பிரிஸ்பான் கிரிக்கெட் மைதானம், புரியும்படி சொல்வதென்றால் கப்பா அரங்கு என்பது அவுஸ்திரேலியாவின் கோட்டை. அங்கே அவுஸ்திரேலியாவை வீழ்த்துவது இலகுவானதல்ல. இங்கே அவுஸ்திரேலிய அணி 93 ஆண்டுகளாக டெஸ்ட் கிரிக்கெட் ஆடியபோதும் அதனை பத்து தடவைகள் தான் எதிரணியால் வீழ்த்த முடிந்திருக்கிறது. அதுவும் இப்போதைய மேற்கிந்திய தீவுகள் அணியால் வீழ்த்த முடிந்திருப்பது பெரிய ஆச்சரியம்.
கடந்த ஜனவரி 28 ஆம் திகதி நிறைவடைந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி கடைசி விக்கெட்டாக நெதன் லியோனை வீழ்த்தியபோது அரங்கில் இருந்த பிரையன் லாரா மற்றும் கார்ல் ஹூப்பர் மகிழ்ச்சி தாங்காமல் அழுதுவிட்டார்கள்.
மேற்கிந்திய தீவுகள் அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது, அந்த அணி அவுஸ்திரேலிய மண்ணில் 27 ஆண்டுகளில் பெறும் முதல் வெற்றி மாத்திரமல்ல, 21 ஆண்டுகளில் அவுஸ்திரேலியாவை வீழ்த்திய முதல் முறையாகவும் இருந்தது.
கடந்த உலகக் கிண்ண போட்டிக்குக் கூட தகுதி பெறாத மேற்கிந்திய அணி டி20 கிரிக்கெட்டில் மூழ்கி இருந்தபோதே, பெரிதாக அனுபவம், பரீட்சயம் இல்லாத வீரர்களைக் கொண்டு அவுஸ்திரேலியாவை வீழ்த்தி புதிய செய்தி ஒன்றை செல்லியிருக்கிறது.
என்றாலும் இதனை மேற்கிந்திய தீவுகளின் கிரிக்கெட்டின் புதிய திருப்பமாக கூறுவதில் அவசரப்பட முடியாது. ஆனால் அவுஸ்திரேலிய அணிக்கு 216 ஓட்டங்கள் மாத்திரமே வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டபோது, 11.5 ஓவர்களில் 68 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை வீழ்த்தி மேற்கிந்திய தீவுகளின் வெற்றியை சாத்தியமாக்கிய வேகப்பந்து வீச்சாளர் ஷமர் ஜோசப் மீது அனைவரும் அவதானம் செலுத்தி வருகிறார்கள்.
அவரது ஆக்ரோஷமான பந்துவீச்சு கேர்ட்லி அம்ப்ரோஸ், கேர்ட்னி வோல்ஷ், ஜொவல் கானர் காலத்து மேற்கிந்திய தீவுகளை ஞாபகமூட்டுகிறது.
என்றாலும் அந்த 24 வயது வீரரின் பயணம் அத்தனை இலகுவானதல்ல. நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்னர் அவர் உள்ளூர் மட்டத்தில் கூட கிரிக்கெட் ஆடி இருக்க மாட்டார்.
கயானாவில் பின்தங்கிய கிராமமான பரகாராவில் தான் அவர் பிறந்து வளர்ந்தார். 2018 ஆம் ஆண்டிலேயே அந்த கிராமத்திற்கு தொலைபேசி மற்றும் இணையதள வசதி கிடைத்தது. அத்தனை தொலைதூரத்தில் இருக்கும் அந்த கிராமத்தை அடைய வேண்டும் என்றால் நியு அம்ஸ்டர்டாம் துறைமுக நகரில் இருந்து படகில் தான் செல்ல வேண்டும். அதுவும் இரண்டு நாள் பயணம் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் தனது தந்தை மற்றும் சகோரர்களுடன் சேர்ந்து மரம் வெட்டும் வேலையை பார்த்து வந்தார். ஒருநாள் மரம் ஒன்று தன் மீது விழுவது நூலிழையில் தப்பியது. அப்போது மனைவி கர்ப்பமாக இருந்தார். இந்த நிகழ்வே, அவரை வேறு வேலை தேடி ஊரை விட்டு வெளியேற்றியது.
படகில் 121 கிலோமீற்றர் வந்து நியூ அம்ஸ்டர்டாம் நகரை அடைந்த அவர் ஆரம்பத்தில் கட்டட வேலையில் கூலியாளாக இருந்தார். “என்றாலும் எனது வேலையை நான் சரியாகப் பார்க்கவில்லை. இந்த வேலை அதிக உயரத்தில் இருந்தது, நான் உயரத்துக்குப் பயந்தேன். எனவே அந்த வேலையை விட்டு விட்டேன்” என்று தனது கடந்த காலம் பற்றி விளையாட்டு இணையதளம் ஒன்றுக்கு கூறினார் ஷமர் ஜோசப்.
பின்னர் அவர் பாதுகாவலர் வேலைக்குப் போனார். ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வேலை. இதில் கிரிக்கெட் ஆடுவதற்கு எங்கே நேரம்! “என்றாலும் பாதுகாவலர் ஒருவராக வேலைபார்ப்பதையிட்டு நான் வருந்தவில்லை. குடும்பத்தை காப்பற்றுவதற்கு போதுமான பணம் கிடைத்தது” என்கிறார்.
ஜோசபின் கிரிக்கெட் வாழ்வு என்பது அது வரை ஊர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பும் பழைய கிரிக்கெட் போட்டிகளில் வோல்ஷ், அம்ரோஸ் போன்ற வீரர்களின் ஆட்டங்களை பார்ப்பது, உருண்டையான பழங்களை பந்துபோல் வீசி பயிற்சி செய்வதுமாகவே இருந்து. அவ்வப்போது டேப் சுத்தப்பட்ட பந்திலும் கிரிக்கெட் ஆடுவார்.
