இதயங்களின்
பரிமாற்றத்தில்
இன்னல்கள்
தோன்றிடினும்
உதயங்களை
இலக்காக்கி
உண்மையாய் வென்றிட
வேண்டுமென்ற
காதலர் கனவும்
புத்திர பாக்கியம் தொலைந்து
குத்திடும் வார்த்தையால்
மனம் வெந்து – நல்
சித்திரம்போல் சிசுவொன்றை
சீக்கிரமாய் பெற்றிட வேண்டுமென்ற
தம்பதியர் கனவும்
வரமாய் பெற்ற பிள்ளைகள்
வையகத்தில் வாழ்வாங்கு வாழ்ந்திட
வழிகளைத் துலக்கி
வலிகளைக் களைந்திடும்
பெற்றோரின் கனவும்
குடும்பத்தின் பாரமதை
குதூகலமாய் சுமந்து
பெற்றோரைப் பேணி
மற்றோரிடமும்
பெயரெடுத்திட
வேண்டுமென்ற
பிள்ளையின் கனவும்
மதிப்பெண்ணில் மாலைசூடி
மதிக்கப்படும் மாணாக்கனாகி
விதிக்கப்படும் நல் கட்டளைகளை
விருப்பத்துடனே நோக்கிடும்
மாணாக்கரின் கனவும்
ஏழ்மையின் பிடியினிலே
எட்டாக்கனியாகிய திருமணம்
கட்டாயம் விரைவினிலே
காத்திரமாய் நடக்க வேண்டுமென்ற
கன்னியின் கனவும்
விளைச்சலில் பெருக்கத்தை
விருப்பமாய் நோக்கி
அறுவடையில் அமோகத்தை
அள்ளிடவே அவாக் கொள்ளும்
விவசாயியின் கனவும்
பதுக்கலைப் பாவ
மாக்கி
கொடுக்கல்
வாங்கலை
நேர்மையாக்கி
நாணயமானவன்
நானென
நாலுபேரும் மதித்திட
வேண்டுமென்ற – நல்
வியாபாரியின் கனவும்
மெய்ப்பட
வேண்டும்.