Home » மீண்டும் திருத்தப்படும் நிகழ்நிலை காப்பு சட்டம்

மீண்டும் திருத்தப்படும் நிகழ்நிலை காப்பு சட்டம்

by Damith Pushpika
February 18, 2024 6:00 am 0 comment

பல்வேறு விமர்சனங்கள், வாத விவாதங்கள், சர்ச்சைகளுக்கும் உள்ளாகியுள்ள நிகழ்நிலை காப்பு சட்டம் மீண்டும் திருத்தங்களுக்குள்ளாக்க முடிவு செய்யப்பட்டு அதற்கு அமைச்சரவையின் அனுமதியும் கிடைத்துள்ளது.

ஏற்கனவே நிகழ்நிலை காப்புச் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சட்ட மூலம் தேசிய ரீதியில் மட்டுமன்றி சர்வதேச ரீதியிலும் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில் முன்வைக்கப்பட்டு வரும் கருத்துக்கள் விமர்சனங்கள் ஆகியவற்றை கருத்திற்கொண்டே மீண்டும் அதில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

2024 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க நிகழ்­நிலை காப்பு சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு வர்த்­த­மா­னியில் பிர­சு­ரிக்­கப்­பட்­டுள்­ளது. போலி­யான தக­வல்கள் பகி­ரப்­ப­டு­வதை தடுத்தல் உள்­ளிட்ட புதிய பல சட்­டங்­களை உள்­ள­டக்கி இந்த சட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.இந்த சட்­டத்தின் கீழ், பொய்­யான தக­வல்கள் பரப்­பப்­ப­டு­வதைத் தடுப்­ப­தற்­கான அதி­காரம் ஐந்து உறுப்­பி­னர்­களைக் கொண்ட புதிய ஆணைக்­கு­ழுவுக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது. அந்த ஆணைக்­கு­ழு­வினால் இனங் காணப்­பட்டு வழக்குத் தொட­ரப்­பட்டால் குறைந்தபட்சம் ஐந்து வருட சிறைத்­தண்­டனை வழங்க இச்­சட்டம் வழிவகுக்கிறது.

எனினும் இச் சட்டம் பல்­வேறு தரப்­பி­னரின் எதிர்ப்­பு­க­ளையும் மீறி அவ­சர அவ­ச­ர­மாக பாராளுமன்றத்தில் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளமை பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாக காரணமாகியுள்ளது. அந்த வகையில் இலங்கையில் மாற்­றுக்­கொள்­கை­க­ளுக்­கான நிலையம் அந்த சட்டம் தொடர்பில் கடும் எதிர்ப்பை வெளி­யிட்­டுள்­ளது. நிகழ்­நிலை காப்பு சட்­டத்தை உரு­வாக்கும் செயற்­பா­டு­களில் காணப்­பட்ட இர­க­சியத் தன்­மை­யையும் அதனை அவ­சர அவ­ச­ர­மாக நிறை­வேற்­றி­ய­தையும் கண்­டித்­துள்ள அந்த நிலையம் இச் சட்­டத்தை கொண்டு வரு­வதன் நோக்கம் மற்றும் பின்னணி தொடர்பிலும் கேள்விக்குட்படுத்தியுள்ளது.

குறிப்­பிட்ட சட்­ட­மூலம் தொடர்பில் உயர்­நீ­தி­மன்றம் முன்­வைத்த திருத்­தங்­களை அர­சாங்கம் முழு­மை­யாக கவனத்திற் கொள்ள தவ­றி­யுள்­ள­தா­கவும் அது முறையான வகையில் உரிய உள்ளடக்கத்துடன் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் அந்த நிலையம் தெரிவித்துள்ளது.

அதேவேளை, உயர்­நீ­தி­மன்­றத்தின் தீர்­மா­னத்திற்கிணங்க சட்­டமா அதிபர் திணைக்­களம் உறு­திப்­ப­டுத்­திய பின்­னரே நிகழ்­நிலை காப்பு சட்டம் நிறை­வேற்­றப்­பட்­ட­தாக சபா­நா­யகர் அலு­வ­லகம் தெரி­வித்­தது. பாரா­ளு­மன்­றத்தின் சட்­ட­ம் இயற்றும் நட­வ­டிக்கைகள் சட்­ட­ மா­அ­திபர் திணைக்­களம் சட்­ட­வ­ரை­வாளர் திணைக்­களம் ஆகி­ய­வற்­றுடன் இணைந்து முன்­னெ­டுக்­கப்­ப­டு­வதால் உயர்­நீ­தி­மன்­றத்தின் தீர்­மா­னத்­திற்கு மாறாக அல்­லது அர­சி­ய­ல­மைப்­பிற்கு முர­ணாக செயற்­ப­டு­வ­தற்­கான வாய்ப்­புகள் இல்லை எனவும் அந்த அலு­வ­லகம் தெரி­வித்­தது.

