காஸா மீதான யுத்தம் மத்தியகிழக்கில் மாத்திரமல்லாமல், உலகளாவிய பொருளாதாரத்திலும் தாக்கங்களையும் பாதிப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யா-உக்ரைன் போர் உலக பொருளாதாரத்தில் ஏற்கனவே தாக்கங்களையும் பாதிப்புகளையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், காஸா மீது இஸ்ரேல் முன்னெடுக்கும் யுத்தம் 165 நாட்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது.
காஸா மீதான யுத்தத்தை நிறுத்துமாறு கோரி யெமனின் ஹுதி கிளர்ச்சியாளர்கள் செங்கடல் ஊடான சர்வதேச கப்பல் போக்குவரத்து பாதை வழியாகப் பயணிக்கும் இஸ்ரேலுடன் சம்பந்தப்பட்ட சரக்குக் கப்பல்கள் மீது தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இது சர்வதேச பொருளாதாரத்தில் தாக்கங்கள் ஏற்பட பெரிதும் காரணமாகியுள்ளது. அதனை சர்வதேச பொருளாதார நிபுணர்களும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
காஸா மீதான யுத்தத்தை நிறுத்துமாறும், காஸாவுக்கு மனிதாபிமான உதவிகள் தங்குதடையின்றி செல்ல இடமளிக்குமாறும் கோரி ஏடன் வளைகுடா, அரபுக்கடல், பாப் அல் மண்டெப் நீரிணை, செங்கடல் ஊடான சர்வதேச கடல் போக்குவரத்து பாதை வழியாக இஸ்ரேல் செல்லும் சரக்கு கப்பல்கள் மீதும், இஸ்ரேலியருக்குச் சொந்தமான கப்பல்கள் மீதும், இஸ்ரேலுடன் சம்பந்தப்பட்ட கப்பல்கள் மீதும் ஹுதிக்கள் கடந்தாண்டு நவம்பர் 19 ஆம் திகதி முதல் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
‘காஸா மக்களுக்கு ஒத்துழைப்பு நல்கும் வகையில் முன்னெடுக்கப்பட்டு வரும் இத்தாக்குதல்களினால் இற்றைவரை (14.3.2024) 73 கப்பல்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக ஹுதிக் கிளர்ச்சிக்குழுவின் தலைவர் அப்துல் மலிக் ஹுதி குறிப்பிட்டுள்ளார்.
கடந்த நான்கு மாத காலப்பகுதிக்குள் இவ்வளவு எண்ணிக்ைக சரக்குக் கப்பல்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டிருப்பது சாதாரண விடயமல்ல. இது நிச்சயம் உலகளாவிய பொருளாதாரத்தில் தாக்கங்களையும் பாதிப்புகளையும் ஏற்படுத்தவே செய்யும்.
ஹுதிக்கள் ஆளில்லா விமானங்கள், ட்ரோன்கள், ஏவுகணைகள் போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்தி இத்தாக்குதல்களை மேற்கொள்கின்றனர். கப்பல்களை கடத்திச் செல்கின்றனர். இதனால் ஐரோப்பாவையும் இந்து சமுத்திரத்தையும் இணைக்கும் செங்கடல் ஊடான கிட்டிய சர்வதேச கப்பல் போக்குவரத்துப் பாதையில் பதற்றநிலையும் பாதுகாப்பற்ற சூழலும் ஏற்பட்டுள்ளன. அதனால் பல சரக்குக் கப்பல் போக்குவரத்து நிறுவனங்களின் கப்பல்கள் செங்கடல் ஊடான கப்பல் போக்குவரத்துப் பாதையைத் தவிர்த்துக் கொண்டுள்ளன. அந்தக் கப்பல்கள் தென்னாபிரிக்காவின் நன்நம்பிக்கை முனையை சுற்றிப் பயணிக்கத் தொடங்கியுள்ளன.
அதேநேரம் ஹுதிக்களின் இத்தாக்குதல்களால் செங்கடல், ஏடன் வளைகுடா ஊடான சர்வதேசக் கப்பல் பாதையில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பற்ற நிலையால் பல பல்தேசிய வர்த்தக நிறுவனங்கள் பொருளாதார ரீதியிலான தாக்கங்களுக்கும் முகம்கொடுத்துள்ளன. குறிப்பாக எகிப்து போன்ற பல நாடுகளின் பொருளாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. எகிப்தின் அந்நியச் செலாவணிக்கு முக்கிய பங்களிக்கும் பாதையே சுயஸ் கால்வாய். இதன் வருமானம் வீழ்ச்சி அடைந்துள்ளதோடு, சுயஸ் கால்வாய் ஊடான கப்பல் போக்குவரத்து 40 சதவீதம் சரிந்திருக்கிறது.
