வர்த்தகப் போக்குவரத்துகளுக்காக தற்போது பயன்படுத்தப்படும் சூயஸ் கால்வாய் உள்ளிட்டவை எதிர்காலத்தில் போதுமானதாக இருக்காது. எனவே, தென்னிந்தியாவுடன் வர்த்தகத்தை எளிதாக்குவதற்காக இலங்கை, இந்தியாவுக்கிடையே புதிய தரைவழித் தொடர்புகளை ஏற்படுத்துவதற்குரிய சாத்தியக்கூறு ஆய்வுகளை மேற்கொண்டு இலங்கையை பிராந்தியத்தின் விநியோக மையமாக நிலை நிறுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
உலகின் பலமான நாடுகள் தமது தலைவிதியை தீர்மானிக்கும் வரை காத்திருக்காமல், தமக்கான பாதையை அமைத்துக்கொள்ளும் இயலுமை இந்து சமுத்திர வலய நாடுகளுக்கு உள்ளதெனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தினார்.
இந்து சமுத்திர வலய நாடுகளின் நம்பிக்கையையும் விழிப்புணர்வையும் மேம்படுத்துவதன் மூலம் பாதுகாப்பான இந்து சமுத்திரத்தை உருவாக்க முடியமெனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
2050ஆம் ஆண்டளவில் இந்தியா, இந்தோனேசியா போன்ற நாடுகளின் மொத்த தேசிய உற்பத்தி 08 மடங்காக அதிகரிக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே, அதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தும் வகையில் நாடுகளுக்கு இடையிலான தொடர்புகளை வலுவூப்படுத்தும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டியது அவசியமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
அவுஸ்திரேலியா பேர்த் நகரில் நடைபெற்ற 07 ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் ஆற்றிய பிரதான உரையிலேயே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்தார்.
இந்து சமுத்திரத்தை அண்டிய நாடுகள் மற்றும் சமுத்திரத்தை பெருமளவில் பயன்படுத்தும் பிற நாடுகளைப் பாதிக்கும் பொதுவான எதிர்பார்ப்புகள் மற்றும் பிரச்சினைகள் குறித்து ஆராயும் 07ஆவது இந்து சமுத்திர மாநாடு அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் நேற்று முன்தினம் ஆரம்பமானதுடன் நேற்றும் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டை “நிலையான மற்றும் நிலைபேறான இந்து சமுத்திரத்தை நோக்கி” என்ற தொனிப்பொருளில் இந்திய வெளியுறவு அமைச்சு மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கத்துடன் இணைந்து இந்திய மன்றம் ஏற்பாடு செய்திருந்தது.
அவுஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் பென்னி வோங், இந்திய வெளியுறவு அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர், சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் டொக்டர் விவியன் பாலகிருஷ்ணன் மற்றும் வெளியுறவு அமைச்சர்கள் உள்ளிட்ட இந்து சமுத்திர நாடுகளின் பிரதிநிதிகள், இந்திய மன்றத்தின் ராம் மாதவ் உள்ளிட்ட பிரதிநிதிகளும் மாநாட்டில் கலந்துகொண்டனர். இந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இந்து சமுத்திரத்தில் நிலவும் முக்கியமான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு விரிவான பிராந்திய திட்டமொன்று அவசியமென்றும், அதனை இந்து சமுத்திர எல்லை நாடுகளின் சங்கமான Indian Ocean Rim Association தலைவர்களினால் மட்டுமே செய்ய முடியும் என்றும் சுட்டிக்காட்டினார்.
கடல் மற்றும் விமான போக்குவரத்துச் சுதந்திரத்துக்கு இடையூறு விளைவிக்காத வர்த்தக நடவடிக்கைகள் தொடர்பிலான ஒழுங்கு விதிகள், காலநிலை நெருக்கடியை கையாள்வது மற்றும் இந்து சமுத்திரத்தின் நிலையான பயன்பாடு தொடர்பான வழிகாட்டல் விதிமுறைகளின் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார். வர்த்தகப் போக்குவரத்துகளுக்காக தற்காலத்தில் பயன்படுத்தப்படும் சூயஸ் கால்வாய் உள்ளிட்டவை எதிர்காலத்தில் போதுமானதாக இருக்காது. எனவே, பிராந்தியத்தின் விநியோக மையம் என்ற வகையில் இலங்கை தென்னிந்தியாவுடன் வர்த்தகத்தை எளிதாக்குவதற்கான புதிய தரைவழித் தொடர்புகளை ஏற்படுத்துவதற்கு முயற்சித்து வருவதாகவும் தெரிவித்தார். அதேபோல், இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மையை பேணுவதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இதேபோன்றே காலநிலை மாற்றத்துக்கான தீர்வுகளைக் கண்டறிவதிலும் கவனம் செலுத்தப்பட வேண்டுமெனவும் தெரிவித்தார். இந்து சமுத்திரத்தின் ஸ்திரத்தன்மைக்காக, 05 வருடங்களுக்குள் சுதந்திரமானதும் சுயாதீனமானதுமான பாலஸ்தீன அரசை நிறுவி, இஸ்ரேல் அரசின் பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கைகளின் மூலம் காஸா பகுதியில் போர் மோதல்களை விரைவாக முடிவுக்குக் கொண்டுவருவது அவசியம் என்றும் ஜனாதிபதி எடுத்துரைத்தார்.