இத்தனை காலம் இந்தியாவைக் கடுமையாக விமர்சித்து வந்த மாலைதீவு ஜனாதிபதி முய்ஸு, திடீரென தனது குரலை மாற்றி இருக்கிறார். மாலைதீவு தற்போது எதிர்கொண்டுள்ள முக்கிய பிரச்சினைகளே இந்த மாற்றத்துக்கான காரணமெனத் தெரிகின்றது.
இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள குட்டித் தீவுகள் கூட்டம் மாலைதீவு ஆகும். இது குட்டிநாடாக இருந்தாலும் இந்தியப் பெருங்கடல் பகுதியில் முக்கியமான இடத்தில் அமைந்துள்ளது. இதனால்தான் இந்தியாவும், சீனாவும் மாலைதீவு மீது முக்கியத்துவம் செலுத்தி வருகின்றன.
கடந்த சில காலமாகவே இந்தியாவுக்கும் மாலைதீவுக்கும் இடையே மோசமான உறவு நிலவி வருகின்றது. மாலைதீவின் புதிய ஜனாதிபதியாக முகமது முய்ஸு பொறுப்பேற்றது முதல் அவர் இந்தியாவுக்கு எதிராகவே செயற்பட்டு வருகிறார்.
முகமது முய்ஸுவை பொறுத்தவரை அவர் சீன ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்டவராகவே அறியப்படுகிறார். இதன் காரணமாகவே அவர் தேர்தலில் வென்றவுடன் முதலில் சீனாவுக்குச் சென்று வந்தார். மாலைதீவு வரலாற்றில் எப்போதும் முதலில் வெல்லும் ஜனாதிபதி இந்தியாவுக்குத்தான் செல்வது வழக்கம். ஆனால், முஸ்ஸு அந்த வழக்கத்தை மாற்றி, சீனாவுக்குச் சென்று வந்தார். அது மாத்திரமன்றி, ஆயுதங்களை வாங்கவும் சீனாவுடன் முக்கிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
அதுஒருபுறமிருக்க, மாலைதீவில் தங்கியுள்ள இந்தியப் படைவீரர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டும் என்றும் அவர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். இதனால் இந்தியாவுக்கும் மாலைதீவுக்கும் இடையேயான உறவு மோசமடைந்தது.
நிலைமை அவ்வாறிருக்ைகயில், தற்போது மாலைதீவு ஜனாதிபதி தனது போக்ைக திடீரென மாற்றிக் கொண்டுள்ளார்.
உள்ளூர் ஊடகம் ஒன்றுக்குப் பேட்டி அளித்த மாலைதீவு ஜனாதிபதி முய்ஸு, தங்கள் நாட்டில் இந்தியா எண்ணிலடங்காத திட்டங்களைச் செயல்படுத்தி இருப்பதாகவும் இந்தியா தங்களுக்கு நெருங்கிய நட்பு நாடு என்றும் தெரிவித்துள்ளார்.
மாலைதீவு திடீரென இவ்வாறு குரலை மாற்றுவதற்கு என்ன காரணம் என்பது ஆராயப்பட வேண்டியதாகும். இந்தியாவிடம் பெற்றுக் கொண்ட கடன்தான் இந்த மாற்றத்துக்குக் காரணமென்று தெரியவந்துள்ளது.
இந்தியாவுக்கு இந்த வருட இறுதிக்குள் மாலைதீவு 400.9 மில்லியன் ெடாலர் கடனை திருப்பிச் செலுத்த வேண்டியுள்ளது. ஆனால், மாலைதீவில் இப்போது இருக்கும் பொருளாதார சூழலில் அந்நாட்டினால் இந்தளவுக்குத் தொகையைத் திருப்பி அளிக்க முடியாது. இந்தியாவிடம் கூடுதல் அவகாசம் கேட்பதற்காகவே மாலைதீவு தனது குரலை மாற்றிக் கொண்டுள்ளதாகத் தெரிகின்றது.
அதேநேரம் மாலைதீவு இந்தியாவிடம் வாங்கிய கடன் என்பது மிகமிகக் குறைவு. மாலைதீவு உண்மையில் சீனாவிடம்தான் மிகப்பெரிய தொகையைக் கடனாக வாங்கியுள்ளது.
மாலைதீவில் கடந்த 2018 வரை 5 ஆண்டுகள் ஜனாதிபதியாக இருந்தவர் அப்துல்லா யாமீன். இவரும் முய்ஸுவை போலவே சீன ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்டவராகவே அறியப்படுகிறார். இவர் ஜனாதிபதியாக இருந்த போது, சீனாவிடம் கடன்களை வாங்கிக் குவித்தார்.
மாலைதீவில் வளர்ச்சித் திட்டங்களுக்காக சீனாவிடம் பெருந்தொகையைக் கடன் வாங்கியதே இப்போது மாலைதீவுக்குப் பெரிய பிரச்சினையாக மாறியிருக்கிறது. மாலைதீவுக்கு மொத்தம் 3 பில்லியின் ெடாலர் வெளிநாட்டுக் கடன் இருக்கிறது. அதில் 42 வீதம் சீனாவிடம் இருந்து பெற்ற கடன் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தக் கடனும் மாலைதீவின் கழுத்தை நெரித்து வருகிறது. மாலைதீவு ஜனாதிபதியாக முய்ஸு பதவியேற்ற உடனேயே இந்தக் கடனை திருப்பிச் செலுத்துவதற்கு சீனா கூடுதல் காலஅவகாசம் அளித்தது. இருப்பினும் கடன் பிரச்சினை தீர்ந்தபாடில்லை.