சுயஸ் கால்வாய் அதிகார சபையின் வருமானம் சுமார் 50 சதவீதம் குறைவடைந்துள்ளது. செங்கடலில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பற்ற நிலைமையால் சுமார் 500 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் மேற்பட்ட இழப்பை எகிப்து சந்தித்துள்ளது.
ஹூதிகளின் தாக்குதல்கள் பிராந்திய பொருளாதாரத்திலும் எகிப்தின் பொருட்கள் இறக்குமதியிலும் சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளன. அத்தோடு மக்களின் வாழ்வாதாரங்களிலும் தாக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இதன் விளைவாக செங்கடல் முதல் சூடான் வரையான பிராந்தியத்திலுள்ள சுமார் 18 மில்லியன் மக்களுக்கு அத்தியாவசிய நிவாரணப் பொருட்களை விநியோகிப்பதிலும் நெருக்கடிகள் உருவாகியுள்ளன. சில கப்பல் போக்குவரத்து நிறுவனங்களின் செலவுகள் முன்பை விட எட்டு மடங்கு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் அமெரிக்கா, ஹுதிக்களின் தாக்குதல்களைக் கட்டுப்படுத்தி செங்கடல் ஊடான சர்வதேச கப்பல் போக்குவரத்து பாதையின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு கூட்டணி அமைத்து நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. அதன்படி கடந்த ஜனவரி 11 ஆம் திகதி முதல் ஹுதிக்களின் யெமனிலுள்ள நிலைகள் மீது நீர்மூழ்கிக் கப்பல்கள், விமானந்தாங்கிக் கப்பல்கள், ஆளில்லா விமாங்கள் மூலம் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இருந்தும் கூட ஹுதிக்கள் தங்கள் தாக்குதல்களை நிறுத்தியதாக இல்லை. அமெரிக்கா தலைமையிலான கூட்டணி நாடுகளும் ஹுதிக்களின் கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசங்களில் வான்வழித்தாக்குதல்களை முன்னெடுத்து வருகின்றன. இவ்வாறான நிலையில் செங்கடல் ஊடான சரக்குக் கப்பல் போக்குவரத்துப் பாதையில் பாதுகாப்பற்ற அச்சுறுத்தல் நிலை நீடித்துவருகிறது.
அந்த வகையில் கடந்த மார்ச் 2 ஆம் திகதி ஹுதிக்களின் தாக்குதலுக்கு ‘ருபிமார்’ என்ற பெயர் கொண்ட பிரித்தானிய சரக்குக் கப்பல் இலக்கானது. பசளை மற்றும் எண்ணெயுடன் பயணித்துக் கொண்டிருந்த இக்கப்பல் ஏடன் பிராந்தியத்தில் தாக்குதலுக்கு இலக்கானதோடு கப்பலில் சேதமும் ஏற்பட்டது. அதனால் கப்பலில் எண்ணெய்க் கசிவு ஏற்பட்டதோடு, சுமார் 29 கிலோ மீற்றர்களுக்கு அது பரவவும் செய்தது. அத்தோடு 21 ஆயிரம் மெற்றிக் தொன் அமோனியா பசளையுடன் இக்கப்பல் கடலில் மூழ்கியுள்ளது. பிராந்திய கடற்பரப்பில் ஏற்படுத்தக்கூடிய சுற்றுச்சூழல் பாதிப்புக்கள் குறித்து சுற்றாடல் நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இதேவேளை கடந்த வாரம் செங்கடலில் டேங்கர் கப்பல் ஒன்றின் மீது ஹுதிக்கள் மேற்கொண்ட ஏவுகணைத் தாக்குதலினால் மூன்று மாலுமிகள் கொல்லப்பட்டுள்ளனர். இதே காலப்பகுதியில் பார்படோஸ் கொடியுடன் பயணித்த ‘ட்ரூ கொன்பிடன்ஸ்’ என்ற பெயர் கொண்ட சரக்குக் கப்பலின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் கப்பலின் பிரதம அதிகாரியும் சமையல்காரரும் கொல்லப்பட்டதோடு, மாலுமிகள் சிலர் காயமடைந்துமுள்ளனர். அவர்களில் ஒருவர் காலை இழந்துள்ளார்.
ஹுதிக்கள் கடந்த வருடம் நவம்பர் மாதம் 19 ஆம் திகதி கடத்திச் சென்ற கலெக்ஷி லீடர் என்ற கப்பலின் 25 பணியாளர்களும் இன்னும் அவர்களது பிடியிலேயே உள்ளனர்.
