இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து சென்று உலகின் பல்வேறு நாடுகளிலும் வாழ்கின்ற நம்மவர்கள் உலகப் புகழ்பெற்று பல்வேறு துறைகளிலும் சுடர் விட்டு பிரகாசிப்பதை காண முடிகிறது.
நாட்டின் ஜனாதிபதியாகவும் பிரதமராகவும் அமைச்சராகவும் உலக செல்வந்தர்களின் பட்டியலில் இடம் பிடிக்கும் அளவுக்கு பணக்காரர் பட்டியலில் இடம் பிடிப்பவர்களாகவும், மருத்துவ நிபுணர்களாகவும் பொறியியலாளர்களாகவும் சுகாதாரத்துறை நிபுணர்களாகவும் அரசியலிலும் பல்வேறு துறைகளிலும் அவர்கள் சிறப்பாக தடம் பதித்து தாய் நாட்டுக்குப் பெருமை சேர்ப்பதை குறிப்பிட முடியும்.
அந்த வகையில் ‘ப்ரொபசர் சிவா’என அறியப்படும் அனைவரது கௌரவத்திற்கும் பாத்திரமான 67 வயது பேராசிரியர் சிவானந்தன் அமெரிக்காவில் தற்போதுள்ள உயர்மட்ட விஞ்ஞானிகளில் ஒருவர். அமெரிக்காவில் பல்கலைக்கழகம் ஒன்றை நடத்தி வருபவர். அந்நாட்டின் தொழில்நுட்பத் துறையிலும் கல்வித்துறையிலும் சிறந்த பங்களிப்பை வழங்கி வருபவர்.
நம் நாட்டிலிருந்து புலம்பெயர்ந்து அமெரிக்காவில் வாழும் விஞ்ஞானியும் பேராசிரியருமான சிவா சிவானந்தன் சிக்காகோ நகரில் இலிநொய் பல்கலைக்கழகத்தில் பணிப்பாளராக பணி புரிகின்றார். புத்தாக்கத் துறையில் நிபுணரான அவர் அதற்காக அமெரிக்க ஜனாதிபதி விருதையும் பெற்றுக் கொண்ட இலங்கையர்.
இலங்கைக்கு விஜயம் செய்த போது கடந்த வாரம் அவரை சந்திப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. அவர் சார்ந்த துறை மற்றும் இலங்கைக்கு அவர் வழங்க எதிர்பார்த்துள்ள ஒத்துழைப்புகள் தொடர்பிலும் அவருடன் கலந்துரையாட முடிந்தது
நாட்டின் கல்வித்துறைக்கு எதிர்காலத்தில் பல்வேறு ஒத்துழைப்புகளை வழங்குவதற்கு தயாராக உள்ள அவர், தற்போது வடக்கின் பல பாடசாலைகளுக்கு தமது முழுமையான ஒத்துழைப்பை வழங்கி வருகின்றார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் கல்வி யமைச்சர் சுசில் பிரேமஜயந்தவுடன் அவர் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்து அங்கு சில கல்லூரிகளுக்கு கல்வி உபகரணங்களை வழங்கினார்.
அத்துடன் வடக்கின் கல்வித் துறை சம்பந்தமாக கல்வி அமைச்சால் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளுக்கும் அவரது பங்களிப்பு பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது என்பதைக் குறிப்பிட வேண்டும்.
இலங்கையிலிருந்து வெளிநாடுகளில் வாழும் வசதி படைத்தவர்கள் தமது தாய் நாட்டுக்கு எதையாவது வழங்க வேண்டும் அல்லது நிதி உதவி செய்ய வேண்டும் என சிந்தித்து அவ்வாறு ஒரு முறையோ அல்லது இரு தடவைகளோ அதனை வழங்குவதையே காண முடிகிறது.
