“சிம்மம்குமார்” இசைத்துறை ஆளுமைகளில் ஒருவர். இசைத்துறையில் இவர் கொண்ட ஈடுபாடே 11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் கீதத்துக்கு இசையமைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். பழகுவதற்கு அருமையான மனிதர். தன் துறை சார்ந்து அவர் பெற்ற அனுபவங்கள் ஏராளம். பதினோராம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு ஆரம்ப நிகழ்விலேயே இவர்தான் சிம்மம்குமார் என அறியமுடிந்தது.
அரங்கில் பெரிய திரையில் மாநாட்டு கீதம் ஒளிபரப்பிய போது அப் பாடல் காட்சியில் தோன்றுகிறார். தமிழர்களின் ஆதி இசைக்கருவியான தப்பிசையை இசைக்கும் கலைஞராக தோன்றுகிறார். உணவு வேளைகள், சுற்றுலாத் தலங்களில் சந்தித்துக் கொண்ட சந்தர்ப்பங்களில் இனிமையாக பேசிக்கொண்டார்.
சுற்றுலாத்தலங்களில் எம் பார்வைக்கு உட்பட்ட விடயங்கள் தொடர்பில் அவ்வப்போது பேசிய நபர்தானே என ஊகித்துக்கொண்டோம். பின்னர் இடைவேளையில் கண்டு அவரின் பணியையும், திறமையையும் வாழ்த்தினேன். இவ்வாறே அரங்கில் சிம்மம்குமாரை பலர் வாழ்த்துவதையும் அவதானிக்க முடிந்தது. இவ்வாறான நிகழ்வில் பிரபலங்களை மாத்திரம் நோக்காமல், ஆர்ப்பாட்டம் இல்லாத ஆளுமை ஒருவரை பயன்படுத்தியமை தொடர்பில் திருப்தியாக உணர முடிந்தது.
கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே, வள்ளம் குக்கிராமத்தில் 16.04.1070இல் இரத்தின முனியப்பன், சரோஜா தம்பதியினருக்கு மகனாக பிறக்கிறார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இசைத்துறையில் கல்வி பயின்றவர். இசை ஆய்வாளராக தன்னை ஆளுமைப்படுத்திக் கொள்கிறார். இசை மேதை பாலமுரளி கிருஷ்ணா, அவரின் துணைவியார் அபையாம்பிகா ஆகியோரிடமும் இசை பயின்றவர். தினமணி நாளிதழில் “இசை விமர்சகர்” ஆக பணியாற்றியவர். பல யூடியூப் தளங்களில் இவருடைய இசை ஆளுமையை தரிசிக்கலாம். புதுச்சேரி அரவிந்தர் அன்னைக்காக புஸ்பாஞ்சலி, குருவாயூரப்பனுக்காக ஸ்ரீபாதம் ஆகிய பக்தி ஆல்பங்களை இசையமைத்து வெளியிட்டவர். கடந்த வருடம் சீரடி சாய்பாபாவின் மனமுருகும் பாடல்களைக் கொண்டு “ஓரடி, ஈரடி, சீரடி” எனும் தலைப்பிலான முயற்சி பெரிதும் வரவேற்பை பெற்றதாக அமைகிறது. இவ் ஆல்பத்திற்கு இவரே இசையமைத்து பாடியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. திருப்புகழ் தொடர்பில் நீண்டகாலமாக ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். தற்போது திருப்புகழ் பாடல்களுக்கு இசையமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
திரைத்துறையோடு அவ்வப்போது கவனத்தை செலுத்துவதையும் அறிய முடிகிறது. 2004ஆம் வருடம் வெளியான “செம ரகளை” திரைப்படம் இவரது இசையமைப்பிலேயே வெளியாகியமை குறிப்பிடத்தக்கது. ப்ளீஸ் ஓப்பன் த டோர்” உட்பட மேலும் இரண்டு தமிழ்த் திரைப்படங்களுக்கு தற்போது இசையமைத்து வருகிறார். “குரல் வளம்” சார்ந்த பயிற்சி வகுப்புகள் ஊடாக இசை ஆளுமைகளை வளர்த்து வருகிறார். இப் பயிற்சி வகுப்புகள் நேரடியாகவும் ஒன்லைன் ஊடாகவும் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
“குமார் மியூசிக் கலரி” எனும் யூடியூப் செனல் மூலம் கர்நாடக இராக பின்னணியை விளக்கும் திரையிசை பாடல்கள் உட்பட பல பாடல்களின் இசை நுட்பங்களை ஆராய்ந்து வருகிறார். “கௌமாரநாதம்” எனும் ஆன்மீக மாத இதழின் ஆசிரியர். இவ் இதழ் ஊடாக இசைத்துறையின் வளர்ச்சிக்கு அன்னார் பெரிதும் பங்காற்றுவதை அறியமுடிகிறது. திரையிசை, ஆன்மீக இசைத்துறைகளுக்கு சிம்மம்குமாரின் ஈடுபாடு மிகத் தனித்துவ தன்மையை உணர்த்துவதாக அமைகிறது.