இவ்வாறு பாதுகாப்பற்ற அச்சுறுத்தல் மிக்க பாதையாக செங்கடல் வழி விளங்குவதால் கப்பல் பணியாளர்கள் இப்பாதை ஊடாகப் பயணிப்பதிலும் கடற்றொழிலாளர்கள் இப்பிராந்தியத்தில் கடற்றொழிலில் ஈடுபடுவது குறித்தும் அச்சம் கொண்டுள்ளனர்.
இந்த அச்சுறுத்தல் நிலையைக் கருத்தில் கொண்டு பல சரக்குக் கப்பல் நிறுவனங்கள் மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்தவும் ஆரம்பித்துள்ளன.
ஏடன் வளைகுடா, பாப் அல் மண்டெப் நீரிணை, செங்கடல் ஊடாக சர்வதேச கப்பல் போக்குவரத்துப் பாதையானது இந்து சமுத்திர சர்வதேச கப்பல் பாதையையும் ஐரோப்பியா, வட அமெரிக்கா மற்றும் வட ஆபிரிக்காவுக்கான சர்வதேச கப்பல் போக்குவரத்து பாதையையும் இணைக்கும் கிட்டிய பாதையாகும்.
இப்பாதையின் ஊடாக உலகளாவிய கப்பல் போக்குவரத்து வர்த்தகத்தில் 12 வீதம் இடம்பெற்று வந்தது. அத்தோடு நாளொன்றுக்கு 50-60 இற்கும் இடைப்பட்ட அளவில் கப்பல்கள் பயணிக்கக்கூடியதாக இருந்தன. ஹுதிக்களின் தாக்குதல்கள் காரணமாக இப்பாதை ஊடான கப்பல் போக்குவரத்தில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
அதேநேரம் செங்கடல் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பற்ற நிலையைக் கருத்தில் கொண்டு தென்னாபிரிக்காவின் நன்னம்பிக்கை முனையை சுற்றி பயணிக்கும் நிலைக்கு பெரும்பாலான சரக்குக் கப்பல்கள் உள்ளாகியுள்ளன. இதனால் இந்து சமுத்திர சர்வதேச கப்பல் போக்குவரத்துப் பாதையை தென்னாபிரிக்காவின் நன்னம்பிக்கை முனை ஊடாகப் பயணித்து ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க சர்வதேச கப்பல் போக்குவரத்து பாதையை அடைவதற்கு செங்கடல் ஊடான பாதையை விடவும் இரு வாரங்களுக்கு மேற்பட்ட காலம் கப்பல்களுக்கு எடுக்க முடியும். அதன் காரணத்தினால் கப்பல்கள் மூலம் சரக்குகள் சென்றடைவதில் தாமதங்கள் ஏற்பட்டுள்ளன.
நிலை இவ்வாறிருக்கையில், கடந்த வியாழனன்று (14.3.2024) ஹுதிக்களின் தலைவர் அப்துல் மலிக் ஹுதி, ‘இஸ்ரேலுடன் சம்பந்தப்பட்ட கப்பல்கள் ஏடன் வளைகுடா, பாப் அல் மன்டெப், செங்கடல் ஊடான சர்வதேச கப்பல் போக்குவரத்து பாதை வழியாக மாத்திரமல்லாமல் இந்து சமுத்திரத்தின் ஊடாக தென்னாபிரிக்காவின் நன்நம்பிக்கை முனையை சுற்றிப் பயணிக்கும் போதும் காஸாவுக்கு ஆதரவு நல்கும் வகையில் தாக்குதல்கள் நடாத்தப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஹுதிக்களின் இந்த அறிவிப்பு சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது. செங்கடல் வழியான போக்குவரத்துப் பாதையில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பற்ற நிலை சர்வதேச பொருளாதாரத்தில் ஏற்கனவே தாக்கத்தையும் பாதிப்புக்களையும் ஏற்படுத்தி இருக்கும் நிலையில், இந்து சமுத்திரம் ஊடாக நன்னம்பிக்கை முனையை சுற்றிப் பயணிக்கும் கப்பல்களும் தாக்கப்படுமாயின் சர்வதேச பொருளாதாரம் மேலும் பாதிக்கப்படவே வழிவகுக்கும் என சர்வதேச பொருளாதார நிபுணர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
அதனால் ஹுதிக்களும் அமெரிக்க கூட்டணி நாடுகளும் மாறிமாறி தாக்குதல்களை நடத்துவதை விடுத்து உலக மக்களதும் உலக பொருளாதாரத்தினதும் நலன்கள் குறித்து கவனம் செலுத்த வேண்டும். அதுவே உலகளாவிய மக்களின் எதிர்பார்ப்பாகும்.
மர்லின் மரிக்கார்