ஒரு நாட்டின் அபிவிருத்தி பெருகுவதற்கு அந்நாட்டின் கல்வி, சுகாதாரம் மற்றும் பெருந்தெருக்கள் போன்ற மூன்று துறைகளும் கண்டிப்பாக முன்னேற்றமடைந்த நிலையில் இருக்க வேண்டும். எமது நாட்டின் எழுத்தறிவு உயர்ந்த மட்டத்தில் இருந்தாலும் பெருந்தெருக்கள் அபிவிருத்தியென்பது நீண்ட காலமாக ஆமை வேகத்தி லேயே செல்கிறது.
நெடுஞ்சாலைகள் மற்றும் மேம்பாலம் என்ற எண்ணக்கரு கொண்டு வரப்பட்டாலும், அந்த நடவடிக்கைகளும் அவ்வப்போது தடைப்பட்டுப் போயின. அவ்வாறு தடைப்பட்டுப் போயிருந்த மற்றொரு மேம்பால வீதியாக அமைந்திருந்தது நாவல – அங்கம்பிட்டி மேம்பால வீதியாகும்.
2019/2020 ஆண்டு காலப்பகுதியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் ஷவின் முயற்சியினால் இதன் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது அப்பிரதேசத்துடன் தொடர்புடைய சில எதிர்க்கட்சி அரசியல்வாதிகளின் பொய்யான கதைகளை புறக்கணித்தேயாகும்.
நாவல, – அங்கம்பிட்டி ஊடாக கோட்டே மற்றும் நாரஹேன்பிட்டியை இணைக்கும் வீதியொன்றை அமைக்கும் போது அது சுற்றாடல் பாதிப்புக்குள்ளான பிரதேசம் என்பதனால் பொருத்தமற்றது என பொய்யான கதைகள் பரப்பப்பட்டன.
என்றாலும் இதனை கொலன்னாவை கால்வாய் ஊடாக மேம்பாலமாக நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டமை அந்த போலிக் கதைகளை உருவாக்கியவர்களுக்குத் தெரியாது.
இந்தப் பாலத்தை 1500 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிப்பதற்கு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன. கொவிட் தொற்றுநோயின் பின் பாலத்தின் நிர்மாணப் பணி நிறுத்தப்பட்டது. மிகப் பெரும் செலவினைச் செய்து பணிகள் நிறைவடையும் நிலையில் இருந்த போதிலும், அதன் பின்னர் நான்கு வருடங்களாக இந்தப் பாலத்தின் பணிகள் முற்றாக தடைப்பட்டது. 6 வரிசை கொங்கிரீட் தூண்களில் ஒரு பகுதி மட்டும் அதாவது மேலும் 60 கொங்கிரீட் பீம்கள் பதிக்க வேண்டி இருந்த நிலையில் அது தடைப்பட்டது
இவ்வாறு சுமார் 4 வருடங்களாக நிர்மாணப் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டிருந்த நாவல – அங்கம்பிட்டிய பாலத்தின் நிர்மாணப் பணிகளை மீள ஆரம்பிக்க வேண்டும் என கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி மதுர விதானகே பல சந்தர்ப்பங்களில் சுட்டிக்காட்டியிருந்தார். இந்தப் பாலத்தை நிர்மாணிப்பதற்கு திட்டமிட்ட காலத்திலிருந்தே அதற்காக அவர் தன்னை அர்ப்பணித்து கடுமையாகப் பாடுபட்டதோடு, போலிக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்த எதிர்க்கட்சி அரசியல்வாதிகளுடன் கூட மோதிக் கொண்டார். இந்தப் பாலத்தின் நிர்மாணத்தினால் சுற்றுச் சூழல் அழிவு ஏற்படுவதோடு, சுற்றுப்புறப் பகுதி மிகவும் பாதுகாப்பற்றதாகவும், சட்டவிரோத நிர்மாணங்களை நோக்கிச் செல்வதாகவும் முன்வைக்கப்பட்ட போலிக் குற்றச்சாட்டுக்களோடு மதுர விதானகே எம்.பிக்கு மோத நேர்ந்தது.