இந்தக் கடன் காரணமாகவே புதிய வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்க முடியவில்லை என்று முய்ஸு கூறியிருந்தார். அந்தளவுக்கு வெளிநாட்டுக் கடன், குறிப்பாகச் சீனாவின் கடன் மாலைதீவுக்குப் பெரிய பிரச்சினையாக இருக்கிறது.
ஏற்கனவே சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட அமைப்புகள் இது தொடர்பாக மாலைதீவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே பாகிஸ்தான், இலங்கை போன்ற பல நாடுகள் இதேபோல சீனாவிடம் பெற்ற கடன்களால்தான் பெரிய சிக்கலில் அகப்பட்டன. இரு நாடுகளுமே திவால் ஆகும் நிலைக்குத் தள்ளப்பட்டன. இதை உலக நாடுகள் சீனாவின் ‘மாய வலை’ என்றே குறிப்பிடுகின்றன. அதன் பிறகு சர்வதேச நாடுகளின் உதவிக்குப் பின்னரே நிலைமை சற்று சீரடைந்தது.
இந்தப் பட்டியலில் மாலைதீவும் சேர்ந்து விடுவதற்கான அறிகுறிகளே தென்படுகின்றன.
இந்தியாவுக்கு மிகவும் அருகில் உள்ள மாலைதீவு, பூகோள ரீதியாக இந்தியாவுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. இந்தியாவைச் சூழவுள்ள நாடுகளை எல்லாம் வளைத்து இந்தியாவுக்கு நெருக்கடி கொடுக்க ஒருபக்கம் சீனா முயற்சி செய்து வரும் நிலையில், மாலைதீவு முன்னர் இந்தியாவுக்கு நெருக்கமான நாடாக இருந்து வந்தது. ஆனால், கடந்த ஆண்டு மாலைதீவு நாட்டில் நடைபெற்ற தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னரே நிலைமை சிக்கலாகியுள்ளது.
சீன ஆதரவு நிலைப்பாடு கொண்ட முய்ஸு பதவியேற்ற பிறகு, சீனாவுடன் மிக நெருக்கம் காட்டத் தொடங்கியது மாலைதீவு. இந்தச் சூழலில்தான், லட்சத்தீவில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் பிரதமர் மோடி தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட புகைப்படம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் மாலைதீவு அமைச்சர்கள் பதிவிட்டனர்.
இதனால், இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் பாதிப்பு ஏற்படும் சூழல் உருவானது. மாலைதீவில் இருந்து இந்திய இராணுவ வீரர்கள் வெளியேற வேண்டும் என்று அந்நாட்டு ஜனாதிபதி முய்ஸு உத்தரவிட்டார். இது இந்தியப் பெருங்கடல் பகுதியில் இந்தியாவுக்குப் பின்னடைவாகப் பார்க்கப்பட்டது.
மாலைதீவு இவ்வாறு இந்தியாவுக்கு எதிராக முஷ்டியை முறுக்கினாலும், இந்தியாவையே பெரிதும் அந்த நாடு நம்பியிருக்கிறது. சுற்றுலா வருவாயை பெரிதும் நம்பியிருக்கும் மாலைதீவுக்கு இந்தியர்கள் அதிக அளவு செல்கிறார்கள். இது அந்த நாட்டிற்கு கணிசமான வருவாயை கொடுக்கிறது. அதுபோக, இந்தியா ஏகப்பட்ட கடனுதவியையும் மாலைதீவுக்கு வழங்கி வந்தது. தற்போது இந்தியாவுடனான மோதலால் மாலைதீவு சீனாவுடன் அதீத நெருக்கம் காட்டியது.
தற்போது திடீரென தனது நிலைப்பாட்டை மாற்றியிருக்கும் மாலைதீவு ஜனாதிபதி முய்ஸு, இந்தியா கடன் நிவாரணம் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். அதுமட்டுமன்றி இந்தியா நெருங்கிய நட்பு நாடு எனவும் கூறியுள்ளார்.
“இந்தியா எங்களின் நெருங்கிய நட்பு நாடாக உள்ளது. அந்த நெருக்கம் தொடர்ந்து அப்படியே இருக்கும். இந்தியாவிடம் மாலைதீவு வாங்கிய கடனை திருப்பிச் செலுத்துவதற்கான காலத்தை திருத்தி அமைக்க வேண்டும். இத்தகைய கடன் நிவாரணத்தை இந்தியா அளிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. கடன் திருப்பி செலுத்தும் விவகாரத்தில் நான் இந்தியாவுடன் பேசிக்கொண்டு வருகிறேன்” என்று முய்ஸு கூறியுள்ளார்.
இது ஒருபுறமிருக்க, மாலைதீவு ஜனாதிபதி முகமது முய்ஸு பிடிவாதமாக இருப்பதை விட்டுவிட்டு, நிதிச்சவால்களை சமாளிக்க அண்டை நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி இப்ராஹிம் முகமது சோலிஹ் தெரிவித்துள்ளார்.
“நாம் பிடிவாதமாக இருப்பதை விட்டுவிட்டு பேச்சுவார்த்தை நடத்தவேண்டும். இதன் மூலம் பல நாடுகள் நமக்கு உதவி செய்யும். ஆனால் இந்த விஷயத்தில் முய்சு சமரசம் செய்ய விரும்பவில்லை.இப்போதுதான் அவர்கள் (அரசு) நிலைமையை புரிந்து கொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள். இந்த அரசாங்கம் பொதுமக்களை ஏமாற்றி வருகிறது. பொய்களை மறைக்க அமைச்சர்கள் இப்போது பொய் சொல்கிறார்கள்” என முன்னாள் ஜனாதிபதி இப்ராஹிம் முகமது சோலிஹ் தெரிவித்துள்ளார்.
எஸ்.சாரங்கன்