அதிலிருந்து சற்று வித்தியாசமாக சிந்தித்து பணத்தையோ அல்லது வேறு உதவிகளையோ ஒரு முறை அல்லது இரு முறை செய்வதை விட கல்வித்துறை போன்ற எதிர்கால பரம்பரைக்கு மிகவும் முக்கியமான துறைகளை தெரிவு செய்து அந்த துறையின் முன்னேற்றத்துக்கு தொடர்ச்சியான பங்களிப்பை வழங்குவதே சிறந்தது என தாம் நினைப்பதாக பேராசிரியர் சிவா சிவானந்தன் தெரிவிக்கின்றார்.
அந்த வகையில் இலங்கையின் கல்வித்துறையில் பல்வேறு திட்டங்களை முன்னெடுப்பதற்காக கல்வி அமைச்சுடன் இணைந்து செயற்பட ஆரம்பித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இலங்கையில் இலவசக் கல்வியை பெற்று வெளிநாடுகளுக்குச் சென்று சிறந்த வருமானம் ஈட்டுபவர்கள் தங்களது வருமானத்தில் 5 வீதத்தை தாய் நாட்டின் வளர்ச்சிக்காக வழங்கினால் நாடு மிக விரைவில் பெரும் முன்னேற்றத்தை அடையும் என உலக புகழ்பெற்ற விஞ்ஞானியும் பேராசிரியருமான சிவா சிவானந்தன் தெரிவித்தார்.
கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மற்றும் பேராசிரியர் சிவா சிவநாதன் ஆகியோரின் பங்குபற்றலுடன் சிக்காகோ இலிநொய்ஸ் பல்கலைக்கழகம் மற்றும் பேராதனை பல்கலைக்கழகங்களுக்கிடையில் கல்வி மற்றும் ஆராய்ச்சி பரிமாற்றம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இலங்கையில் பாடசாலைக் கல்வி மட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘’ஸ்டெம்’ கல்வி முறைமை மேலும் விரிவுப்படுத்துவதற்கும் அதனை ஊக்கப்படுத்துவதற்கும் கல்வியமைச்சரின் கோரிக்கைக்கு அமைய பேராசிரியர் சிவா சிவநாதன் தனது பூரண ஒத்துழைப்புக்களை வழங்க தயாராகவுள்ளார்.
கல்வி அமைச்சருடன் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் பேராதனை பல்கலைக்கழகம், கால்நடை மருத்துவம், விலங்கு, கால்நடை சத்திரசிகிச்சை உள்ளிட்ட துறைகளில் முன்னேற்றம் எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் இரு பல்கலைக்கழகங்களுக்குமிடையில் தகவல் மற்றும் தொழில்னுட்ப திறன்களை பரிமாற்றிக் கொள்ளவும் எதிர்பார்க்கப்படுகிறது.
கல்வியமைச்சின் கோரிக்கைக்கு அமைய இலங்கையின் கல்வி, உயர்கல்வி, திறனபிவிருத்தி, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்துக்காக கலாநிதி சிவா சிவானந்தன் எதிர்வரும் காலங்களில் பல செயற்திட்டங்களை தேசிய மட்டத்தில் முன்னெடுக்கவுள்ளார்.
