை மேற்கொள்ளும் விதம் தொடர்பில் தனது நண்பர்களிடத்தில் கூறியிருந்தார். மக்களுக்காக அவரது இதயத்தில் இருந்த இடத்தை இப்போதுதான் விளங்கிக் கொள்ள முடிந்தது. எனது சகோதரனைச் சரியாகப் புரிந்து கொள்ள அவர் மரணிக்கும் வரை காத்திருக்க வேண்டியிருந்திருக்கிறது.” எனக் கூறிய சரத் சிறு பிள்ளையைப் போல அழத் தொடங்கினார்.

மின்கம்பியில் சிக்கி துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்த தருணத்தை நேரில் பார்த்தது அவரது மூத்த சகோதரரின் பேரனான சஞ்சுல தெவரப்பெருமவாகும். 16ஆம் திகதி மழை பெய்து கொண்டிருந்து. அன்று சஞ்சுலவுடன் லொறியில் தனது தென்னந்தோட்டத்திற்குத் தேவையான உரத்தை ஏற்றி வந்திருந்தார்.

“எனது பாட்டன் என்னுடன் லொறியில் ஆங்காங்கே சென்று உரத்தைக் கொட்டினார். எம்முடன் இன்னும் இருவர் இருந்தனர். அந்த உரத்தை பாட்டனார் தனது கைகளாலேயே மரங்களுக்குப் போட வேண்டும் என்பதால் உரப் பைகளைத் தூக்கிக் கொண்டு அவருக்குப் பின்னால் சென்றேன். திடீரென பாட்டனார் அம்மா…. என சத்தமிட்டவாறு கீழே விழுந்தார். நாம் உடனே எமக்குத் தெரிந்த முதலுதவிகளைச் செய்து ஐந்து நிமிடங்களுக்குள் சந்திக்குக் கொண்டு வந்தோம். அந்நேரம் அங்கு ஓடி வந்தவர்கள் வாகனம் ஒன்றை தயார் படுத்தியிருந்தார்கள். நாம் அவரை வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்ற போது என் பாட்டனார் எம்மை விட்டுப் பிரிந்து விட்டார்” என கண்ணீருடன் கூறினார்.

நுசான் தெவரப்பெரும பாலிதவின் இரண்டாவது மகனாகும். ஒரு இளைஞனாக வாழ்க்கையில் இரண்டு துரதிர்ஷ்டவசமான அனுபவங்களை பெற்றிருந்த அவருக்கு இப்போது அவரது மூத்த சகோதரனும் இல்லை, பெரும் பலமாக இருந்த தனது தந்தையும் இல்லை. இருவரும் அகால மரணத்தைத் தழுவி அவரை விட்டு பிரிந்து விட்டனர். “எனது சகோதரனின் இழப்புக்குப் பிறகு, என் தந்தை பெரும் மன உளைச்சலில் இருந்தார். என் சகோதரனை இழந்த பிறகு, என் தந்தை முற்றிலும் மாறிவிட்டார். அப்போதுதான் என் தந்தை அழுததை நான் பார்த்தேன். அமைச்சுப் பதவி, வீடு வளவுகள், வாகனங்கள் இல்லாமல் பொறுப்புக்களின்றி இருந்த தந்தை தினமும் இரகசியமாக அழுதுகொண்டே இருந்தார்.

என் சகோதரன் மரணித்த பிறகு, நான் என் தந்தைக்கு உதவியாக வீட்டில் இருந்தேன். வீட்டில் தந்தை தனக்குத் தேவையானதை கேட்பார். தேவையானவற்றிற்கு பதில் தருவார். அது அவரது வழக்கம். நாம் அதற்குப் பழகியிருந்தோம். அன்று நானும் தோட்டத்திற்கு உரம் போடுவதற்காகச் சென்றேன். அன்று கனமழை பெய்து கொண்டிருந்ததால், அவர்கள் ஐவரும் உரப் பைகளை இறக்கும் வரைக்கும் நான் போனை பைக் சீட்டுக்கு கீழே வைத்துவிட்டு வீட்டுக்குச் சென்றேன். வீட்டிற்கு வரும் வரைக்கும் எனக்கு நிறைய அழைப்புகள் வந்திருந்தன. தந்தையை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளதாகக் கூறினார்கள். நான் உடனே வைத்தியசாலைக்குச் சென்ற போது தந்தை எம்மை விட்டுப் பிரிந்து சென்றிருந்தார். என்ன நடந்தது என்பதை என்னால் இன்னும் கற்பனை செய்து பார்க்க முடியாதுள்ளது. எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியாதுள்ளது” நுசானிடமிருந்து அதற்குமேல் வார்த்தைகள் வரவில்லை.

மரண வீட்டில் ஆங்காங்கே அமர்ந்திருந்த மக்கள் அமைதியாக அழுது கொண்டிருந்தனர். “இருக்க வேண்டிய ஒருவர் எம்மை விட்டுச் சென்று விட்டாரே…. நான் சுகயீனமுற்றிருக்கின்றேன். என்னைக் கண்டால், மாமி என அழைத்து என் சுக துக்கங்களைக் கேட்பார். புது வருடத்திற்கு எனக்கு பணம் தருவதற்கு என்னை அழைத்திருந்தார். எனக்கு கொஞ்சம் பணம் கிடைத்திருந்தது. அதனால் உங்களைச் சந்திக்க வரவில்லை என நான் கூறினேன். மாமி இப்போது பெரிய ஆளாகி விட்டீர்கள்….” என அங்கிருந்த ஒரு தாய் கூறினார்.

