இலங்கை புகையிரதத் திணைக்களம் ஸ்ரீலங்கா டெலிகொம் மொபிடெல் நிறுவனத்துடன் இணைந்து நடைமுறைப்படுத்தும் புகையிரதப் பயணிகள் மற்றும் அரச ஊழியர்களுக்கு புகையிரத டிக்கட்டுக்களை வழங்கும் செயற்பாடு முழுமையாக டிஜிட்டல் மயமாக்கலின் கீழ் நடைபெறவுள்ளது. இலங்கையில் முதற்தடவையாக இலத்திரனியல் டிக்கட் மற்றும் இலத்திரனியல் அனுமதிப்பத்திர முறை அறிமுகப்படுத்தும் நிகழ்வு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத் துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தனவின் தலைமையில் கொழும்பு புறக்கோட்டை புகையிரத நிலைய வளாகத்தில் அண்மையில் இடம்பெற்றது.
இந்த புதிய நடைமுறையின் கீழ், புகையிரதப் பயணிகளுக்கும், சுற்றுலாப் பயணிகளுக்கும் புதிய ஈ-டிக்கெட் முறையைப் பயன்படுத்தி ஒன்லைனில் டிக்கெட்டுகளை எளிதாக கொள்வனவு செய்வதற்கான வாய்ப்பு கிடைக்கின்றது. இதன்போது பயணிகளுக்கு ஒன்லைனில் புகையிரத டிக்கெட்டை முன்பதிவு செய்ததன் பின்னர், அவர்களுடைய தொலைபேசிக்கு அனுப்பப்படும் QR குறியீட்டைக் கொண்ட ஈ-டிக்கெட்டை பயணிகள் புகையிரத இ டிக்கெட்டாகப் பயன்படுத்த முடியும். இதனடிப்படையில், புகையிரத நிலையத்திற்குச் சென்று ஆசனங்களைப் பெற்றுக் கொள்வதில் பயணிகள் எதிர்கொண்ட பல அசௌகரியங்கள் இந்த நடைமுறையின் கீழ் தவிர்க்கப்படும்.
அத்துடன், அரச ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் புகையிரத அனுமதிப் பத்திரங்களையும் இந்த ஒன்லைன் நடைமுறையின் கீழ் இலத்திரணியல் ரயில்வே அனுமதிப்பத்திரமாக முன்பதிவு செய்யும் வாய்ப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனடிப்படையில் தமது நேரத்தையும் உழைப்பையும் மீதப்படுத்தி மெய்நிகர் நடைமுறையின் கீழ் அனுமதிச் சீட்டுக்களை பெற்றுக் கொள்ளலாம். M ticketing வசதியுடன் எந்த ஒரு புகையிரத நிலையத்திலிருந்தும் டிக்கெட்டுகளைப் பெற்றுக் கொள்வதற்காக 24 மணி நேரமும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
புதிய ஈ-டிக்கெட் நடை முறை மற்றும் இலத்திரனியல் அனுமதிப்பத்திர நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், செலவுகளைக் குறைத்துக் கொண்டு மிகுந்த வெளிப்படைத்தன்மையுடன் கூடிய நடைமுறையாக சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்நாட்டுப் பயணிகளுக்கும் வசதிகள் கிடைக்கும்.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன கூறியதாவது,
“160 வருட புகையிரத வரலாற்றில் சிறப்புமிக்க திருப்புமுனையாக முதன்முறையாக டிக்கெட் வழங்குவதையும், அரச ஊழியர்களுக்கான அனுமதிப்பத்திரங்களை வழங்குவதையும் டிஜிட்டல் மயமாக்குவது ஒரு தனித்துவமான தருணமாகும். பாரிய பல சவால்களை வெற்றி கொண்டு இந்த இலக்கை எட்டியது தனிச் சாதனையாகும்.
பல மணிநேரங்கள் புகையிரத அனுமதிச்சீட்டுக்களைப் பெற்றுக் கொள்வதற்காக செலவிட்ட கடந்த காலங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து தமது கையடக்கத் தொலைபேசியில் புகையிரத பயணச் சீட்டுக்களையும், ஆசனங்களையும் ஒதுக்கிக் கொள்வதற்காக வசதியை வழங்கும் முதலாவது சந்தர்ப்பமாக இது வரலாற்றில் இடம் பிடிக்கும்.
