இலங்கை நிதித்துறையின் ஸ்திரத்தன்மைக்கு ஆதரவளிப்பதாக உலக வங்கி குழுமத்தின் தனியார்துறை பிரிவான சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனத்தின் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்திய துணைத் தலைவர் Riccardo Puliti உறுதியளித்துள்ளார். அத்துடன் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வொஷிங்டனில் நடைபெற்ற சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வசந்தகால கூட்டத்தின் போது, நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மற்றும் மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க ஆகியோரை சந்தித்த போதே Riccardo Puliti இதனை தெரிவித்துள்ளார்.
தனியார் துறையின் ஈடுபாடு இலங்கையின் வளர்ச்சியை உயர்த்துவதற்கும் நெகிழ்ச்சியான எதிர்காலத்துக்கு வழி வகுப்பதற்கும் முக்கியமானதென Riccardo தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார். அத்துடன் இரு தரப்பினருக்குமிடையில் நடைபெற்ற கலந்துரையாடல் சிறந்த பரிமாற்றம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தியாவசிய இறக்குமதிகளுக்கு நிதி வசதி வழங்கும் வகையில் மூன்று தனியார் வங்கிகளினூடாக இலங்கைக்கு 400 மில்லியன் அமெரிக்க டொலர் நாணய பரிமாற்ற வசதியை வழங்க சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனம் கடந்த ஆண்டு உறுதியளித்தது.
இலங்கையின் வளர்ச்சி மற்றும் பின்னடைவுக்கான தனியார் துறை ஈடுபாட்டின் முக்கியத்துவம் பற்றிய தெளிவுபடுத்தலுக்கு நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க இதன்போது நன்றி தெரிவித்துள்ளார்.
இதேவேளை உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்கள் குழுவின் இணைத் தலைவர் என்ற வகையில், இலங்கைக்கு ஜப்பான் தொடர்ந்தும் ஆதரவளிக்கும் என ஜப்பானின் சர்வதேச விவகாரங்களுக்கான பிரதி நிதி அமைச்சர் Fujii Daijo தெரிவித்துள்ளார். ஜப்பானின் சர்வதேச விவகாரங்களுக்கான பிரதி நிதி அமைச்சருக்கும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவுக்குமிடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர் இதனை கூறியுள்ளார்.