இன்னொரு பெண், “எங்களுக்கு இருப்பதற்கு இடமிருக்கவில்லை. நாம் வசிப்பதற்கு ஒரு காணித் துண்டை எமக்குத் தந்தது இவர்தான். அதில் வீடு கட்டி வாழ்கிறோம். எங்கள் பகுதியில் இவ்வாறான சுமார் 15 வீடுகள் உள்ளன. நாம் யாரும் இல்லாதவர்களாக இருந்த போதிலும், நமக்கென்று ஒருவர் இருக்கிறார் என்ற எண்ணம் மனதில் இருந்தது. அந்த பலம் இப்போது இல்லாமல் போயுள்ளது….’’ என்று தன் வலியைப் பகிர்ந்து கொண்டார்.

“நான் சிறியதொரு கடையை வீதியோரத்தில் அமைத்து சக்கரை விற்றுக் கொண்ருக்கின்றேன். எனது கடையை எப்போதும் எவராவது உடைத்துப் போடுவார்கள். என்னால் முடியாத போது எனது கடையை உடைப்பவர்களுக்கு என்றும் நல்லது நடக்காது என ஒருகாகித அட்டையில் எழுதி வைத்திருந்தேன். பாலித மஹத்தயா போகும் வழியில் அந்த அட்டையைப் பார்த்து வாகனத்தை நிறுத்தினார். என்ன மாமி இது என என்னிடம் வினவினார். நான் விடயத்தைக் கூறினேன். அதைக் கேட்ட அவர், இனி நான் இதனைப் பார்த்துக் கொள்கிறேன்…. இனி இப்படி நடக்காது…எனக் கூறிவிட்டுச் சென்றார். உண்மைதான். அன்றிலிருந்து எனது கடைக்கு எதுவுமே நடக்கவில்லை. இல்லாத ஏழை எளிய மக்களுக்கு அவர் உதவி செய்தது அவர்கள் தன்னுடையவர்கள் என நினைத்துத்தான்…” இவ்வாறு தொடர்ச்சியாக பலர் புலம்பத் தொடங்கினர். கட்சி பேதம், இன மத பேதம் பார்க்காது செயற்பட்ட தமது இதயங்களில் வாழும் ஒருவரின் இறுதிப் பயணத்தில் கலந்து கொள்வதற்கே அவர்கள் குவிந்திருந்தனர்.

அவர்கள் சொன்ன கதைகள் அவருடைய பாடசாலைப் பருவத்தை நோக்கிச் செல்கிறது. மூணமல்வத்தை பாலத்தில் இருந்து பஸ் ஒன்று ஆற்றில் கவிழ்ந்தது. அந்த பஸ் ஆற்றில் மிதந்தது. மக்கள் கூக்குரலிட்டார்கள். சுற்றிலும் கூடியிருந்த மக்கள் திகைத்து நிற்கின்றனர். அப்போது ஒரு இளைஞர் திடீரென தான் வந்த வாகனத்தை நிறுத்திவிட்டு ஓடி வந்து தண்ணீரில் குதித்தார். நீச்சலடித்து நீரில் மூழ்கியவர்களை ஒவ்வொருவராக கரைக்கு கொண்டு சேர்க்கத் தொடங்கினர். சுற்றி நின்றிருந்த மக்களும் அந்த இளைஞனுடன் இணைந்து மீட்புப் பணியைத் தொடங்கினர். உயிரைப் பணயம் வைத்து முதலில் நீரில் குதித்த அந்த இளைஞன் பாலித தெவரப்பெருமவாகும்.

தர்கா நகரில் இனக்கலவரம் ஏற்பட்டது. இளைஞர் குழு ஒன்று கலவரத்திற்குள் சிக்கிக் கொண்டிருந்தது. பாலித தெவரப்பெரும போத்தல் தாக்குதல்களைத் தாங்கிக் கொண்டு இரத்தம் வடியும் கரங்களுடன் அந்த இளைஞர்களை மீட்டுக் கொண்டு வைத்தியசாலைக்குச் சென்ற விதத்தை மக்கள் கூறி கேட்டிருக்கின்றேன். தன் பிள்ளைகளுக்கு புத்தகங்கள், மேசை இல்லை என்று கூறி வந்த கிராமத்து பெண் ஒருவரிடம் தனது அறையில் இருந்த மேசையை எடுத்து வந்து முச்சக்கர வண்டியில் கட்டி அனுப்பிய விதத்தை அந்தப் பெண் விபரித்தாள். மத்துகமவில் உள்ள பிரபல பாடசாலையில் சேர்த்துக் கொள்ள வேண்டிய 10 மாணவர்கள் அநியாயமாக நிராகரிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் தலையிட்டு, அந்த பிள்ளைகளுக்கு கல்வி வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த முறையையும், ஒரு பிரபல பன்னாட்டு நிறுவனத்தால் ஏற்பட்ட சுற்றாடல் மாசடைவை தலைவரின் கோரிக்கையையும் பொருட்படுத்தாமல் எவ்வாறு வெற்றிபெறச் செய்தார் என்பதைப் பற்றி மக்கள் கூறுவதைக் கேட்டுள்ளேன்.

எம். எஸ். முஸப்பிர்

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

@2025 All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division