இத்தகைய பின்னணியில் இந்த சட்ட நடைமுறையின் போது தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­ட­வர்கள் மீது தவ­றாகப் பயன்­ப­டுத்­தப்­ப­டலாம் என மனித உரிமை ஆர்­வ­லர்கள் ஆட்சேபனைகளை முன்வைத்து வருகின்றனர். அனைத்­துக்கும் அப்பால் தற்­போது நிகழ்நிலை காப்பு சட்டம் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில் சமூக ஊடகங்களின் பயன்­பாட்­டா­ளர்கள் மிகுந்த அவ­தா­னத்­துடன் செயற்­படுவது அவசியமாகிறது.

அதே­போன்­று இன, மத முரண்­பா­டு­களுக்குத் தூபமிடும் வகையில் சமூக வலைத்­த­ளங்­களைப் பயன்­ப­டுத்­து­வோரைப் பொறுத்த வகையில் இச் சட்டம் அவர்­க­ளுக்கு கடுமையானதாக அமையும் என்­பதில் சந்­தே­க­மில்லை.

திருத்தங்களுக்கு அமைச்சரவை அனுமதி

சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னரும் அது தொடர்பில் வெளியிடப்பட்டு வரும் பாரதூரமான விமர்சனங்களை கருத்திற்கொண்டு நிகழ்நிலை காப்பு சட்டத்தில் மேலும் திருத்தங்களை கொண்டு வர அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அந்த வகையில் அதனை திருத்துவதற்கான சட்டமூலமொன்றை தயாரிக்குமாறு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவது தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் முன் வைத்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நிகழ்நிலை காப்பு சட்டத்துடன் தொடர்புடைய சில திருத்தங்கள் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.

அவ்வாறு 30 ற்கும் மேற்பட்ட திருத்தங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நீதிமன்றத்தை அவமதிக்கும் அல்லது நீதித்துறையின் அதிகாரம் மற்றும் பக்கச்சார்பின்மையின் பேணுகைக்குப் பங்கமாகவுள்ள கூற்றுக்களின் தொடர்பாடலிலிருந்தான பாதுகாப்பை உறுதிப்படுத்தலும்;

இச்சட்டத்தின்கீழ் தவறுகளைப் புரிவதற்காக நிகழ்நிலை கணக்குகள் மற்றும் தன்னியக்கச் செய்நிரல்களின் துஷ்பிரயோகங்களுக்கு எதிராக அவற்றைக் கண்டுபிடிப்பதற்கான, தடுப்பதற்கான மற்றும் பேணிக்காப்பதற்கான வழிமுறைகளை அறிமுகப்படுத்துதலும், அத்துடன் நாட்டின் நிகழ்வு பற்றிய பொய்யான கூற்றுக்களை மீண்டும் மீண்டும் அறிவிக்கின்ற நிகழ்நிலை அமைவிடங்களுக்கு நிதியளித்தல், அவற்றைமேம்படுத்தல் மற்றும் வேறு ஆதரவைத் தடுத்தலும் ஆகும்.

நீதிமன்ற அவமதிப்பாக அமைகின்ற பொய்யான அறிவிப்பு, கலகம் விளைவிப்பதற்கு காரணமாகும் பொய்யான கூற்று மூலம் தேவையின்றி ஆத்திரமூட்டல், பொய்யான கூற்றொன்றின் மூலம் மத நல்லிணக்கத்தைக் குழப்புதல், மத உணர்வுகளைப் புண்படுத்தும் நோக்ேகாடு வெளியிடப்படும் பொய்யான கூற்று, ஆள்மாறாட்டஞ் செய்து ஏமாற்றுதல் அமைதிக்குப் பங்கம் ஏற்படுத்தும் வகையில் பொய்யான கூற்றுகள் மூலம் வேண்டுமென்றே நிந்தை செய்தல், அரசுக்கெதிரான தவறான கூற்றைப் பரப்புதல், தவறிழைத்தல்

உள்ளிட்ட இத்தகைய குற்றங்களுக்கு, 5 ஆண்டுகள் விளக்க மறியல் தண்டனை அல்லது தண்டம் அல்லது 3 ஆண்டுகள் சிறைத் தண்டனைக்கும் தண்டப்பணம் செலுத்துதலுக்கும் ஆளாகலாம். பிரிவு 32 இன் படி, மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட தடவைகள் தடைசெய்யப்பட்ட கூற்றுக்களைப் பரப்பும் எந்தவொரு தளத்தையும் நிகழ்நிலை காப்புச் சாட்டத்தின் கீழ் அபாயமான அமைவிடங்களாக நீதவான் நீதிமன்றம் பட்டியலிட முடியும்.

