- முதற்கட்டமாக சீமெந்து, கம்பிகள், பெயிண்ட் வகைகள், மின்சார வயர் வகைகளுக்கு விலை வரம்பு
- சுங்கத் திணைக்களம், நிதி அமைச்சு, நுகர்வோர் அதிகார சபை, வர்த்தக அமைச்சு இணைந்து விலைகளை தீர்மானிக்கும்
நிர்மாணத்துறைக்கு தேவையான பொருட்களை நியாயமான விலையில் மக்களுக்கு வழங்கவும் அதிக விலைக்கு அல்லது அதிக இலாபமீட்டும் நோக்குடன் அந்தப் பொருட்களை விற்பனை செய்வதைத் தடுக்கவும் விலைச்சூத்திரம் போன்ற ‘மதிப்பீட்டு விலை வரம்பை’ அறிமுகப்படுத்த வர்த்தக அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. ஆரம்பக்கட்டமாக சீமெந்து, பெயிண்ட் வகைகள், இரும்பு மற்றும் அதனோடு தொடர்புடைய பொருட்கள் மற்றும் மின்சார வயர்கள், கம்பிகள் உள்ளிட்ட துணைப் பொருட்களுக்கான மதிப்பிடப்பட்ட விலை வரம்பு அறிமுகப்படுத்தப்படும்.
இலங்கை சுங்கம், நிதி அமைச்சு, நுகர்வோர் அதிகார சபை மற்றும் வர்த்தக அமைச்சு ஆகியன இணைந்து சம்பந்தப்பட்ட பொருட்களை இறக்குமதி செய்வதற்கு செலவிடப்பட்ட பணத்தின் மொத்த செலவு, செலுத்திய இறக்குமதி வரிகள், சுங்க வரிகள் மற்றும் பிற இறக்குமதி கட்டணங்கள் மற்றும் அது வாடிக்கையாளரை சென்றடையும் விலை, இருக்க வேண்டிய விலை வரம்பு தொடர்பாக அந்த விலை வரம்பு அறிமுகப்படுத்தப்படும்.
இதனால் அதன் பின்னர் வாடிக்கையாளர் அந்தந்த பொருளின் உண்மையான விலையை அடையாளம் காண முடியும். அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு ஏற்கெனவே மதிப்பிடப்பட்ட விலைகள் வழங்கப்பட்டுள்ளன.
அதன்படி ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் விலை வரம்பு அறிமுகப்படுத்தப்படும். ஒரு விற்பனையாளர் பொருட்களுக்கு நியாயமற்ற விலையை நிர்ணயித்திருந்தால், சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர் நுகர்வோர் அதிகார சபையிடம் முறைப்பாடு செய்யலாம் அல்லது வேறு சட்ட நடவடிக்கை எடுக்கலாம்.
அதனடிப்படையில் விற்பனையாளர்கள், தொடர்புடைய பொருட்களால் அதிக இலாபம் ஈட்டுகிறார்களா? என்பது குறித்த தகவல்களை நுகர்வோர் அறிந்துகொள்ள முடியும் என்பதுடன், அது தொடர்பான மதிப்பிடப்பட்ட விலை வரம்புகள் ஊடகங்கள் மூலம் வழங்கப்படுவதுடன், இணையம் மூலமாகவும் வழங்க வசதி செய்யப்படும்.