- தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நடவடிக்கை
- சட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படுமென ஆணைக்குழு தலைவர் சசி வெல்கம தெரிவிப்பு
பாடசாலை மாணவர்களுக்காக போக்குவரத்துச் சேவையில் ஈடுபடுத்தப்படும் வேன்கள் மற்றும் முச்சக்கரவண்டிகள் உட்பட அனைத்து வகை வாகனங்களுக்குமான கட்டணத்தை இனி அரசாங்கமே தீர்மானிக்கும்.
இதனை அரசாங்கத்தின் மூலம் மேற்கொள்வதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான சட்டமூலம் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவால் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுத் தலைவர் சசி வெல்கம தெரிவித்தார்.
இந்த செயற்றிட்டத்தின் கீழ் அலுவலக போக்குவரத்துச் சேவை, கெப் சேவை உட்பட வாடகைக்கு அமர்த்தப்படும் வாகனங்களும் ஒழுங்குபடுத்தப்படவுள்ளன. இதற்கமைய அனைத்து வாகனங்களுக்கான கட்டணமும் பயணிகள் பஸ் போக்குவரத்துச் சேவை கட்டண சுழற்சிக்கு உட்பட்டதாகவே மேற்கொள்ளப்படவுள்ளன.
அதற்கு இதுவரை நடைமுறையிலுள்ள 1991ஆம் ஆண்டு 37ஆம் இலக்க சட்டம், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவால் திருத்தத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் உத்தேச சட்டத்தை விரைவில் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமென்றும், அவர் தெரிவித்தார்.
நடைமுறைப்படுத்தப்படவுள்ள உத்தேச சட்டத்தின்படி அனைத்து பயணிகள் போக்குவரத்துச் சேவைக்கான கட்டணத்தை தீர்மானித்தல், உரிய கொள்கைகளை தயாரித்தல், அனைத்து வகை வாகனங்களுக்குமான வீதிகள் தொடர்பாக தீர்மானம் மேற்கொள்ளுதல் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் மூலமே நடத்தப்படுமென்றும், அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் போக்குவரத்து அமைச்சு, வர்த்தக அமைச்சு, நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை ,மோட்டார் போக்குவரத்து திணைக்களம், பொலிஸ் திணைக்களம் உள்ளிட்ட அரச நிறுவனங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட போக்குவரத்துச் சேவை வழங்கும் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுமென்றும், அவர் தெரிவித்தார். தேசிய போக்குவரத்து ஆணைக்குழு சட்டத்தின் திருத்தங்களை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதன்படி, மாகாண மட்டத்தில் உப ஒழுங்குபடுத்தலும் மேற்கொள்ளப்படவுள்ளன.
மேற்படி சட்டத்தை விரைவாக நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் அது தொடர்பாக பல கட்டப் பேச்சுவார்த்தைகள் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அந்த பேச்சுவார்த்தைகள் சாத்தியமானதாக நடைபெற்றதாகவும், அவர் தெரிவித்தார்.
அதேவேளை, பயணிகள் போக்குவரத்து சேவை தொடர்பாக போக்குவரத்து மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தனவால் அந்தச் சட்டத்தை விரைவில் நடைமுறைப்படுத்துவதற்கும் பயணிகள் போக்குவரத்துச் சேவையை முறைப்படி முன்னெடுத்துச் செல்வது தொடர்பாகவும் உரிய பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.
அந்த வகையில் எதிர்வரும் சில மாதங்களில் இந்த ஒழுங்குபடுத்தல் நடைமுறைக்கு வரவுள்ளது.
பயணிகள் போக்குவரத்துச் சேவைக்கான கட்டணம் அறவிடுதல் உள்ளிட்ட அனைத்து நலன்புரி விடயங்களுக்குமான கொள்கைகளுக்கிணங்க அது நடைபெறுமென்பதுடன், முச்சக்கரவண்டிகளுக்கு மீற்றர் பொருத்துவதும் அதன் மூலம் மேற்கொள்ளப்படுமென்றும், அவர் தெரிவித்தார்.
லோரன்ஸ் செல்வநாயகம்