இ.போ.ச மக்கள் மயப்படுத்தப்பட்ட நாளிலிருந்து இன்று வரைக்கும் அது பொதுமக்களுக்குச் செய்யும் சேவைகள் மதிப்பிட முடியாததாகும். அதிகாலையில் ஆரம்பிக்கும் முதல் பஸ்ஸிலிருந்து இரவில் கடைசி பஸ் வரைக்கும் இ.போ.ச இன்று மிகப்பெரிய பொதுச் சேவையை வழங்கி வருகிறது.
கடந்த காலங்களில் கிராமப்புறங்களில் சேவையில் ஈடுபடுத்தப்பட்ட பல தனியார் பஸ்கள் இ.போ.சபையினால் பயன்படுத்தப்பட்டு ஏலம் விடப்பட்ட பஸ்களாகும். இ.போ.சபையினால் சரியான முறையில் பராமரிக்கப்பட்டு சேவையில் ஈடுபடுத்த முடியாதிருந்தாலும் அவை தனியார் துறைக்கு சிறந்த வருமான வழியாக ஆகியது.
சில இ.போ.சபையின் பஸ்கள் டிப்போக்களிலிருந்து வெளியே இழுத்துச் செல்லப்பட்டு சிறிது தூரம் சென்றதன் பின்னர் உயிர் பெற்றுப் பயணிக்குமளவுக்கு ஊழலும் இ.போ.சபையினுள் காணப்பட்டது. அன்று தொடக்கம் இன்று வரைக்கும் இ.போ.சபைகளின் பஸ்களினால் கிடைக்கும் வருமானத்தினால் இ.போ. சபையினை முன்னெடுத்துச் செல்வதற்கு சிரமமாக இருந்தாலும் அதே துறையில் வருமானத்தை ஈட்டி தனியார் பஸ்கள் இலாபம் ஈட்டும் நிலையில் உள்ளன. இ.போ.ச மற்றும் தனியார் கூட்டு சேவையினையும் கூட முன்னெடுத்துச் சென்றாலும் பஸ்களின் கையிருப்பை முறையாகப் பராமரிக்க முடியாததால், இ.போ.சபைக்கும் மிகவும் கடினமாக இருந்தது.
சீனாவின் ‘யுடோங்’ நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இந்த விசேட பஸ்கள் படிப்படியாக வீதிச் சேவைகளில் ஈடுபடுத்தப்படவில்லை. இந்த பஸ்களை முறையாக பராமரிக்க முடியாது போனதாலும், பஸ்களில் உரிய காலத்தில் மாற்றப்பட வேண்டிய உதிரிப் பாகங்களை பொருத்துவதற்கு முடியாமல் போனதாலும் இந்த நிலை மேலும் தீவிரமடைந்தது.
அதி சொகுசு வகைக்குள் சேராத இந்த பஸ்களும் அதி சொகுசு பஸ்களின் தரத்துக்கு சிறப்பானவைதான்.
இந்த பஸ்களின் பயணத்தின் போது பயணிகள் குலுக்கங்கள் இன்றி பயணித்தனர். அதற்குக் காரணம் இந்த பஸ்களில் காற்று பலூன்கள் பொருத்தப்பட்டிருந்ததாலும், சூப்பர் ‘ஸ்விங்’ அமைப்பு இருந்ததாலுமாகும். சீனாவின் உயர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்பட்ட இந்த பஸ்கள் பொதுநல வாய மாநாட்டுக்கு வருகை தந்த வெளிநாட்டு பிரதிநிதிகளுக்காகவே பயன்படுத்தப்பட்டதற்குக் காரணம் இந்த பஸ்களில் இருந்த அதிவிசேட வசதிகளாகும். பஸ்களில் இருக்கைகளும் விரும்பும் வகையில் சரி செய்யக்கூடியதாக உள்ளது.
அதிவேக நெடுஞ்சாலைகளில் உயர்மட்டத்தில் மக்கள் சேவைகளை வழங்கிய இந்த பஸ்களில் பயணிப்பதற்கு மக்களும் அதிக ஆர்வம் காட்டினர்.
எனினும், இற்றைக்கு ஒன்றரை ஆண்டுகளாக அந்த பஸ்கள் பயன்படுத்தப்படாமல் படிப்படியாக நிறுத்தப்பட்டன. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன சுமார் ஒரு வருடத்துக்கு முன்னர் குறித்த டிப்போவுக்குச் சென்று பார்வையிட்டபோது பொதுநலவாய நாடுகளின் மாநாட்டிற்காகக் கொண்டுவரப்பட்ட மிக விலை உயர்ந்த அதிசொகுசு பஸ்கள் எந்தப் பயனுமில்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததை அவதானித்தார். உதிரிப் பாகங்கள், என்ஜின்கள் போன்ற இயந்திர பாகங்களின் பற்றாக்குறை, அந்நிய செலாவணி பற்றாக்குறை போன்ற விடயங்களைக் கருத்திற் கொண்ட அமைச்சர், அந்த பஸ்களை மீண்டும் சேவையில் ஈடுபடுத்த முடியுமாக இருந்தால், பொது மக்கள் சேவையை அதிகபட்சமாக வழங்க முடியும் என்பதை உணர்ந்தார். கடந்த வருடம் அமைச்சர் சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த போது, பஸ் உற்பத்தி நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி, இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக பஸ்களுக்கு தேவையான உதிரி பாகங்களை சலுகை விலையில் பெற்றுக்கொள்ளும் வழியை எட்டியிருந்தார். எனவே, பஸ்களை பழுதுபார்க்கும் பொறுப்பு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பொறியியல் துறையில் அனுபவம் வாய்ந்த நிபுணரான குஷான் வேகொடபொலவிடம் ஒப்படைக்கப்பட்டது.
