இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் தொப்புள்கொடி உறவுகள் இருப்பதாகக் கூறப்பட்டு வந்தாலும், ஒரு விடயத்தில் அதாவது மீன்பிடி விவகாரத்தில் இரு நாட்டுக்கும் இடையிலான முரண்பாட்டை இன்னுமே தீர்க்க முடியாதுள்ளது.
இந்த விவகாரம் இராஜதந்திர ரீதியில் அணுகப்பட வேண்டியதாக இருந்தாலும், இதில் நேரடியாகப் பாதிக்கப்பட்டிருப்பது என்னவோ இரு நாட்டையும் சேர்ந்த மீனவர்களேயாவர். இதற்குத் தீர்வு காணப்பது பற்றி இராஜதந்திர மட்டத்தில் அவ்வப்போது பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படுவதும் பின்னர் அவை கைவிடப்படுவதுமாக இருந்தாலும், மீன்பிடியை வாழ்வாதாரமாக நம்பியிருக்கும் ஆயிரக்கணக்கான மீனவர்கள் நேரடியாகப் பாதிக்கப்படுகின்றனர்.
மீனவர் விவகாரம் அவ்வப்போது சூடுபிடிப்பதும் பின்னர் அப்படியே தணிந்து போவதும் மாறி மாறி ஏற்படும் நிகழ்வுகளாகியுள்ளன.
இந்த நிலையில், மீனவர் விவகாரம் அதாவது இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய சட்டவிரோத மீன்பிடிக்கு எதிர்ப்புத் தெரிவித்து வடபகுதி மீனவர்கள் யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம் செய்த அதேநேரம், இலங்கைக் கடற்படையினரால் தமது மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழக மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
எல்லை மீறும் இந்திய இழுவைப் படகுகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்காவிடின் கடலில் அசம்பாவிதங்கள் இடம்பெறுவதை தடுக்க முடியாமல் போகும் என இலங்கை தமிழ் கடற்றொழிலாளர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்திய மீனவர்களின் அத்துமீறலை எதிர்த்து ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணி யாழ்ப்பாணம் மருதடி சந்தி வீதியில் ஆரம்பமாகி யாழ்ப்பாணத்தில் உள்ள துணை உயர்ஸ்தானிகர் அலுவலகம் வரை இடம்பெற்றது. ‘இந்திய அரசே எமது கடல் வளத்தை சூறையாடாதே எம்மையும் வாழ விடு’ உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாதைகளைத் தாங்கியவாறு பேரணி இடம்பெற்றது.
கண்டனப் பேரணியில் ஈடுபட்டவர்கள் தொடர்ந்தும் முன்னோக்கிச் செல்ல பொலிஸார் தடைகளை ஏற்படுத்தியதுடன், பிரதிநிதிகள் சிலர் சென்று துணை உயர்ஸ்தானிகரைச் சந்தித்தனர். இந்திய கடற்றொழிலாளர்கள் இலங்கையின் வடக்கு கடலில் மீன்பிடியில் ஈடுபடுவதைத் தடுத்து, வடக்கு தமிழ் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றுமாறு கோரிக்கை விடுத்ததாக யாழ்ப்பாணம் மாவட்ட கடற்றொழிலாளர் சமாசங்களின் சம்மேளன உபதலைவர் அந்தோனிப்பிள்ளை பிரான்சிஸ் ரட்ணகுமார் குறிப்பிட்டார்.
‘இந்திய இழுவைப் படகுகளால் சாகும் நிலைக்கு வந்துள்ளோம். இது தொடர்ந்தும் போராட்டமாகத்தான் மாறப்போகிறது. எனவே ஒரு சில நாட்களில் முடிவு தரவேண்டும். தராத பட்சத்தில் தொடர் போராட்டம் ஒன்று நடக்கும். கடலில் அசம்பாவிதங்களும் நடக்கும்’ என அவர் எச்சரித்திருந்தார்.
இந்திய துணை உயர்ஸ்தானிகரிடம் தமது பிரச்சினைகளைத் தெளிவுபடுத்திய கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள், கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் கையளித்தனர். அத்துமீறி, நுழையும் இந்திய மீனவர்களைக் கட்டுப்படுத்தும் விடயத்தில் கடற்படையினர் அசமந்தப் போக்கில் இருப்பதாகவும் கடற்றொழிலாளர் சங்கத் தலைவர் அதிருப்தி வெளியிட்டார்.
கைதுகள் தொடரப்பட வேண்டும். அவ்வாறு செய்வதன் ஊடாகவே அத்துமீறுபவர்களின் எண்ணிக்கையைக் குறைக்க முடியும் என்பது அவருடைய கருத்தாக இருந்தது.