சர்வதேச நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கை சிறந்த நாடு என்பதை குறிப்பிட்ட அவர், திட்டமிட்ட செயற்திட்டங்கள் மூலம் நாட்டை உலகின் முன்னணி நாடாக கட்டியெழுப்ப முடியும் என்றும் நம்பிக்கை வெளியிட்டார். இலங்கையில் யாழ்ப்பாண பல்கலைக்கழகம், களனிப் பல்கலைக்கழகம், பேராதனை பல்கலைக்கழகம் மற்றும் தேசிய தொழில்நுட்ப பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து தொழில்நுட்ப ரீதியில் எதிர்கால சந்ததியை முன்னேற்றும் செயற்றிட்டங்களை மேற்கொள்வது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அதற்கான முன்னோடி நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
வடக்கில் பிறந்து அமெரிக்காவில் தற்போது புகழ்பெற்ற விஞ்ஞானியாகவும் பல்கலைக்கழகம் ஒன்றின் ஸ்தாபகராகவும் விளங்கும் பேராசிரியர் சிவா சிவானந்தன் இந்த செயற்பாடுகளுக்காக ஏற்கனவே வடக்கிற்கான விஜயத்தை மேற்கொண்டு வடக்கிலுள்ள பாடசாலைகளின் நிலைமைகளை அவதானித்துள்ளதாக குறிப்பிட்டதுடன் வடக்கில் போதைப் பொருள் கலாசாரத்தை இல்லாதொழிப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ள தாகவும் தெரிவித்தார். அது தொடர்பில் வடக்கிலுள்ள முக்கியமான கல்லூரிகளின் அதிபர்களுடன் இணைந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஆசிரியர்கள் கடவுளுக்கு சமமானவர்கள். அந்த வகையில் சிறந்த ஒரு ஆசிரியர் அல்லது ஆசிரியையின் சேவையை முழுமையாக பெற்று வாழ்க்கையில் தம்மை வானளாவ உயர்த்திக் கொண்டுள்ள மாணவர்கள் உண்மையில் புண்ணியம் செய்தவர்கள்.
அவ்வாறானவர்கள் உள்நாட்டில் மட்டுமன்றி உலகளாவிய ரீதியில் புகழ்பெற்று வாழ்வதையும் காண்கின்றோம். அதற்கு மிகச் சிறந்த உதாரணமாக நாம் பேராசிரியர் சிவானந்தனைக் குறிப்பிட முடியும்.
அதனால் தான் அவர் அந்த நாட்டின் பிரஜைகளால் கூட பெற்றுக் கொள்ள முடியாத கீர்த்தியை அந்த நாட்டில் அவர் பெற்றுக்கொள்ள முடிந்துள்ளது.
கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்தவின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு வருகை தந்துள்ள அவர் இலங்கையின் கல்வித்துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் தொடர்பில் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.
அவர் தெரிவித்த சில சிறந்த ஆலோசனைகளும் கருத்துக்களும் நடைமுறைப்படுத்தப்படுமானால் உண்மையில் கல்வித்துறையில் நாம் எதிர்பார்க்கும் சிறந்த பலனை பெற்றுக் கொள்ள முடியும்.
இலங்கையின் கல்வி முறைமையை நோக்கும்போது அதில் மேற்கொள்ளப்பட வேண்டிய பல மாற்றங்கள் உள்ளன என அவர் குறிப்பிட்டார்.
கல்விப் பொது தராதர சாதாரண தரத்துக்குப் பின்னரான இரண்டு வருடங்கள் மற்றும் உயர்தரத்திற்கு பின்னர் பல்கலைக்கழகம் செல்லும் வரையிலான இரண்டு வருடங்கள் என நான்கு வருடங்கள் மாணவர்களின் வாழ்க்கையில் வீணடிக்கப்படுவதை சுட்டிக்காட்டிய அவர் அதில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் அது தொடர்பில் கல்வியமைச்சின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
பேராசிரியர் சிவானந்தன் யாழ்ப்பாணத்தில் சாவகச்சேரியில் பிறந்தவர். சிவலிங்கம் என்ற ஆசிரியரின் 9 பிள்ளைகளின் ஆறாவது புதல்வர் இவர். ஆரம்பக் கல்வியை யாழ்ப்பாணம் சரஸ்வதி மகா வித்தியாலயத்திலும் அதனையடுத்து யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும் பெற்றுக் கொண்டுள்ளார். பேராதனையை பல்கலைக்கழகத்தில் பௌதீக விஞ்ஞான பட்டம் பெற்று அந்தப் பட்டத்துடன் அமெரிக்காவுக்கு சென்றவர் அவர்.