அரசுக்கு வருமானத்தைப் பெற்றுத் தரும் பிரதான நிறுவனங்கள் சில உள்ளன.
உள்நாட்டு இறைவரித் திணைக்களம்
சுங்கத் திணைக்களம்
கலால் வரித் திணைக்களம்
மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் திணைக்களம்
அவ்வாறான வருமானத்தை அரசாங்கத்திற்கு வழங்க வேண்டியிருந்தாலும், வழங்காத நிறுவனமாக புகையிரதத் திணைக்களத்தைக் குறிப்பிட முடியும்.
இந்த அனைத்து திணைக்களங்களிலிருந்தும் கிடைக்கும் வருமானம் போதாததன் காரணத்தினால் வரலாறு நெடுகிலும் அசாதாரணமான வகையில் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கடன்களைப் பெற்றே ஒவ்வொரு அரசாங்கங்களும் முன்னெடுத்துச் செல்லப்பட்டிருக்கின்றன.
அது எந்தளவுக்கு மோசமான நிலைக்கு உள்ளாகியிருக்கின்றது என்றால், 2023ஆம் ஆண்டில் அனைத்து வருவாய் ஈட்டும் துறைகளிலிருந்து திறைசேரிக்குக் கிடைத்திருப்பது மூன்று ட்ரிலியன் ரூபாய் மாத்திரமேயாகும். அந்த ஆண்டில், அரசு ஊழியர் சம்பளம், ஓய்வூதியம், சமுர்த்தி – அஸ்வெசும உள்ளிட்ட நலன்புரி நிவாரணங்கள், வட்டி செலுத்தல், சில கடன்களைத் திரும்பச் செலுத்தல் போன்ற கொடுப்பனவுகளுக்காக 13 ட்ரிலியன் ரூபாய் திறைசேரியிலிருந்து வெளியே சென்றுள்ளது. இதனடிப்படையில் 10 ட்ரிலியன் ரூபாய் அந்த வருடத்தில் கடனாகப் பெறப்பட்டுள்ளது. இந்த நிலையினை அரசியல் இலாபத்தைப் பெற்றுக் கொள்ள முயற்சிக்கும் தரப்பினர் ஏற்றுக் கொள்வதில்லை. இந்த நிலைக்கு மத்தியில் தற்போது செலுத்த முடியாதுள்ள கடன் தொகையினைச் செலுத்துவது என ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ள இணக்கப்பாட்டிற்கு அமைய இந்நாட்களில் சர்வதேச நாணய நிதியத்தின் நிபுணர்களுடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
அந்தப் பேச்சுவார்த்தைகளின் ஒரு முக்கிய விடயம் அரச வருமானத்தை அதிகரித்துக் கொள்வதாகும்.
சுங்கத் திணைக்களம், உள்நாட்டு இறைவரித் திணைக்களம், கலால் வரி திணைக்களம், மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் திணைக்களம், புகையிரதத் திணைக்களம் போன்ற நிறுவனங்களை முழுமையாக டிஜிட்டல் மயமாக்குவதன் மூலம் தற்போது திறைசேரிக்கு கிடைக்கும் மூன்று ட்ரிலியன் ரூபாவை குறைந்தது ஐந்து ட்ரிலியன் ரூபாயாக அதிகரிக்க முடியும் என நான் உறுதியாக நம்புகிறேன்.
அவ்வாறு நடந்தால், அரச வரவு செலவுத் திட்டத்தின் முதன்மைக் கணக்கில் மேலதிகத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம். தொடர் செலவுகளை விட வருமானத்தைப் பெற்றுக் கொள்ள முடியும். கடன் சுமையைக் குறைத்துக் கொள்ள முடியும்.
நான் இந்த அமைச்சின் பொறுப்பை ஏற்ற நாள் முதல், புகையிரதம் மற்றும் இ.போ.சபை உள்ளிட்ட பொதுப் போக்குவரத்துச் சேவைகளின் டிக்கெட்டுகளை ஈ-டிக்கெட் முறையில் மாற்றுவதற்கு பெரும் முயற்சி எடுத்தேன். குறிப்பாக, இலங்கை போக்குவரத்துச் சபையின் பயணச்சீட்டுக்களை வழங்குவதில் இடம்பெறும் மோசடிகளினால் நாளாந்தம் ஒரு கோடி ரூபாவுக்கும் அதிகமான நட்டம் ஏற்படுகிறது.
