- பிரதமர் பதவியை ஏற்குமாறு நான் விடுத்த கோரிக்கையை அச்சமின்றி ஏற்றுக்கொண்டவர் ரணில் மட்டுமே
- பிரதமர் பதவியை ஏற்குமாறு நான் வேண்டுகோள் விடுத்த போது, சஜித் முடியாது என்றார்
- பிரதமர் பதவி குறித்து பொன்சேகாவிடம் கூறியபோது பகிரங்கமாக அறிவிக்க வேண்டுமென்றார்
- கோட்டாபய தனது ‘The Conspiracy’ என்ற புத்தகத்தில் அனைத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்
நாட்டில் சட்டம், ஒழுங்கை நிலைநாட்டக்கூடிய ஒரே தலைவர் ரணில் விக்கிரமசிங்க என்பதை நன்கு உணர்ந்த பின்னரே அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஜனாதிபதி பதவியை வழங்குவதற்கு தான் தீர்மானித்ததாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எழுதியுள்ள ‘ ‘The Conspiracy’ என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் பதவியை ஏற்குமாறு தான் விடுத்த அழைப்பை ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க மட்டுமே அச்சமோ தயக்கமோ இன்றி ஏற்றுக்கொண்டதாக கோட்டாபய ராஜபக்ஷ தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாசவிடம் பிரதமர் பதவியை ஏற்குமாறு விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக ‘The Conspiracy’ என்ற புத்தகத்தின் 163ஆவது பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை பிரதமர் பதவியை ஏற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்ட போது, அது தொடர்பில் பகிரங்கமாக அறிவிக்குமாறும் தனக்கு வழங்கப்பட்ட பதவியை உடனடியாக தான ஏற்பதில்லை எனவும் அவர் குறிப்பிட்டதாக கோட்டாபய ராஜபக்ஷ அவரது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் புத்தகத்தில் மேலும் குறிப்பிடுகையில், இந்த குழப்பங்களுக்கு மத்தியில் நாட்டில் ஆட்சி மாற்றமொன்று தேவை என்ற கோரிக்கை வலுவடைவதற்கு அமைய பிரதமர் பதவிக்கு எதிர்க்கட்சி எம்.பி ஒருவரை நியமிக்க வேண்டிய தேவை ஏற்பட்டது.
எனவே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை அழைத்து பிரதமர் பதவியை ஏற்குமாறு கேட்டுக்கொண்டேன். பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாமல் நாட்டை ஆட்சி செய்ய முடியாதெனக் கூறி அந்த கோரிக்கையை அவர் நிராகரித்தார்.
அதன் பின்னர் சரத் பொன்சேகாவுடன் பேசி பிரதமர் பதவியை ஏற்குமாறு அழைப்பு விடுத்தேன். தாம் பிரதமராக பதவியேற்பதை பகிரங்கமாக அறிவித்துவிட்டு முன்னெடுப்புகளை அங்கிருந்து தொடரலாமென்றார்.
அவருக்கு வழங்கப்பட்ட பதவியை அவர் உடனடியாக ஏற்கவில்லை. (முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எழுதியுள்ள ‘’The Conspiracy’ புத்தகம் தொடர்பான சிறப்புக் கட்டுரை 02ஆம் பக்கதில் பிரசுரமாகியுள்ளது.)