ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் சார்பாக தமிழ் முற்போக்கு கூட்டணித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் போட்டியிடுவது பொருத்தமானதாக இருக்குமென, சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு க.சச்சிதானந்தன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக தற்போது பரவலாக பேசப்பட்டு வருவதால் இது தொடர்பாக அவர் காணொளியொன்றின் மூலம் கருத்து வெளியிட்ட போதே இவ்வாறு கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் எம்.பி. தகுதியானவரென நாம் கருதுகிறோம். வடக்கு, கிழக்கு மாகாணங்களை அல்லாத பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக களம் இறங்குவது பொருத்தமானதாக இருக்கும். ஆகையால் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மனோ கணேசன் எம்.பி., தமிழர் சார்பாக போட்டியிடும் பட்சத்தில் அதனை சிவசேனை அமைப்பின் சார்பில் நாம் வரவேற்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.