போக்குவரத்து, பெருந்தெருக்கள் மற்றும் ஊடகத் துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன, அந்தப் பாலத்தின் நிர்மாணப் பணிகளைத் துரிதப்படுத்துவதற்கான மீதிப் பணத்தை அமைச்சரவையின் ஊடாக அங்கீகரித்தார். அதனைத் தொடர்ந்தே அவரால் அந்தப் போலிக் குற்றச்சாட்டுக்களை முறியடிக்க முடிந்தது.
பத்தரமுல்லை புறக்கோட்டை வீதி மற்றும் நாவுல – ராஜகிரியவை இணைத்து நாவல ராஜகிரிய கால்வாய் (கொலன்னாவ கால்வாய்) ஊடாக நிர்மாணிக்கப்படும் நாவல – அங்கம்பிட்டி பாலத்தின் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ள நிர்மாணப் பணிகளை துரிதமாக நிர்மாணித்து முடிப்பதற்காக இந்த வருடத்திற்கான வரவு செலவுத் திட்டத்தில் 900 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் பாலத்தின் கடைசிக் கட்டத்தின் நிர்மாணப் பணிகளை ஆரம்பிப்பதற்கு அப்பாலத்தினைப் பார்வையிடுவதற்காக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத் துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் அப்பகுதிக்கு விஜயம் செய்தனர். அதனடிப்படையில் பாலத்தின் மிகுதி வேலைகளைத் துரிதமாக நிறைவு செய்ய வேண்டும் என அமைச்சரினால் வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் அரச அபிவிருத்தி, நிர்மாணக் கூட்டுத்தாபனத்தின் (SD & CC) அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.
சுமார் 700 மீட்டர் தூரத்தைக் கொண்ட இந்தப் பாலம் 10.4 மீட்டர் அகலத்தைக் கொண்டதாகும். அதன் நிர்மாணத்திற்கான மொத்த செலவு 2600 மில்லியன் ரூபாய்களாகும்.
கொவிட் தொற்று காலத்திற்கு முன்னர் இதன் பணிகளுக்காக 1500 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மூலம் செயற்படுத்தப்படும் இந்தத் திட்டத்தின் நிர்மாணப் பணிகள் அரச அபிவிருத்தி மற்றும் நிர்மாணக் கூட்டுத்தாபனத்தின் (SD & CC) மூலம் மேற்கொள்ளப்படுகின்றது. உள்நாட்டு அரசாங்க நிறுவனத்தின் ஊடாக இந்த நிர்மாணப் பணிகளை மேற்கொள்வது வெளிநாடுகளுக்குச் செல்லும் எமது பணத்தை மிச்சப்படுத்துகிறது.
இந்த நிர்மாணத்தின் மூலம் நாட்டின் பல துறைகளுக்கு நன்மை கிடைக்கும் என இந்தப் பாலத்தின் நிர்மாணப் பணிகள் தொடர்பில் அரச அபிவிருத்தி மற்றும் நிர்மாணக் கூட்டுத்தாபனத்தின் (SD & CC) தலைவர் குசான் தேவிந்த தெரிவித்தார்.
“புதிதாகப் பாலம் ஒன்றை நிர்மாணிப்பது சாதாரணமான ஒரு விடயம் என பலர் நினைக்கிறார்கள். எனினும் நகரப் பகுதிகளில் இவ்வாறான பாலம் ஒன்றை நிர்மாணிப்பது என்பது அந்த நகரம், அதனை அண்மித்ததாக காணப்படும் மிகப் பெரும் போக்குவரத்து நெரிசல்களைக் குறைப்பதாகும். அதன் ஊடாக மக்களின் பெறுமதியான கால நேரங்கள் மீதப்படுத்தப்படுத்துவது மாத்திரமின்றி நாட்டின் எரிபொருள் இறக்குமதிக்கும் செலவிடப்படும் பெருமளவிலான வெளிநாட்டுச் செலாவணியின் அளவும் எமக்கு மீதப்படுத்தப்படுகின்றது.