“நிகழ்நிலை அபாய அமைவிடம்” என்பது கணணி, இணையம், இணையதளம், வலைத்தளம், உசாத்துணை இணையத்தளம் அல்லது அரங்கு போன்ற தொகுத்தளிக்கப்படுவதும் இணைய வழிவகைகள் மூலம் பார்க்கப்படமுடியுமானதும் கேட்கப்படமுடியுமானதும் அல்லது வேறு வகையாக உய்த்தறியக்கூடியதுமானது என்று பொருள்படும்.

தடைசெய்யப்பட்ட கூற்றுக்களின் தொடர்பாடலினால் சிக்கல்களை எதிர் நோக்க நேரும் எந்தவொரு நபரும் அத்தகைய கூற்றுக்கள் புழக்கத்தில் விடப்படுவதைத் தடுப்பதற்கான கட்டளையொன்றைப் பெறுவதற்காக, மனு மற்றும் சத்தியக் கடதாசி மூலம் நீதவான் நீதிமன்றத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

போலியான நிகழ்நிலைக் கணக்குகளைத் தடுத்தல்

போலியான நிகழ்நிலைக் கணக்குகள் உருவாக்கப்படுவதையும், ஒழுங்கமைக்கப்பட்ட உறுதிப்படுத்தப்படாத நடத்தையைத் தடுக்க, அத்தகைய கணக்குகளை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு இடைநிறுத்த இணைய இடையீட்டாளர் சேவைக்கு அறிவிப்பதற்கு ஆணைக் குழுவுக்கு அதிகாரம் உள்ளது.

சமூக ஊடக தளங்களைப் பதிவுசெய்தல்

இலங்கையில் உள்ள சமூக ஊடக வலைத்தளங்கள் மற்றும் தளங்கள் பிரிவு 11 (ஓ) இன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள முறையில் பதிவு செய்ய வேண்டும்.

நிகழ்நிலைக் காப்பு ஆணைக்குழு

நிகழ்நிலை காப்பு என்ற இந்த ஆணைக்குழுவானது ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆறு பேர் கொண்ட குழுவாகும்.

ஆணைக்குழுவின் அதிகாரங்கள்

இந்த சட்டத்தின் கீழ் தடைசெய்யப்பட்ட கூற்றுக்களைத் தொடர்பாடல் செய்யும் நபர்களுக்குப் பணிப்புரைகளை வழங்குதல், ஆட்கள், இணைய சேவை வழங்குநர்கள் அல்லது இணைய இடையீட்டாளர்களுக்குப் பணிப்புரைகளை வழங்குதல், சமூக ஊடக தளங்களை பதிவு செய்வது தொடர்பான பணிப்புரைகளை வழங்குதல், சமூக ஊடக தளங்களுக்கான நடத்தை நெறிமுறைகளை அறிமுகப்படுத்துதல் தடை செய்யப்பட்ட கூற்றுக்களை வெளியிடும் நிகழ்நிலைத் தளங்களை முடக்க இணைய சேவை வழங்குநர்கள் மற்றும் இணைய இடையீட்டாளர்களுக்கு அறிவித்தல், இந்த சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தடைசெய்யப்பட்ட கூற்றுக்களுக்கான குற்றங்களை வரையறுக்க முடியாது.

மேலும் அவை பரந்த பொருளைக் கொடுக்கலாம். இது கருத்து வெளியிடும் உரிமையைக் கட்டுப்படுத்தலாம்.

சமூக ஊடகத் தளங்கள் பதிவு செய்யப்பட வேண்டும் என்று சட்டமூலம் கூறுகிறது, இந்த சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளை பின்பற்றாத சமூக ஊடகங்கள் நாட்டின் பாவனையிலிருந்து வெளியேற்றப்படலாம் என்றும் ஆணைக்குழுவுக்கான அதிகாரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் தொடரும் விமர்சனங்கள் பிரசாரங்களுக்கு மத்தியில் நிகழ்நிலை காப்பு சட்டம் மூலம் மீண்டும் திருத்தத்திற்கு உள்ளாக்கப்படவுள்ளது. அதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளது.

அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு நாட்டின் நன்மைக்காக அது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதே எதிர்க்கட்சி உட்பட அனைவரதும் எதிர்பார்ப்பாகும்.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

@2025 All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division