இலங்கை மற்றும் இந்தியாவுக்கும் இடையிலான தரைவழிப் பாதை அமைக்கும் திட்டம் தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க எதிர்வரும் 27ஆம், 28 ஆம் திகதிகளில் இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் மேற்கொண்ட இந்திய விஜயத்தின் போது, இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் செய்து கொண்ட இணக்கப்பாட்டுக்கமைய, இலங்கை – இந்திய தரைவழிப் பாதையை அமைக்கும் திட்டம் தொடர்பாக இந்திய அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் சாகல ரத்நாயக்க கலந்துரையாடவுள்ளார்.
இலங்கையின் தலைமன்னாரிலிருந்து இந்தியாவின் இராமேஸ்வரம்வரை தரைவழிப் பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதுடன், இங்கு வாகன போக்குவரத்துக்கு மேலதிகமாக ரயில் பாதை அமைக்கவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான தரைவழிப் பாதை அமைக்கும் அதேவேளை, அதற்கு இணையாக தலைமன்னாரிலிருந்து திருகோணமலை மற்றும் கொழும்புக்கு நேரடி பயணத்தை எளிதாக்கும் வகையில் நெடுஞ்சாலை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக தலைமன்னாரிலிருந்து திருகோணமலை துறைமுகம்வரை முதலாவது நெடுஞ்சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த வீதிக் கட்டமைப்பின் மூலம் இரு நாடுகளினதும் பொருளாதார அபிவிருத்தி மற்றும் வளத்தையும் உருவாக்குவதே நோக்கமாகும். இந்த உத்தேச திட்டத்துக்கான சாத்தியக்கூறு ஆய்வும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தலைமன்னாருக்கும் இராமேஸ்வரத்துக்கும் இடையிலான தூரம் 23 கிலோ மீற்றர் என்பதும் குறிப்பிடத்தக்கது.