விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களூடாக நாட்டுக்குள் வரும் நபர்கள் போன்று வான் மற்றும் கடல் மார்க்கங்கள் வழியாக எல்லை மீறலில் ஈடுபடுகின்றார்களா? என்பதை உடனடியாக அறிவிக்கும் வகையிலான நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய எல்லைக் கட்டுப்பாட்டு கட்டமைப்பொன்றை இலங்கைக்கு வழங்க அமெரிக்கா விருப்பம் தெரிவித்துள்ளது.
பாதுகாப்புத் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் ஆகியோரின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே, அமெரிக்க தூதுக்குழுவினர் இதனைத் தெரிவித்துள்ளனர்.
எல்லைக் கட்டுப்பாட்டு கட்டமைப்பை இலவசமாக பெற்றுக்கொடுப்பது தொடர்பாக இந்தக் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டதுடன், இதன் உதவியுடன் நாட்டுக்குள் நுழைபவர்கள் மற்றும் நாட்டிலிருந்து வெளியேறுபவர்களை இலகுவில் அடையாளம் காண முடியுமென்றும் தெரிவிக்கப்பட்டது.
பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடைய நபர்கள் பற்றிய தகவல்கள் மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் பற்றிய தகவல்களை இந்தக் கட்டமைப்பின் மூலம் தானாகவே அடையாளம் காணக்கூடிய வசதி உள்ளமை தொடர்பாகவும் குற்றச்செயலை புரிந்துவிட்டு நாட்டை விட்டு தப்பிச்செல்ல முற்படுபவர்களை இந்தக் கட்டமைப்பின் உதவியுடன் தடுப்பது தொடர்பாகவும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
இதனை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டதுடன், இது எமக்கு உகந்ததா? அல்லது இல்லையா? என்பது தொடர்பாக அரசாங்கம் கவனத்தில் கொள்வது தொடர்பாகவும் இந்தக் கலந்துரையாடலின் போது ஆராயப்பட்டது.