அக்காலத்தில் அவரது தாய் “ பிறந்த மண்ணுக்கு வழங்கக்கூடிய சிறந்த ஒன்று அந்த கிராமத்திற்கு சிறந்த கல்வியை வழங்குவதே” என அடிக்கடி வலியுறுத்துவார். அது தவிர சிறந்த வாழ்க்கைக்கான படிப்பினைகளை அவர் கற்றுத் தந்தார். உணர்வுகளை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். அதே போன்று உனது உணர்வுகளை கட்டுப்படுத்துவதற்கு வேறு யாருக்கும் நீ இடம் கொடுக்கக் கூடாது. அவ்வாறு செய்தால் உணர்வுகளே வெற்றி பெறும் நீ தோற்று விடுவாய் என்பார்.
அவ்வாறு வார்த்தையில் மட்டுமின்றி வாழ்க்கையிலும் செயற்பட்ட அவர் தமது பாடசாலை ஆசிரியர் தொழிலுக்கு மேலதிகமாக வீட்டிலும் பிள்ளைகளுக்கு கல்வி கற்பித்துள்ளார்.
“எமது குடும்பத்தை பொறுத்தவரையில் பொருளாதாரத்தில் நாம் முன்னேற்றகரமான நிலையில் இருக்கவில்லை. அந்த சந்தர்ப்பத்தில் எனது தந்தை “நாம் எதையாவது சாதிக்க வேண்டுமானால் அதற்காக கடுமையாக உழைக்க வேண்டும் என அடிக்கடி கூறுவார். உனது கல்விச் செலவுக்கு வீட்டில் உள்ள மா மரங்கள் மற்றும் தென்னை மரங்களின் அறுவடைகளைப் பெற்று அதனை விற்று செலவு செய்து கொள்” என அவர் வழிகாட்டினார்.
ஒரே மூச்சில் 200 தேங்காய்களை நான் தோலுரிப்பேன். எனக்கு தேவையான பணத்தைப் பெற்றுக் கொள்ள நான் மிகவும் கஷ்டப்பட்டேன். இன்று நான் பெற்றுக் கொண்டுள்ள அனைத்தும் அதன் பிரதிபலன்களே.
ஒவ்வொரு மனிதரும் தமது வாழ்க்கையையும் எதிர்காலத்தையும் வெவ்வேறு கோணத்தில் பார்க்கின்றனர். நாம் சந்திக்கும் ஒருவர் எவ்வாறானவர் என்பதை அறிந்து கொள்ள அவரை கணிப்பிட்டு அவரது குணங்களை அறிந்து கொள்ள முடியும்.
வாழ்க்கையில் ஒரு தலைமைத் துவத்துக்கு வருவதற்கு இது எனக்கு மிகவும் முக்கியமானதாக அமைந்தது.
அதேபோன்று இலங்கையின் கலாசாரம் மிகவும் சிறந்தது. இலங்கையர்கள் எப்போதும் பிறரை பற்றி சிந்திப்பவர்கள் நேர்மையான மனம் படைத்தவர்கள் அது வாழ்க்கைக்கு மிகவும் பலம் தரக்கூடியது.
நான்கு தசாப்தங்களாக அமெரிக்காவில் வாழ்ந்து வரும் பேராசிரியர் சிவநாதன் தாய் நாட்டின் மீது மிகவும் பற்று வைத்துள்ளார். எனக்கு வாழ்க்கைக்கான அடித்தளம் தாய் நாட்டிலேயே கிடைத்தது என தெரிவிக்கும் அவர். பிரிட்டனை விட உயர்ந்த நிலையில் அப்போது நம் நாடு காணப்பட்டது என்றார்.
“இலங்கையில் இருந்து நான் 1982 ஆம் ஆண்டு அமெரிக்காவுக்கு சென்றேன்.
ஆறாம் வகுப்பிலிருந்து யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் கல்வி கற்றபின் பேராதனை பல்கலைக்கழகத்தில் நுழைந்தேன். அப்போதிருந்த ஆசிரியர்களும் விரிவுரையாளர்களும் மிக முக்கியமானவர்கள். அவர்கள் பிள்ளைகளுக்கு கற்பிப்பதற்காக தமது முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்து செயல்பட்டனர். அவ்வாறான ஆசிரியர்களை இலங்கையை தவிர்த்து வேறு எந்த நாடுகளிலும் காண முடியாது.
