இந்தியாவில் வரப்போகும் மக்களவை தேர்தலில் பா.ஜ.கவுக்கும் காங்கிரஸுக்கும் பலப்பரீட்சையாக இருக்கும் சூழலே தேர்தல் களத்தில் நிலவுகிறது. பா.ஜ.க ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஊழல் புகார்களை வைத்து தங்கள் கூட்டணியில் இல்லாத கட்சிகளை மிரட்டி வருகிறது. காங்கிரஸ் இந்தியா கூட்டணியில் இருக்கும் கட்சிகளை தக்க வைக்க முடியாமல் தடுமாறுகிறது.
இந்தியா கூட்டணி உருவாக காரணமாக இருந்த நிதீஷ்குமார், பா.ஜ.கவுக்குத் தாவியதால், இந்தியா கூட்டணி பலமிழந்து பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சாதகமாக அமையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பா.ஜ.கவை எதிர்க்கும் மாநில கட்சிகளின் மீது பல நெருக்கடிகள் கொடுக்கப்பட்டு வருவதால் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு, தேர்தலில் பின்னடைவை ஏற்படுத்தலாம் என்று அரசியல் நோக்கர்கள் கூறிவருகின்றனர்.
ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சராக இருந்த ஹேமந்த் சோரன் நில மோசடி சம்பந்தப்பட்ட சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கு தொடர்பாக அமுலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டதால் அவர் முதலமைச்சர் பதவியை இராஜிநாமா செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டு, அங்கே ஜே.எம்.எம் கட்சியின் மூத்த தலைவர் சம்பயி முதல்வர் பொறுப்புக்கு வந்திருக்கிறார்.
என் மீது சுமத்தப்பட்ட நில மோசடி வழக்கால் என் பெயரில் நிலம் வாங்கப்பட்டிருப்பது நீருபிக்கப்பட்டால் நான் அரசியலை விட்டே விலகுகிறேன் என்றும், இது பா.ஜ.க அரசின் பழிவாங்கும் நோக்கத்தின் முன்னெடுப்புத்தான் என்றும் ஹேமந்த் சோரன் சவால்விட்டிருக்கிறார்.
டெல்லி முதலமைச்சராக இருக்கும் கேஜ்ரிவால், டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசை கவிழ்க்க பா.ஜ.க முயற்சிக்கிறது. குறிப்பாக ஆம் ஆத்மி கட்சியை விட்டு விலகினால் தலா ரூ 25 கோடி தருவதாக ஏழு ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்களிடம் பேரம் பேசப்பட்டதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். இது உண்மையல்ல, என்று மறுத்த பா.ஜ.க இது பற்றி விசாரிக்க காவல்துறை மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஏற்கனவே ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு அமுலாக்கத்துறையால் கேஜ்ரிவால் விசாரணையில் இருந்து வருகிறார். இது போல பா.ஜ.க ஆட்சியில் இல்லாத மாநில அரசுகளுக்கு பல நெருக்கடிகள் கொடுத்து வருவதை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.
மக்கள் மத்தியிலும் இது பேசு பொருளாக இருந்து வருகிறது. மக்களவைத் தேர்தலிலும் இது எதிரொலிக்கலாம் என்று அரசியல் நோக்கர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். இதனால் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 200 இடங்களில் வெற்றி பெறுவதே, சிரமம் என்றும், கருத்துக் கணிப்பு வெளியாகியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, அண்மையில் மக்களவையில் பேசும்போது மூன்றாவது முறையாகவும் பா.ஜ.க தலைமையிலான அரசே அமையப் போகிறது, எதிர்க்கட்சிகள் தங்கள் இருக்கையிலே பத்திரமாக இருக்க வேண்டுமே தவிர, வேறு ஒன்றும் செய்ய முடியாது என்று கேலியாகவும் கர்வத்துடனும் பேசியிருப்பது எதிர்க்கட்சிகளுக்குள் சினத்தையும், சலசலப்பையும், உண்டாக்கியிருக்கிறது.