அவ்வாறு மறுசீரமைக்கப்பட்ட இலங்கை போக்குவரத்து சபையின் சுற்றுலா போக்குவரத்து சேவைக்கு சொந்தமான பயன்பாட்டிலிருந்து ஒதுக்கப்பட்டிருந்த 17 சொகுசு பஸ்கள் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தலைமையில் கடந்த 31ம் திகதி மீண்டும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டன.
சொகுசு சுற்றுலா போக்குவரத்து சேவைக்குச் சொந்தமான கட்டுபெத்த டிப்போ வளாகத்தில் மறுசீரமைப்புச் செய்யப்பட்ட இந்த பஸ்களின் பழுதுபார்ப்புக்கு 100 இலட்சம் ரூபாவுக்கும் குறைவான செலவே செலவிடப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும். இந்த பஸ்ஸினை அதிவேக நெடுஞ்சாலையில் சேவையில் ஈடுபடுத்துவதன் மூலம் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கும் அதிக வருமானத்தைப் பெற்றுக் கொள்ள முடியும். இதனடிப்படையில் கடந்த செப்டெம்பர் மாதத்தில் 19 மில்லியனாக இருந்த அந்த நிறுவனத்தின் வருமானம் கடந்த ஜனவரி மாதமாகும் போது 42 மில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது.
நாம் இது தொடர்பில் இந்த திட்டத்துக்குப் பொறுப்பாகச் செயற்பட்ட பொறியியலாளரான குஷான் வேகொடபொலவிடம் முதலாவதாகக் கருத்துக் கேட்டோம்.
“இந்நாட்டில் இடம்பெற்ற பொதுநலவாய நாடுகளின் மாநாட்டின் பின்னர் இந்த பஸ்கள் இ.போ.சபை உள்ளிட்ட பல அரச நிறுவனங்களின் உரிமையின் கீழ் அதிவேக நெடுஞ்சாலைகளில் மிகச் சிறப்பான மக்கள் சேவையினை வழங்கியது. எனினும் எந்த ஒரு வாகனத்தினையும் பயன்படுத்தும் போது அதற்கு உதிரிப்பாகங்களின் தேவை ஏற்படும் என்பதை நாம் அனைவரும் அறிவோம். அதேபோன்று பராமரிப்பிலும் சில சில பிரச்சினைகள் தோன்றும்.
அந்த கோட்பாடு இந்த பேருந்துகளுக்கும் பொதுவானது. அவ்வாறே, இந்த பஸ்களுக்கும் சில சில உதிரிப் பாகங்களுக்கான தேவை எழுந்தது. உதாரணமாக, ஒரு பஸ்ஸின் ‘ஸ்டார்ட்டர் மோட்டார்’ பழுதடைந்து, அதை திருத்துமிடத்துக்குக் கொண்டு செல்லும்போது, உதிரிப் பாகத்தைப் பெறுவதற்கான கொள்முதல் செயல்முறை நடைமுறைப்படுத்தப்படும். இ.போ.சபைக்கான உதிரிப் பாகங்களை எடுக்கும்போது அத்தகைய முறையைப் பின்பற்ற வேண்டும். அதற்கு குறைந்தது ஒரு மாதமாவது ஆகும். இதற்கிடையில், மற்றொரு பஸ்ஸில் ‘ஓல்டர்னேட்டர்’ பழுதடைந்து சேவையில் ஈடுபடுத்த முடியாத நிலையில் டிப்போவிற்குக் கொண்டு வரும் போது, ஏற்கனவே பழுதடைந்த பஸ்ஸில் ஓல்டர்னேட்டர் நல்ல நிலையில் இருப்பதால் அதனைக் கழற்றி பின்னர் கொண்டு வரப்பட்ட பஸ்ஸில் பொருத்தி அதனைச் சேவையில் ஈடுபடுத்துவர். அதேபோன்று மற்றொரு பஸ்ஸுக்கு ரேடியேட்டர் தேவைப்பட்டு திருத்துமிடத்துக்கு கொண்டு வரப்படும் போது அதற்கும் முன்னைய பஸ்ஸின் ரேடியேட்டர் கழற்றப்பட்டு பொருத்தப்பட்டு அந்த பஸ்ஸூம் சேவையில் ஈடுபடுத்தப்படும். இது தொடர்பில் தற்போதைய போக்குவரத்து அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன என்னோடு தொடர்பு கொண்டு இந்த பஸ்களை மீண்டும் செயற்படும் நிலைக்கு திருத்தி அமைத்து தருமாறு கோரிக்கை விடுத்தார். ஆரம்பத்தில் எனக்கு விருப்பம் இல்லாத போதிலும் பின்னர் இந்தப் பணியினைப் பொறுப்பேற்றேன் என்றார்.
தாரக விக்ரம் சேகர் தமிழில் - எம். எஸ். முஸப்பிர்