இலங்கையில் கடந்த ஒரு வார காலத்தில் இருவரின் மரணங்கள் மக்களின் உள்ளத்தை வேதனைப்படுத்தின. மரணித்த அவ்விருவருமே பெரும்பான்மை இனத்தவராவர். ஆனாலும் இனம், மதம் போன்றவற்றையெல்லாம் கடந்து நாட்டின் அனைத்து இன மக்களுமே இவ்விருவரின் மறைவுக்காக வேதனை அடைந்தனர்.
மரணித்தவர்களில் ஒருவர் முன்னாள் இராஜாங்க அமைச்சரான பாலித்த தெவரப்பெரும ஆவார். மற்றையவர் சர்வோதய இயக்கத்தின் ஸ்தாபகத் தலைவர் கலாநிதி ஏ.ரி. ஆரியரத்ன.
இவ்விருவரும் உண்மையிலேயே இனம், மதத்துக்கு அப்பால் மக்கள் உள்ளத்தில் நீங்காத இடம்பிடித்தவர்களாவர். சுயநலம் மறந்து பொதுநலச் சேவையில் விருப்பம் கொண்டு அர்ப்பணிப்பான சமூகப்பணிகளில் ஈடுபட்டதனாலேயே இவ்விருவரும் மக்கள் மத்தியில் புகழுடன் விளங்குகின்றனர்.
அமரர் பாலித்த தெவரப்பெரும, அரசியல் செல்வாக்குமிக்க பிரமுகராக விளங்கிய போதிலும், மக்கள் பணியையே முதன்மையாகக் கருதினார். கொவிட்19 தொற்று ஊரடங்கு காலப் பகுதியில் முழு நாடுமே முடங்கிக் கிடந்த வேளையில், தனது சொந்தச் செலவில் உணவு சமைத்து தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களுக்கு பேதம் பாராமல் நேரில் சென்று வழங்கியவர் அவர்.
தமது பிரதேசத்தில் நலிவடைந்த மக்களுக்குத் துன்பம் ஏற்பட்ட வேளைகளிலெல்லாம், அந்தக் குடும்பங்களில் ஒருவனாக நின்று தோள்கொடுத்தவர் பாலித்த தெவரப்பெரும.
அவரைப் போன்றதொரு மக்கள் சேவையாளனே கலாநிதி ஏ.ரி. ஆரியரத்ன ஆவார். ‘சர்வோதயம்’ என்ற அமைப்பை ஸ்தாபித்து வடக்கு, கிழக்கு, மலையகம் உட்பட்ட பகுதிகளில் அனைத்து இன மக்களுக்கும் சேவையாற்றியவர் அவர். யுத்த காலத்தில் கலாநிதி ஆரியரத்ன ஆற்றிய சேவைகளை சிறுபான்மை மக்கள் நன்கறிவர்.
இன, மத பேதங்களெல்லாம் மனிதன் தாமாகவே ஏற்படுத்திக்கொண்ட பிரிவினைகள் ஆகும். மனிதநேயமே உலகில் உயர்ந்த பண்பு என்பதை நாட்டுக்கே புரிய வைத்துவிட்டு மறைந்துள்ளனர் இவ்விருவரும்.