அரசாங்கத்துக்கு சொந்தமான இரண்டு கட்டடங்களை சிறைச்சாலைகளாக மாற்றியமைக்க நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சு தீர்மானித்துள்ளதாக, அமைச்சர் விஜேயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.
தற்போது சிறைச்சாலைகளில் ஏற்பட்டுள்ள இடநெருக்கடிக்கு தீர்வாகவே இந்நடவடிக்கையை எடுப்பதாகவும் நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.
ஹெந்தல பிரதேசத்திலுள்ள சிறுவர் வைத்தியசாலை கட்டடத்தையும் மட்டக்களப்பிலுள்ள பழைய வைத்தியசாலை கட்டடத்தையும் இதற்காக பயன்படுத்தவுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், இக்கட்டடங்களை சிறைச்சாலைகளாக மாற்றி, கைதிகளை தங்கவைப்பது தொடர்பாக சுகாதார அமைச்சுடன் கலந்துரையாடியதாகவும் தெரிவித்தார்.
தற்போது கைதிகளின் எண்ணிக்கை 32 ஆயிரத்துக்கும் அதிகமாயினும், சிறைச்சாலைகளில் சுமார் 13 ஆயிரம் கைதிகளை தடுத்து வைப்பதற்கான இடவசதியே உள்ளதாகவும், நீதி அமைச்சு தெரிவித்தது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சால் ஆரம்பிக்கப்பட்டுள்ள ‘யுக்திய’ நடவடிக்கையினால் நாளாந்தம் பலர் கைதாவதுடன், இவர்களில் பலர் நீதிமன்ற உத்தரவுக்கமைய சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்படுகின்றனர்.
இதனாலேயே சிறைச்சாலைகளில் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும், நீதி அமைச்சு தெரிவித்தது.