இசையமைப்பாளர் இளையராஜா மீது அதீத ஈடுபாடு கொண்டவர். இத் துறையில் தனது வழிகாட்டியாக இளையராஜாவே விளங்குகிறார் என்பதையும் தெளிவாக அவரது உரையாடலில் வலியுறுத்துகிறார். நடிப்புலகில் சிவாஜி கணேசனைப் போல, எல்லா வயதினருக்கும் பாடல் புனைந்ததில் கண்ணதாசனின் முன் மாதிரியைப் போல, தமிழிசைப் பாடல்களின் இசையமைப்பிற்கு இளையராஜாவே எல்லா இசையமைப்பாளர்களுக்கும் ஆதர்சமாக விளங்குகிறார். இத்துறையில் வழிகாட்டுவதில் இளையராஜாவிற்கு நிகர் வேறு யாருமல்ல என்ற கருத்து நிலையை தன்னகத்தே கொண்டவராக சிம்மம்குமார் விளங்குகிறார். தமிழிசைத்துறையில் ஓர் வழிகாட்டியாகவும், இசைத்துறைக்கு ஓர் அகராதியாகவும் இளையராஜா விளங்குகிறார், எனவும் இளையராஜா மீதான புரிதலை இவரில் காணலாம். தமிழ் நாடு எழுபதுகளில் ஹிந்தி பாடல்களின் ஆக்கிரமிப்பைக்கொண்டதாகவே அமைந்திருந்தது. ஹிந்தி எதிர்ப்பு வாதத்திற்கு சமூக அமைப்புகள், அரசியல் கட்சிகள் என்பனவும் குரல் கொடுத்த காலம். தமிழ் மொழி அமுலாக்கத்துக்காக இசை வழியான புரட்சியை முன்னெடுத்ததில் இளையராஜா முன்னுதாரணமாக திகழ்கிறார். ஹிந்திப் பாடல்களே அனைவராலும் விரும்பப்பட்ட நிலையில் அந்த மோகத்தில் இருந்து அதனை உடைத்தெறிந்து தமிழ் பாடல்களில் ஆர்வத்தை ஏற்படுத்திய பெருமகனாகவே இளையராஜா அமைகிறார். தனி ஒருவராக இல்லாமல் ஓர் இயக்கமாகவே மாறி செயற்பட்டார் என்பதை வலியுறுத்துவதாகவே சிம்மம்குமாருடனான உரையாடல் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இளையராஜாவின் “அன்னக்கிளி” “கவிக்குயில்” ஆகிய திரைப்படப்பாடல்களே தமிழ் நாட்டில் மீளவும் தமிழ் பாடல்கள் மீதான ஆர்வத்தை தூண்டுவதற்கு அடித்தளமாக அமைந்தன. இதுவரையில் இந்தி இசையமைப்பாளர்களின் புலமையால் கட்டுண்டிருந்த தமிழக இசை ரசிகர்களுக்கு தமிழிசை மீதான நம்பிக்கையை ஏற்படுத்தியர். இந் நிலையில் இருந்து இன்று வரை தடம் பதித்து முன்நகரும் இளையராஜா பல இசையமைப்பாளர்களில் தாக்கம் செலுத்தி வருகின்றமை கவனிக்கத்தக்கது. எழுபதுகளின் பின்னர் அன்னக்கிளியைத் தொடர்ந்து தமிழ் சினிமாப் பாடல்கள் கவனம் பெறுவதில் இயக்குனர்கள், பாடலாசிரியர்கள், பாடகர்கள் ஒருசேர இளையராஜாவின் புலமையோடு ஒத்துழைக்கும் பாங்கு சிறப்பிற்குரியது. எண்பதுகள் இளையராஜாவின் பொற்காலம் என்பார்கள்.
தொண்ணூறுகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் செல்வாக்கு தமிழ் சினிமாவில் எழுச்சி பெறுகின்ற நிலையிலும் இளையராஜாவின் இசையும் மிகுந்த செல்வாக்கு நிலையிலிருந்தமை குறிப்பிடத்தக்கது. திரைப்படங்களை பார்க்கின்ற போது இளையராஜாவின் பின்னணி இசை அப் படங்களின் வெற்றிக்கு வழிகோலியுள்ளது. இவருடைய இசைக்காகவே நீண்ட நாட்கள் ஓடிய படங்கள் உள்ளன. சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்ப இசையை லாவகமாக பயன்படுத்துவதில் மிகத் தனித்துவ தன்மையை பேணுபவர். அவ்வாறே பாடகர்களுக்கு ஏற்ப இசையமைப்பை தீர்மானிப்பதிலும் சிறந்த தேர்ச்சியை பெற்றவர். கர்நாடக. மேலைத்தேய, பொப்பிசை, சிம்பொனி ஆகிய இசைகளை ஒரு சேரவும், தனித்த நிலையிலும் பயன்படுத்துவதிலும் இளையராஜாவின் முன்மாதிரி அவதானத்திற்குரியது. பாடகர்களுக்கு ஏற்றவாறு பாடல்களை தெரிவு செய்வதிலும், இசை வடிவத்தை அமைப்பதிலும் அவர் பின்பற்றிய நுட்பம் மிகத் தனித்துவமானது. பல பாடகர்களை அடையாளப்படுத்துவதில் இவருடைய இசையமைப்பு செல்வாக்கு செலுத்தியுள்ளது. பக்தியிசை, தனியிசை, திரையிசை பாடல்களில் தனித்துவத்தை பேணுவதில் இசையமைப்பாளர் என்பதற்கப்பால், பாடகர் என்றவகையிலும் இளையராஜா இமயமாக திகழ்கிறார். பல பாடலிசை போட்டிகளில் வெற்றியைத் தீர்மானிக்கும் பாடல்கள் இளையராஜாவின் இசையில் உருவான பாடல்களாக அமைவது உற்று நோக்கத்தக்கது. இளையராஜா மீதான பக்தி உணர்வை சிம்மம்குமாரில் அவருடனான உரையாடல் மூலம் நன்கு உணர்ந்துகொள்ள முடிந்தது.