இந்த செயல்முறையை டிஜிட்டல் மயமாக்குவதற்கு அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டது, அமைச்சரவை பல்வேறு குழுக்களுக்கு அவற்றை அனுப்பியது, குழுக்கள் கூடி கொள்முதல் நடவடிக்கைகளை நடத்தியது, எனினும் எந்த வெற்றிகரமான முடிவும் எட்டப்படவில்லை. இதன் காரணமாக, இந்தத் துறை தொடர்பில், தனியார் துறையிலும் உயர் அனுபவத்தைக் கொண்ட அதிகாரியான பொறியியலாளர் ரஞ்சித் ரூபசிங்க, அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
அதன்படி, புதிய செயலாளர் உள்ளிட்ட புகையிரதத் திணைக்கள அதிகாரிகள் உட்பட அனைத்து தரப்பினரின் பங்களிப்புடன், ஒருபோதும் சாத்தியமில்லை என நினைத்த இப்பணியை நடைமுறைச் சாத்தியமிக்க பணியாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு தேவையான மாற்றங்களைச் செய்தால், பிரச்சினைகளை வெறுப்புடன் பார்க்காமல், நவீன உலகில் காணப்படும் தீர்வுகளை பரிசோதிப்பதின் ஊடாக நாட்டை வெற்றிபெறச் செய்வதற்கான வாய்ப்புள்ளது. முடிந்தவரை நாட்டின் உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.தொழில்நுட்பம், மனித மூலதனம் மற்றும் முகாமைத்துவம் என்பவற்றின் மூலம் செயல்திறனை உருவாக்க முடியும். இம்முறைகளை அரச நிறுவனங்களில் முறையாக நடைமுறைப்படுத்துவதன் மூலம் நாட்டை முன்னேற்றும் வாய்ப்பு உள்ளது.
அதனடிப்படையில் பயணித்து புகையிரதத் திணைக்களத்திற்குச் சொந்தமான சொத்துக்களை “ஸ்டேஷன் பிளாசா எண்ணக்கருவின்” கீழ் புதிய நடைமுறைகளுக்கு அமைவாக முகாமைத்துவம் செய்யும் விசேட வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
புகையிரத திணைக்களத்திற்கு சொந்தமான எந்தவொரு நிலத்தையும் தனியார் மயமாக்காமல், பயன்படுத்தப்படாத சொத்துக்களை நீண்டகால குத்தகை அடிப்படையில் பயனுள்ள முதலீடுகளுக்காக வழங்குதல் என்பனவற்றின் மூலம் உலகின் பல நாடுகளில் பின்பற்றப்படும் மேம்பட்ட நடைமுறையை கைக்ெகாள்ள நடவடிக்கை எடுத்துள்ளோம். இந்தச் செயற்பாட்டின் மூலம், புகையிரதத்துக்கு கிடைக்கும் வருமானத்தை பெருமளவில் அதிகரித்துக் கொள்ளும் வாய்ப்புள்ளது. இந்த நோக்கில் கொழும்பை மையப்படுத்திய புகையிரத வர்த்தக அலுவலகம் கொழும்புக்கு வெளியிலுள்ள பிரதேசங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு செயற்படுவதன் மூலம் நாட்டின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.
போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் ரஞ்சித் கங்கநாத் ரூபசிங்க, பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன, மின்வலு மற்றும் வலுசக்தி அமைச்சின் செயலாளர் சுலக்ஷன ஜயவர்தன, சுற்றுலா மற்றும் காணி அமைச்சின் செயலாளர் எச். எம்.பி. பி.ஹேரத், ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜனக அபேசிங்க, மொபிடெல் பிரதம செயற்பாட்டு அதிகாரி சுதர்சன் கிகனகே, புகையிரதப் பொது முகாமையாளர் எச். எம். கே. டபிள்யூ. பண்டார உள்ளிட்ட பெருமளவிலானோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.
எம். எஸ். முஸப்பிர்