அத்துமீறி நுழையும் இந்திய மீனவர்கள் வடமாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் இலங்கைக் கரைக்கு மிகவும் அருகில் வந்து மீன்பிடியில் ஈடுபடுவதாக மீனவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். அது மாத்திரமன்றி பெரும் எண்ணிக்கையிலான படகுகள் ஒரே நேரத்தில் அத்துமீறி நுழைவதால் இலங்கை மீனவர்களின் வலைகள் பல சேதமாக்கப்பட்டுச் செல்வதாகவும், இதனால் பல்வேறு பொருளாதார இழப்புக்கள் ஏற்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக வடபகுதி மீனவர்களைப் பொறுத்தவரையில் 2009ஆம் ஆண்டு வரை யுத்தம் காரணமாக கடற்றொழிலுக்குப் பெருமளவு செல்ல முடியாத சூழல் இருந்தது. இதன் பின்னர் படிப்படியாக தமது வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்பத் தொடங்கிய அவர்கள், தொடர்ந்தும் இடம்பெறும் அத்துமீறிய இந்திய மீன்பிடிப் படகுகளால் அதிகம் பாதிப்புக்களைச் சந்தித்துள்ளனர். இது மாத்திரமன்றி கொரோனா தொற்று, அதன் பின்னரான பொருளாதார நெருக்கடிகளால் பல்வேறு இன்னல்களைச் சந்தித்துள்ள மீனவர்கள், இதுபோன்ற இந்திய மீனவர்களின் அத்துமீறல்களால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எல்லைதாண்டி நுழையும் மீனவர்களைக் கடற்படையினர் கைதுசெய்து வருகின்றபோதும், மேலிடத்திலிருந்து அவர்களுக்கு உறுதியான கட்டளைகள் வழங்கப்படுகின்றதா என்ற கேள்வியும் காணப்படுகிறது. இவ்விவகாரம் இராஜதந்திர ரீதியில் பிரச்சினையை உருவாக்கலாம் என்பதால் அரசாங்கத்தின் அரசியல் தரப்பிலிருந்த உறுதியான கட்டளைகள் கடற்படையினருக்குப் பிறப்பிக்கப்படுகின்றனவா என்பதும் பிரச்சினைக்குரியதே.
உண்மையிலேயே எல்லைதாண்டிய இந்திய மீனவர்களின் செயற்பாடுகள் கடற்றொழிலை வாழ்வாதாரமாக நம்பியிருக்கும் ஆயிரக்கணக்கான மீனவர்களின் பிரச்சினையே தவிர, கடற்படையினருக்கு எதிரான பிரச்சினை அல்ல என்ற களயதார்த்தம் உண்மையில் தமிழகத்தில் உள்ளவர்களுக்குப் புரிய வைக்கப்பட வேண்டும். இலங்கை இக்கட்டான சூழ்நிலைகளில் இருக்கும்போது ஓடோடி வந்து உதவிக்கரம் நீட்டும் நாடு இந்தியா என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. இருந்தபோதும் அந்நாட்டைச் சேர்ந்த மீனவர்களின் இந்தச் செயற்பாடு இலங்கையின் அப்பாவி மீனவர்களையே பாதிக்கிறது.
இலங்கை மீனவர்களின் கவலைகள் இவ்விதமிருக்க, இலங்கைக் கடற்படையினரால் தமது மீனவர்கள் கைதுசெய்யப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழக மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்தனர். இராமேஸ்வரம் மீனவர்கள் கடந்த 3 நாட்களாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதுடன், இந்தப் போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படுவதாகவும், இதற்கு நீதி கிடைக்கவில்லையென்றும் கூறியே அவர்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு தமிழக முதலமைச்சருக்கும் கடிதங்கள் எழுதப்பட்டிருந்தன. இதனிடையே தமிழ்நாட்டு மீனவர்கள் இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரைச் சந்தித்துக் கலந்துரையாடினர்.
தமிழக மீனவர்களைப் பொறுத்த வரையில் ‘பொட்டம் ட்ரோலிங்’ முறையில் மேற்கொண்ட மீன்பிடி காரணமாக அவர்களின் கடல் வளம் அழிவடைந்துள்ளது. இவ்வாறான நிலையில் எல்லைதாண்டிய மீன்பிடி விவகாரம் குறித்து நல்லாட்சி அரசாங்கத்தில் நடைபெற்ற இருதரப்புப் பேச்சுவார்த்தைகளில் மீனவர்களுக்கு மாற்று மீன்பிடி முறையை அறிமுகப்படுத்துவது மற்றும் அதற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது தொடர்பில் கருத்தாடல்கள் இடம்பெற்றன.
இந்திய மீனவர்கள் பெரும் எண்ணிக்கையிலான படகுகளில் இலங்கை கடற்பரப்புக்குள் நுழைவது தொடர்பில் செய்மதிகள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இந்திய மத்திய அரசுக்குக் காண்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து இவ்விடயத்தில் தமது தரப்பில் தவறு இருப்பதை ஓரளவுக்கு ஏற்றுக்கொண்டிருந்தார்கள்.
அது மாத்திரமன்றி, இலங்கை இந்திய மீனவர் விவகாரம் என்பது இந்தியாவின் தேர்தல் காலத்தில் பயன்படுத்தப்படும் ஒரு துரும்புச் சீட்டாக அமைந்திருப்பதையும் கடந்த காலங்களில் காணமுடிந்தது. இந்தியாவுக்கான பொதுத் தேர்தல் எதிர்வரும் மாதங்களில் நடைபெறவிருப்பதால் மீனவர்கள் விவகாரம் தற்பொழுது அரசியல் அரங்கத்தில் அதிகம் பேசப்படுகிறது. இதனை மீனவ சமூகத்தின் வாழ்வாதாரப் பிரச்சினையாக எடுத்துக்கொண்டு இதற்கு நிரந்தர தீர்வை வழங்க இரு நாடுகளும் முன்வர வேண்டும்.
பி.ஹர்ஷன்