இந்தியா கூட்டணியில் இருந்த மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி காங்கிரஸ் கட்சி மீது கடுமையான விமர்சனத்தை முன் வைக்கிறார். குறிப்பாக காங்கிரஸ் கட்சி 300 இடங்களில் போட்டியிட வேண்டும் அப்போதுதான் பா.ஜ.க அரசை வீழ்த்த முடியும் என்று ஆலோசனை கூறினேன். ஆனால், அவர்கள் என் ஆலோசனையை ஏற்பதாக இல்லை. இப்படியே போனால் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் 40 இடங்களிலாவது வெற்றி பெறுமா? என்பது சந்தேகமே என்று தனது கருத்தை முன் வைத்துள்ளார். தேர்தல் நெருங்கும் நிலையில், இந்தியா கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக பல்வேறு கட்சிகளிடையே சுமுக முடிவு எட்டப்படாமலே இருக்கிறது. மேற்குவங்கத்தில் திரிணமுல் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் என்று மம்தா பானர்ஜி அறிவித்து விட்டார். இதேபோல பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சியும் தனித்தே போட்டியிடும் என்று அம்மாநில முதல்வர் பகவந்த் மான் அறிவித்திருக்கிறார். இதனால் இந்தியா கூட்டணியில் தொடர்ந்து குழப்பங்கள் நீடித்து வருகிறது.
இந்நிலையில் இந்தியா கூட்டணி என்பது மக்களவைத் தேர்தலுக்காக மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. எந்த மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்காகவும் அமைக்கப்படவில்லை, என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்திருப்பதால் இந்தியா கூட்டணியில் மேலும் குழப்பத்துக்கு வழிவகுத்துள்ளது.
தேர்தலுக்கு முன்பாகவே இவ்வாறான முரண்பாடுகள் எழுந்துள்ளதால் எதிர்காலத்தில் இவர்கள் என்ன செய்வார்கள் என்று, மக்கள் மத்தியிலும் குழப்பமான மனநிலையே எழுந்துள்ளது. இவ்வாறான குழப்பங்கள் இந்தியா கூட்டணியில் இருப்பது பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்குத்தான் சாதமாக அமையும் என்பதையும் மறுக்க முடியாது.
பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வந்து விடக் கூடாது என்று ராகுல் மேற்கொண்டு வரும் நடை பயணத்துக்கு பல்வேறு தடங்கல்கள் இருந்தாலும், தொடர்ந்து போராட்டத்துடன் நடந்து வருகிறார், இந்தப் போராட்டம் தோல்வியடைந்தால், மோடி அரசால் மக்கள் மேலும் அவதிப்படுவார்கள் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கூறியுள்ளதையும் நாம் புறந்தள்ளிவிடமுடியாது,
ஏற்கனவே மக்கள் பொருளாதர நெருக்கடியாலும், விலைவாசி உயர்வாலும், வேலைவாய்ப்பு இன்மையாலும் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். மக்களுக்காக குரல் கொடுக்கும் எதிர்க்கட்சிகளே இருக்கக் கூடாது என்ற பா.ஜ.க.வின் போக்கை முறியடிக்க வேண்டியதும்அவசியமாக இருக்கிறது. அதேநேரத்தில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி பலமாக இல்லையே என்ற கவலையும் மக்கள் மத்தியில் இருக்கிறது
பா.ஜ.க வெற்றி பெற்றால் சர்வாதிகாரப் போக்கை கடைப் பிடிப்பார்களோ என்ற பயமும். இவர்களை எதிர்த்து போராடி ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வர பலமான கூட்டணி இல்லையே என்ற குழப்பமுமே இந்திய அரசியலில் நிலவுகிறது. ஆனால் பா.ஜ.க.வும், காங்கிரஸும் தங்கள் பலம் என்ன என்று நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திலும் இருக்கின்றனர். இரண்டு கூட்டணிகள் மீதும் மக்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள் என்பதும் உண்மையே. எனினும் தேர்தல் நேரத்தில் சூழல் மாறலாம் என்பது மட்டுமே தற்போதைய நம்பிக்கையாக இருக்கிறது