இதற்கு நல்லதொரு உதாரணம், காலி வீதிக்குச் சமாந்தரமாக நிர்மாணிக்கப்பட்ட மெரைன் ட்ரைவ் வீதியாகும். அந்த வீதியில் அதிகளவில் பயணிப்பது இலகு வாகனங்களாகும். அது பஸ்களுக்கான வீதி அல்ல.
பம்பலப்பிட்டி புகையிரத நிலையத்திற்கு அருகில் பாலத்தை அப்புறப்படுத்துவதற்காக ஒரே ஒருநாள்தான் வீதி மூடப்பட்டது. அன்று காலி வீதியில் காணப்பட்ட போக்குவரத்து நெரிசலினால் எமக்கு பொலிஸாரிடமிருந்து மாத்திரமல்ல, பல துறைகளிலிருந்தும் நாட்டின் உயர் தரப்பினரிடமிருந்தும் கூட தொலைபேசி அழைப்புக்கள் வந்தன. சில மணி நேரமாக அவ்வீதியில் அதிக போக்குவரத்து நெரிசல் நிலவியது. எனினும் அவ்வாறான பாரிய சேவை ஒன்று அந்த வீதியின் ஊடாக வழங்கப்படுகின்றது என்பதைப் பார்க்கும் போது அது கஷ்டமாகத் தெரிவதில்லை.
அதேபோன்றுதான் இந்த நாவல – கோட்டை வீதியும். தற்போது பாரிய போக்குவரத்து நெரிசல் கோட்டை, பத்தரமுல்ல, நாவல, நாரஹேன்பிட்ட நகரங்களில் காணப்படுகின்றது. குறிப்பாக காலையிலும் மாலையிலும் இந்நிலை உள்ளது. இது தொடர்பில் அறிக்கையைப் பெற்றுக் கொண்டதால்தான் இவ்வாறான பாலத்திற்கான தேவை தோன்றியிருக்கின்றது. அந்தத் தேவையின் அடிப்படையில்தான் இந்தப் பாலத்தின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
நீண்ட மேம்பாலமாக நிர்மாணிக்கப்படும் இந்தப் பாலமானது முழுமையாகவே தூண்களின் மீதே அமைக்கப்படுகின்றது. தூண்களின் மீது நிர்மாணிக்கப்படுவதால் எந்த வகையிலும் சுற்றாடல் பாதிப்புக்கள் ஏற்படப் போவதில்லை.
இந்த வீதியில் கனரக வாகனங்கள் பயணிக்க முடியும் என்றாலும் இலகு வாகனங்களின் போக்குவரத்தை மாத்திரமே நாம் எதிர்பார்க்கின்றோம். தற்போது ஆறு பொறியியலாளர்கள் உள்ளிட்ட 30 பேர் பாலத்தின் பணிகளை துரிதமாக முடிப்பதற்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள். நாம் ஐந்து மாதத்திற்குள் மீதி வேலைகளை முடிப்போம். மிகக் குறுகிய வேலைகள் மீதமுள்ளன” என்றார்.
கடந்த பெப்ரவரி 08ஆம் திகதி இந்தப் பாலத்தின் பணிகளை மீள ஆரம்பிப்பதற்கான சிறிய நிகழ்வொன்று அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தனவின் தலைமையில் இடம்பெற்றது. பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி மதுர விதானகே உள்ளிட்ட தரப்பினர் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.
நிர்மாணப்பணிகள் மீள ஆரம்பிக்கும் பணிகளைப் பார்வையிடுவதற்காக விஜயம் செய்திருந்த அமைச்சர் அதன் பணிகளைத் துரிதமாக முடிப்பதற்கு இருக்கும் தேவைகள் என்ன என்பதை ஆராய்ந்து பார்த்தார். கோட்டை பிரதேசத்தில் நிலவும் அதிக போக்குவரத்து நெரிசலுக்கான தீர்வாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் தயாரிக்கப்பட்ட திட்டத்திற்கு அமைவாக சுற்றாடலுக்கு சார்பான முறையில் தூண்களின் மீது நிர்மாணிக்கப்படும் இந்தப் பாலத்தின் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்ததாக அமைச்சர் இதன் போது குறிப்பிட்டார்.
