Home » அனைத்து வீட்டுப் பாவனையாளரின் மின் கட்டணம் 18% ஐ விட குறையும்
PUCSL இடம் மின்சார சபை யோசனை சமர்ப்பிப்பு

அனைத்து வீட்டுப் பாவனையாளரின் மின் கட்டணம் 18% ஐ விட குறையும்

by Damith Pushpika
February 25, 2024 7:20 am 0 comment
  • ரூ. 5,000 ஆக இருந்த பட்டியலில் இனி 4,000 ரூபாவாகும்
  • மத வழிபாட்டுத் தலங்கள் 18%, கைத்தொழிற்சாலைகள், ஹோட்டல்கள் 12%, அரச நிறுவனங்கள், திணைக்களங்கள் 24 வீதத்தாலும் குறையும்

அனைத்து வீட்டுப் பாவனையாளருக்கான மின்சாரக் கட்டணம் 18 வீதத்தை விட குறைக்கப்படுமென்று மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

கடந்த 2023 ஒக்டோபர் மாத மின் கட்டணப் பட்டியலுள்ள அல்லது அதற்கு குறைவான மின் கட்டணத்தை நுகர்வோருக்கு பெற்றுக்கொடுப்பதற்கான யோசனையை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் தற்போது சமர்ப்பித்துள்ளதாகவும், அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

இதற்கமைய 5,000 ரூபா மின்சார கட்டணத்தை பெற்ற வீட்டு வாடிக்கையாளருக்கு அந்தக் கட்டணம் சுமார் 4,000 ரூபாவரை குறைக்கப்படுமென தெரிவிக்கப்படுகிறது. மின் கட்டணத்தை முடிந்தளவு குறைப்பதற்கு பல்வேறு தரப்பினருடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டதுடன், பலர் சாதகமான யோசனைகளை முன்வைத்தனர். இதற்கமையவே கடந்த ஒக்டோபர் மாதம் அதிகரிக்கப்பட்ட மின் கட்டணத்தை முழுமையாக இரத்துச் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வீட்டு மற்றும் மத வழிபாட்டுத் தலங்களின் மின் கட்டணம் 18 சதவீதத்தாலும் கைத்தொழிற்சாலைகள், ஹோட்டல்களுக்கான மின் கட்டணம் 12 சதவீதத்தாலும், அரச நிறுவனங்கள் மற்றும் திணைக்களங்களுக்கான மின் கட்டணம் 24 சதவீதத்தாலும் குறைக்கப்படுமென்றார். மின்சாரக் கட்டணம் அதிகரித்துள்ளதை நாம் ஏற்றுக்கொள்கிறோம். மின் உற்பத்தியின் செலவை முகாமைத்துவம் செய்யும் வகையில் மின் கட்டணம் திருத்தம் செய்யப்பட்டதாலேயே மின் விநியோகம் தற்போது சீராக முன்னெடுக்கப்படுவதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். வரட்சியை எதிர்நோக்கிய கடந்த ஒக்டோபர் மாதத்தில் மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டது. எனினும் அதிஷ்டவசமாக கடந்த ஒக்டோபர், நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் அதிகளவான மழை வீழ்ச்சி கிடைத்தது. அதனால் நீர் மின்னுற்பத்தியின் வீதம் அதிகரித்தது. இதன் பின்னணியிலேயே மின் கட்டணத்தை குறைக்க வேண்டுமென்ற தீர்மானம் கடந்த டிசம்பர் மாதம் எடுக்கப்பட்டது.

இந்நிலையில் மின் கட்டணத்தை 03 சதவீதத்தால் குறைக்க முடியுமென ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டது. டொலருக்கு இணையாக ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு, நீர் மின்னுற்பத்தி அதிகரிப்பு ஆகிய சாதகமான காரணங்களால் மின் கட்டணத்தை மேலும் குறைக்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினர். இதன் பயனை நாட்டு மக்களுக்கு முழுமையாக வழங்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

2023ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் வளிமண்டலவியல் திணைக்களம், நீர் முகாமைத்துவக் குழு மற்றும் ஏனைய நிறுவனங்கள் வரவிருக்கும் வரட்சி தொடர்பில் முன்வைக்கப்பட்ட கணிப்புகளின் அடிப்படையில் குறைந்த நீரைப் பயன்படுத்துமாறு பணிப்புரை வழங்கியதாகத் தெரிவித்தார். நீர்மின்சார உற்பத்தி குறைந்ததால், வீடுகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களின் மின் கட்டணம் ஒக்டோபர் முதல் 18 வீதமாகவும், தொழிற்சாலைகள் மற்றும் ஹோட்டல்களின் மின் கட்டணம் 12 வீதமாகவும் உயர்த்தப்பட்டது.

அரசு நிறுவனங்கள் மற்றும் அரச கட்டடங்கள் 24 சதவீதம் அதிகரிக்க வேண்டும். ஆனால் கடந்த ஒக்டோபர் மாதம் முதல் ஜனவரி மாதம்வரை கடந்த 05 ஆண்டுகளில் பெய்யாதளவு மழை வீழ்ச்சி கிடைத்ததால் நீர் மின் உற்பத்தி எளிமையாக இருந்ததால் மின் கட்டணத்தை 3% குறைக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார். எவ்வாறாயினும் சம்பந்தப்பட்ட தரப்பினரை அழைத்து மின்சாரக் கட்டணத்தை மேலும் குறைக்கக்கூடிய பகுதிகளை ஆராய்ந்து மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதியும் அமைச்சரவையும் பணிப்புரை வழங்கியது. கடந்த 15ஆம் திகதி இது தொடர்பாக மீண்டுமொரு கலந்துரையாடல் இடம்பெற்று அதன்படி, தேவையான கட்டணங்களைக் குறைப்பது தொடர்பான திருத்தங்கள் குறித்து ஆராயப்பட்டு, குறைப்புக்கான பரிந்துரைகள் பெப்ரவரி 22ஆம் திகதி பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். மின்சார சபை மறுசீரமைக்கப்பட வேண்டுமென்ற நிலைப்பாட்டில் மக்கள் உள்ளனர். அதற்கிணங்க உத்தேச மின்சார சபை மறுசீரமைப்பு சட்டமூலம் எதிர்வரும் மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுமென்றும் அவர் மேலும் தெரிவித்தார்

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

@2025 All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division