இலங்கையின் 76ஆவது தேசிய சுதந்திர தின பிரதான நிகழ்வு இன்று கொழும்பு காலி முகத்திடலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
தேசத்தின் அபிமானத்தை பாதுகாக்கும் வகையில் வழக்கம் போன்று எவ்வித குறைபாடுகளுமின்றி, கம்பீரமாகவும் எளிமையான முறையிலும் இந்த நிகழ்வை நடத்த சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டது.
இம்முறை நடைபெறவுள்ள சுதந்திர தின பிரதான நிகழ்வின் அணிவகுப்பில் ஆறாயிரத்துக்கும் அதிகமான முப்படை வீரர்கள், பொலிஸார் மற்றும் சிவில் பாதுகாப்புப் படைவீரர்கள் கலந்துகொள்வர்.
ஏழு தசாப்த தேரவாத பௌத்த தொடர்பை வலுப்படுத்தும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினுடைய விசேட அழைப்பின் பேரில் தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் விசேட அதிதியாக இந்நிகழ்வில் கலந்து சிறப்பிக்கின்றமை இம்முறை விசேட அம்சமாகும்.
இது இலங்கை, உலக நாடுகளுடன் கொண்டுள்ள சிறந்த நட்புறவையும் வெளிநாட்டு உறவின் பலத்தையும் காண்பிக்கிறது.
பிரதமர் தினேஷ் குணவர்தன, முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன, சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, உள்நாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன், மேல் மாகாண ஆளுநர் மார்ஷல் ஒப் த எயார்போஸ் ரொஷான் குணதிலக, அட்மிரல் ஒப் த பிலீட் வசந்த கரண்ணாகொட, ஜனாதிபதியின் செயலாளர் ஈ.எம்.எஸ்.பீ.ஏக்கநாயக்க, பிரதமரின் செயலாளர் டீ .எம்.அநுர திஸாநாயக்க, பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரட்ண, பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரி ஜெனரல் சவேந்திர சில்வா, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விகும் லியனகே, கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா, விமானப்படை தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ, பதில் பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னகோன் உட்பட அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண ஆளுநர்கள், முதலமைச்சர்கள், உள்நாட்டு, வெளிநாட்டு தூதுவர்கள், இராஜதந்திரிகள், முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து சிறப்பிப்பர்.
சுதந்திர தின பிரதான நிகழ்வையிட்டு கொழும்பு காலி முகத்திடல் உட்பட அதனை அண்டிய பிரதேசம் எங்கும் தேசிய கொடி மற்றும் வர்ண கொடிகள் பறக்கவிடப்பட்டு அலங்கரிக்கப்பட்டு காணப்படுவதுடன், இந்தப் பிரதேசம் எங்கும் விழாக்கோலம் பூண்டுள்ளது.
மேற்படி இறுதி ஒத்திகைகளை நேற்று முன்தினம் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரட்ண தலைமையில் முப்படை தளபதிகள் மற்றும் அமைச்சின் உயர் அதிகாரிகள் பார்வையிட்டதுடன், தேவையான ஆலோசனையும் வழங்கினர்.
இம்முறை சுதந்திர தின பிரதான அணிவகுப்புடன் விமானப் படையின் வான் சாகசங்கள் இன்றைய நிகழ்வை மேலும் அலங்கரிக்கும் வகையிலும், தமது பலத்தையும் தரத்தையும் வெளிக் காண்பிக்கும் வகையிலும் அமையும்.
முப்படையினர், பொலிஸ், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், சிவில் பாதுகாப்புப் படையினர் மற்றும் தேசிய மாணவர் படையைச் சேர்ந்த சுமார் 6,300 பேர் கலந்துகொள்கின்றனர். இவர்களில் இராணுவத்தைச் சேரந்து 3,163 பேரும், கடற்படையைச் சேர்ந்த 950 பேரும், விமானப் படையைச் சேர்ந்த 740 பேரும் 336 பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த 504 பேரும் சிவில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 380 பேரும் தேசிய மாணவர் படையைச் சேர்ந்த 551 பேரும் அடங்குவர்.
காலையில் ஜனாதிபதியின் வருகையை தொடர்ந்து சுதந்திர தின பிரதான நிகழ்வுகள் ஆரம்பிக்கப்படும்.
தேசிய கொடியை சம்பிரதாய முறையில் ஏற்றி ஜனாதிபதி சுதந்திர தின பிரதான நிகழ்வை ஆரம்பித்து வைப்பார். அத்துடன் ஜனாதிபதிக்கு மரியாதை நிமித்தம் 21 பீரங்கி வேட்டுகள் தீர்க்கப்படும்.
இம்முறையும் வழமை போன்று தேசியகீதம் சிங்கள, தமிழ், முஸ்லிம் பாடசாலைகளின் 100 மாணவ, மாணவிகளால் இசைக்கப்படும். ஜயமங்கள கீதமும் இசைக்கப்படும்.
இலங்கை இராணுவத்தின் மத்திய பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் ரோஹித்த அலுவிஹார சுதந்திர தின முப்படை பிரதான அணிவகுப்பின் கட்டளை தளபதியாக செயற்படுவார்.
இராணுவ அணிவகுப்பில் இராணுவத்தின் ஆயுதங்கள், கணரக கவச வாகனங்கள், யுத்த தளபாடங்கள், உபகரணங்கள், ஆட்டிலரி, பீரங்கி தாங்கிய வாகனங்கள், மோப்பநாய்கள், பொறியியல் உபகரணங்கள் உட்பட யுத்த காலகட்டத்தில் பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் இராணுவம் பயன்படுத்தும் பல்வேறு வாகனங்களும் அணிவகுத்து செல்லும்.
அதேபோன்று கடற்படையின் பல்வேறு வகையான பிரிவினர் அணிவகுப்பில் கலந்துகொள்வர். இவர்களில் கடற்படையின் விசேட படகு பிரிவினர், மீட்பு பிரிவினர், மெரைன் படைப் பிரிவினர், பெண்கள் படைப்பிரிவினர் இதில் அடங்குவர். கொழும்பு காலி முகத்திடல் மற்றும் அதனை அண்டிய வான்பரப்பில் விமானப்படையின் பல்வேறு ரக 19 விமானங்கள், ஹெலிகொப்டர்கள், தாக்குதல் விமானங்கள் தேசியகொடியை பறக்க விட்ட நிலையில் வானில் சாகசங்களை காண்பித்த வண்ணம் அணிவகுத்து பறந்துச் செல்லும்.
எப் 7 ரக தாக்குதல் விமானங்களும், எம் ஏ 60, வை 12 ரக விமானங்களும், பெல் 412, பெல் 212, எம்ஐ 17 ரக ஹெலிகொப்டர்களும் கொழும்பு வான்பரப்பில் தமது சாகங்களை காண்பிக்கும்.
ஸாதிக் ஷிஹான்