ஆனால் நியூ அம்ஸ்டர்டாமில் மேற்கிந்திய தீவுகளின் சகலதுறை வீரர் ரொமாரியோ ஜோசப் அண்டை வீட்டுக்காரராக கிடைத்தது அவரின் வாழ்வில் முக்கிய தருணமாக இருந்தது. ஜோசப்பிடம் வித்தியாசத்தைக் கண்ட ரொமாரியோ அவரை கயானா கிரிக்கெட் அணிக்கு அறிமுகம் செய்தார். இதனால் அவருக்கு தேசிய அணி வீரர்களுடனும் பயிற்சி பெற வாய்ப்புக் கிடைத்தது.
இதனால் அவருக்கு அம்ரோஸினால் நடத்தப்படும் கிரிக்கெட் பயிற்சி முகாமில் பங்கேற்க வாய்ப்புக் கிடைத்தது.
“கேர்ட்லி நான் பந்துவீசுவதை கண்டார். அவர் என் தோளில் தட்டினார். அடுத்த ஆண்டு கயானா அணிக்கு நான் ஆடுவதை பார்க்க வேண்டும் என்ற அவர் கூறினார். பின்னர் பயிற்சிப் போட்டி ஒன்றில் நான் எட்டு விக்கெட்டுகளை வீழ்த்தியதை அடுத்து முதல் முறை நான் அணிக்கு அழைக்கப்பட்டேன்” என்றார் ஜோசப்.
முதல்தர கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்திலேயே அவர் 13 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். கரீபியன் பரீமியர் லீக்கில் வலைப்பந்து வீச்சாளராக பங்கேற்றார்.
கடந்த ஆண்டு பெப்ரவரியில் அவர் கயானா அணிக்கும் முதல்தர போட்டிகளில் ஆடுவதற்கு புதுமுக வீரராகவே அழைக்கப்பட்டிருந்தார். என்றாலும் தனது கிரிக்கெட் திடுதிடுப்பு முன்னேற்றத்திற்கு என்ன காரணம் என்று அவருக்கே தெரியாது.
“எனது பந்துவீச்சு இயற்கையானதா அல்லது பயிற்சியால் பெற்றதா என்று சிலர் கேட்கிறார்கள். பயிற்சி என்றால் என்னவென்று கூட எனக்குத் தெரியாது. இயற்கையானது என்று நான் கூறுவேன். நான் ஓடுவேன். ஆனால் ஓடுவது உடற்தகுதிக்கான பயிற்சி என்பது எனக்குத் தெரியாது. நான் முதல்தர கிரிக்கெட்டில் ஆடும்போது, கோன்கள் மற்றும் பொருட்களை வைத்து ஓடுவோம். அது என்னவென்று கூட எனக்குத் தெரிந்திருக்கவில்லை” என்கிறார். 2023 பெப்ரவரி 11 ஆம் திகதி பார்படோஸ் அணிக்கு எதிரான போட்டி தான் அவரது கன்னி முதல் தர ஆட்டம். பின்னர் கரீபியன் பிரிமீயர் லீக்கில் காயமடைந்த கிமோ போலுக்கு பதில் கயானா அமேசன் வொரியர்ஸ் அணிக்காக அழைக்கப்பட்டார்.
அனைவரதும் அவதானத்தை ஈர்த்த ஜோசப், அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கு தேர்வு செய்யப்பட்்ட மேற்கிந்திய தீவுகள் அணியில் இடம்பெற்ற ஏழு புதுமுக வீரர்களில் ஒருவராக அழைக்கப்பட்டார்.
அடிலெய்ட்டில் கடந்த ஜனவரி 17 ஆம் திகதி ஆரம்பமான அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் முதல் முறை பந்துவீச அழைக்கப்பட்ட ஜோசப் முதல் பந்திலேயே ஸ்டீபன் ஸ்மித்தின் விக்கெட்டை வீழ்த்தினார்.
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இதற்கு முன்னர் 22 வீரர்கள் தனது கன்னி டெஸ்டில் முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்தி இருந்தபோதும், ஸ்டீபன் ஸ்மித் போன்ற முன்னணி துடுப்பாட்ட வீரர் ஒருவரின் விக்கெட்டை வீழ்த்துவது சிறப்பானது.
மேற்கிந்திய தீவுகளின் கிரிக்கெட்டுக்கு தனி மரபு இருந்தபோதும், அந்த மரபு அருகி வருவது தான் இன்றைய பெரும் கவலை. பொருளாதார நெருக்கடி ஒரு பக்கம், பணத்துக்காக உலகெங்கும் நடக்கும் டி20 லீக் கிரிக்கெட்டில் அந்த பிராந்தியத்தின் கிரிக்கெட் திறமை குவிக்கப்படுவது மறுபக்கம் இருக்க மேற்கிந்திய தீவுகள் அணி என்பது கிழட்டுச் சிங்கமாக மாறிவிட்டது.
“டி20 கிரிக்கெட்டுக்கு மத்தியில் டெஸ்ட் கிரிக்கெட் ஆடக் கூடிய நேரமும் வரக்கூடும். ஆனால் எனக்கு எத்தனை பணம் வந்தாலும் காரியமில்லை மேற்கிந்திய தீவுக்காக ஆட நான் எப்போதுமே தயாராக இருக்கிறேன். இதனைக் கூற நான் பயப்படப்போவதில்லை” என்றார் ஜோசப்.
மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் முன்னேற ஜோசப்பின் இந்த உறுதி தான் முக்கியம்.