“சுமார் 170 கோடி ரூபாய் செலவிடப்பட்டு பாலத்தின் நிர்மாணப்பணிகளை முன்னெடுத்துச் செல்லும் போது நாடு முகங்கொடுத்த கொவிட் தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் இந்த நிர்மாணப்பணிகள் முழுமையாக நின்று போயின.
விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் பல சந்தர்ப்பங்களில் இந்த இடத்திற்கு விஜயம் செய்ததன் பின்னர் தற்போதைய ஜனாதிபதியிடம் விசேட அறிக்கையினைச் சமர்ப்பித்து இந்தத் திட்டத்தின் இறுதிக் கட்டத்தினை முடிக்காமல் இருப்பது பெரும் அநியாயம் என்பதை எடுத்துக் கூறினேன்.
மிகப் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு முகங் கொடுத்துள்ள நாடு என்ற வகையில் நாட்டை அன்றாடம் முன்னெடுத்துச் செல்லக் கூடிய மட்டத்திற்கான வருமானம் இதுவரை இருந்த எந்த ஒரு அரசாங்கத்திற்கும் கிடைக்கவில்லை. இதன் காரணமாக நீண்ட காலமாக செலவுகளைச் செய்து கொள்ள முடியாத நாடாக இலங்கை மாறியுள்ளது. சுதந்திரத்திற்குப் பின்னர் இன்று வரைக்கும் அரசாங்கத்தின் முதன்மைக் கணக்கில் மேலதிக இருப்பு இருந்தது ஆறு வருடங்கள் மாத்திரமேயாகும். எனவே நாட்டின் அனைத்து அபிவிருத்திப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பது உள்நாட்டு, வெளிநாட்டுக் கடன்களைப் பெற்றேயாகும்.
இநத வருடத்தினுள் நிறைவு செய்யக் கூடிய பணியாக இந்தப் பாலத்தின் நிர்மாணப் பணிகளை நிறைவு செய்வதற்கு 90 கோடி ரூபாய் நிதியினை இந்த முறை வரவு செலவுத் திட்டத்தில் ஜனாதிபதி ஒதுக்கியுள்ளார். அதனடிப்படையில் இந்தப் பாலத்தின் இறுதிக்கட்டத்தை நிர்மாணிக்கம் பணிகளை ஆரம்பிப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. வரும் ஜூன் மாதத்திற்குள் இந்தப் பாலத்தினை மக்கள் பாவனைக்கு விடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்வோம். இதற்காக அனைவரினதும் ஒத்துழைப்பும், பங்களிப்பும் தொடர்ச்சியாகத் தேவையாக உள்ளது.” என்றார்.
பாலம் முழுக்க முழுக்க தூண்களின் மீது கட்டப்பட்டுள்ளது. அதனால் சுற்றுச்சூழலுக்கு எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படப் போவதில்லை. அத்துடன் கொலன்னாவ கால்வாய் நீர்வாழ் தாவரங்களால் முற்றாக மாசடைந்துள்ளது. அந்தக் கால்வாயும் எதிர்காலத்தில் இதன் மூலம் சுத்தப்படுத்தப்படும்.
அங்கம்பிட்டி பாலத்திற்கு அருகில் இருந்து பார்த்தால் கொழும்பு போன்ற பரபரப்பான நகரத்தில் இருப்பது போல் உணர முடியாது. அது ரஜரட்ட காட்டினை நினைவுபடுத்தும் சூழலை கொண்டுள்ளது.
வரும்காலங்களில் வாகனப் போக்குவரத்து அதிகமாகும் போது அந்த பதற்றமான சூழல் பிராந்தியத்திற்கு எந்தப் பிரச்சினையும் ஏற்படாமலிருப்பது பாலம் முற்றாகவே தூண்களினால் நிர்மாணிக்கப்படுவதனாலாகும். இவ்வாறான பாலம் நிர்மாணிக்கப்படப் போவது அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த அதிகமானோர் கூட அறியாதிருந்தமையையும் இங்கு குறிப்பிட வேண்டும்.
தாரக விக்ரமசேகர
தமிழில் – எம். எஸ். முஸப்பிர்