மட்டக்களப்பு- கல்முனை பிரதான வீதியில் ஆரையம்பதி 4ஆம் கட்டை பகுதியில் நேற்று அதிகாலை 3.30 மணியளவில் பஸ் வண்டியொன்று விபத்துக்குள்ளானதில் சாரதி, நடத்துநர் உட்பட மூவர் படுகாயமடைந்துள்ளதுடன், சில கடைகள் சேதமடைந்துள்ளன.
கொழும்பிலிருந்து அக்கரைப்பற்று நோக்கிச் சென்ற தனியார் அதிசொகுசு பஸ் வண்டியே விபத்துக்குள்ளானது.
வீதியை விட்டு விலகிச் சென்று பாலமுனை சந்தியிலுள்ள சில கடைகளை உடைத்துக் கொண்டு கடைகளுக்குள் புகுந்து இப்பஸ் விபத்துக்குள்ளானது.
இதில் காயமடைந்தவர்கள், காத்தான்குடி மற்றும் ஆரையம்பதி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சாரதியின் உறக்க களைப்பே விபத்துக்கு காரணமென, பொலிஸார் தெரிவித்தனர். விபத்து தொடர்பான விசாரணையை காத்தான்குடி போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
மட்டக்களப்பு குறூப் நிருபர்