ஒரேயொரு முறை இவ்வாழ்வை
வாழ்ந்து தீர்ப்பதற்காக
எத்தனை முறை வீழ்கிறோம்
எத்தனை முறை எழுகிறோம்
எத்தனை பருவங்களென
துளிர்த்து இலைக்கிறோம்
எத்தனை இலைகளென
பழுத்து சருகென உதிர்கிறோம்
எதிரும் புதிருமான
எத்தனை மாந்தர்களை சந்தித்து
அலட்சியமாக கடந்து செல்கிறோம்
எத்தனை நேசங்களில் துவழ்கிறோம்
எத்தனை பிரிவுகளில் தோய்கிறோம்
எத்தனை சிரிப்புகளை சொரிகிறோம்
எத்தனை கண்ணீரை காய்ச்சுகிறோம்
முலையூட்டிப் பறவைகளென
எத்தனை ஒளியை நிராகரிக்கிறோம்
மின்மினி பூச்சிகளென
எத்தனை இருளை வாசிக்கிறோம்
இரவின் குறு நிலத்தில்
எத்தனை கனவுகளை பயிரிடுகிறோம்
அதில் எத்தனை கனவுகளை
அறுவடை செய்கிறோம்
ஒரேயொரு முறை வாழ்ந்து தீர்க்கும்
இந்த அற்ப வாழ்விற்காக
எத்தனையெத்தனை
முகங்களை அணிய மாய்கிறோம்
இந்த நிரந்தரமற்ற வாழ்வு
அப்படி என்னதான் அற்புதங்களை
நமக்கு நிகழ்த்திக் காட்டுகிறதோ