பதினோராம் உலகத் தமிழ் ஆய்வு மாநாட்டுக்கு சிறப்புரையாற்றுவதற்கே சிம்மம்குமார் அழைக்கப்பட்டிருந்தார். அவர் அரங்கில் “இசையென்ற இன்ப வெள்ளம்” என்ற தலைப்பில் ஆற்றிய சிறப்புரை பின்வரும் விளக்கத்துடன் பேராளர்களின் கவனத்தை ஈர்த்து நின்றது. உலக இயங்கியலின் ஒப்பற்ற பொது மொழியாக இசை நிலைபெற்று நிற்கிறது. “ஆராபியுஸ்” என்ற கிரேக்க இசைக் கலைஞனின் இசைபற்றி “சேக்ஷ்பியர்” பின்வருமாறு எடுத்துரைக்கிறார்.
மலையும் மரமும் அவனது பாட்டுக்கு
தலைகுனிந்தன,
பூக்களும் இலைகளும் சூரியனும் – தனது
இயற்கை நிலையிலிருந்து திரிந்தன.
கல் மனதையும் கரைக்க வல்லது இசை. காதால் கேட்டு இன்ப உணர்ச்சியை தரவல்லது. மனிதர்களும் மற்றைய உயிரினங்களும் மெய்மறந்து ரசிக்கும் ஆற்றலை ஏற்படுத்தும் தன்மையைக் கொண்டது. இசை ஊடாக தமிழை வளர்த்தவர்களில் ஞானசம்பந்தர் உட்பட்ட நான்கு குரவர்களும் திகழ்கிறார்கள். அகம்பாவத்தை ஒழிக்கும் ஆற்றல் பெற்றதாக இசை விளங்குகிறது. ரசம் அல்லது உணர்ச்சியைத் தரவல்லது இசை. ரசத்தில் கானரசம், நவரசம் என இரு வகைப்படுகிறது. சப்தஸ்வரங்கள் எல்லா இசை வடிவங்களுக்கும் பொதுவானது. சங்கீத சாகித்திய சேர்க்கைகளினால் நவரசம் உருவாகிறது. குழந்தை, பசு, சர்ப்பம் ஆகியன கான ரசத்துக்கு உணர்ச்சியை வெளிப்படுத்தக் கூடியனவாகும். வாத்தியம், இராகம், கிருதிகள் என்பவற்றால் ஏற்படுவது கானரசமாகும். கொண்டை வாத்தியங்களின் இசையால் போருணர்வு உந்தப்படுகிறது. காந்தர்வ வேதம் கடவுள் வழிபாடு, கடவுளை அறிதல் போன்ற விடயங்களுக்கு ஊடகமாக அமைகிறது. கைவிரல்கள் இசைக் கருவிகள் கையாள்வதற்காகவே நீளமாக அமையப்பெற்றிருப்பதாக கருதப்படுகிறது. இவ்வாறே உயிர்களின் தேகங்கள் இசை சம்பந்தமான தத்துவங்களை போதிக்கும் நிலையினையே வலியுறுத்துகிறது. குரல் காற்று வாத்தியங்களின் அமைப்பையும், காது தோல் கருவிகளின் அமைப்பையும், உட்காது தந்தி வாத்திங்களின் அமைப்பையுமே கொண்டமைந்துள்ளன. இவ் வாக்கியங்கள் உடல் அமைப்பின் தன்மைகளை அவதானித்த வகையிலேயே அமைக்கப்பட்டுள்ளது எனலாம். வாழ்வியலோடு இரண்டறக் கலந்த நிலையிலேயே இசை முக்கியத்துவம் பெறுகிறது. பிறப்பு தொடக்கம் அடுத்தகட்ட நகர்வுகளைத் தொடர்ந்து மரணம் வரையில் இசை சம்மதப்படுகிறது. தொழிலோடு தொடர்புபட்ட பாடல்களையும், வழிபாட்டு மரபுகளோடும், பொழுதுபோக்கு துறைகளிலும் நாட்டுப்புறவுத் தன்மைகளோடும் இசை தொடர்புபடுகிறது.
பயணம் தொடரும்….