அமெரிக்காவின் சிக்காகோவில் இலிநோய்ஸ் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்க சென்றதன் பின்னர் அங்கு கலைப் பட்டம் மற்றும் கலாநிதி பட்டங்களையும் பெற்றுக் கொண்டேன். அந்த பல்கலைக்கழகத்தில் பௌதிக விஞ்ஞான பிரிவில் பேராசிரியராக நியமிக்கப்பட்டேன்.
புத்தாக்கம் தொடர்பில் எனது செயல்பாடுகள் முழு அமெரிக்காவிலும் நான் புகழ் பெறுவதற்கு காரணமாகியது. எனது கண்டுபிடிப்புகள் அமெரிக்காவுக்கு மிகவும் முக்கியமானதாக காணப்பட்டது அமெரிக்காவின் விசேட இராணுவ செயலணி மூலம் 2011 ஆம் ஆண்டு மே மாதம் 23ஆம் திகதி ஆப்கானிஸ்தானில் மேற்கொள்ளப்பட்ட அல்கைதா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடன் மீதான தாக்குதல் நடவடிக்கைகளுக்கு எனது புத்தாக்கத்தின் பங்களிப்பு மிக முக்கியமானதாக அமைந்தது .
கடும் இருட்டில் நடைபெற்ற அந்த தாக்குதல் நடவடிக்கையின் போது,
அமெரிக்க இராணுவம் இரவு நேரத்தில் மனிதர்களை மிகத் தெளிவாக இனங்காணக் கூடிய கருவியைக் கொண்டிருந்தது. அது பேராசிரியர் சிவா சிவானந்தனின் கண்டுபிடிப்பில் உருவான ஒன்று. அது மிக உயர் தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு கண்ணாடியாகும். அச்சமயம் முக்கிய சில ஊடகங்கள் அதனை முக்கிய தகவலாக வெளியிட்டிருந்தன. பேராசிரியர் சிவா சிவானந்தனின் ஆராய்ச்சி முயற்சிகள் மிகவும் உயர்தரமானவை.
“எனது ஆய்வு முயற்சிகள் பல சந்தர்ப்பங்களில் தோல்வியடைந்தன. அந்த முயற்சிகள் ஒருபோதும் வெற்றி யளிக்காது என பலரும் தெரிவித்தனர். எனினும் நான் முயற்சியை கைவிடவில்லை.
எனினும் அதன் பிரதிபலன் இன்று அமெரிக்க இராணுவத்திற்கு மட்டுமல்ல ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பல நாடுகளுக்கும் அது தற்போது உறுதுணையாக அமைந்துள்ளது. நான் இந்த முயற்சியை 20 ஆண்டுகளாக மேற்கொண்டு வெற்றி பெற்றேன்.
எந்த ஒரு சாதனையும் மேற்கொள்வதற்கு பல தசாப்த காலங்கள் செல்லலாம். சில செயற்பாடுகளுக்கு 40 வருடங்களும் எடுக்கும்.
எனது அனைத்து நடவடிக்கைகளிலும் எனக்கு அடித்தளமாக அமைந்தது இலங்கையில் நான் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மற்றும் பேராதனை பல்கலைக்கழகத்திலும் பெற்றுக் கொண்ட பலமான கல்விதான்.
எமது நாட்டில் நாம் சிறந்த அடித்தளத்தை பெற்றுக் கொண்டால் உலகில் எங்கு சென்றாலும் வெற்றி பெற முடியும்” என்கிறார் அவர். பேராசிரியர் தொடர்ந்தும் தமது ஆய்வு முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றார்.
(அடுத்த வாரம் தொடரும்)
லோரன்ஸ் செல்வநாயகம்