ஜனநாயக அமைப்பில் நீதிமன்றம் மிக முக்கியமான இடத்தை வகிக்கிறது. அதனால்தான் நீதிமன்றங்கள் தூய்மையுடனும் களங்கமற்றதாகவும் செயல்பட வேண்டும் எனவும் முடிந்தவரை விசாரணைகள் துரிதமாக நடைபெற்று நீதி விரைவாக நிலைநாட்டப்பட வேண்டுமென நீதித்துறை சார்ந்தோர் அடிக்கடி தமது உரைகளில் தொட்டுக் காட்டுவது வழக்கம். திக்கற்றவனுக்கு தெய்வமே துணை என்று சொல்வார்கள். நடைமுறையில் திக்கற்றவர்களுக்கு நீதிமன்றங்களே துணை.
இலங்கை நீதிமன்றங்கள் மிக முக்கிய தீர்ப்புகளை வழங்கியுள்ளன.
1976 மே 21ஆம் திகதி யாழ். பொலிசாரினால் அ. அமிர்தலிங்கம், வி.என்.நவரட்ணம், கே.பி.ரட்ணம், கே.துரைரட்ணம் மற்றும் எம். சிவசிதம்பரம் ஆகியோர் கைது செய்யப்பட்டு கொழும்புக்கு அழைத்துவரப்பட்டனர். குடியரசு தின விழாவில் மக்கள் கலந்து கொள்ளக் கூடாது என்ற துண்டுப் பிரசுரங்களை விநியோகித்ததையடுத்தே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இது தொடர்பான வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்துக்கு விசாரணைக்காக வந்தபோது ஜி.ஜி.பொன்னம்பலத்தின் தலைமையில் 61 சட்டத்தரணிகள் சந்தேக நபர்களின் சார்பாக நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர். இவ்வழக்கு ட்ரயல் எட் பார் முறையின் கீழ் விசாரிக்கப்பட வேண்டும் என்பதால் அன்று நடைமுறையில் இருந்த அவசரகால சட்டத்தில் ஒரு திருத்தம் செய்யப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டது. இதன் அடிப்படையில் பிரதம நீதியமைச்சர் மூன்று உயர்நீதிமன்ற நீதியரசர்கள் அடங்கிய ட்ரயல் அட்பார் அமர்வை ஏற்படுத்தினார். ஜூரர் முறையின் கீழ் விசாரித்தால் தமிழ் ஜூரர் ஒருவரையும் நியமிக்க வேண்டியிருக்கும் என்பதால் அன்றைய நீதியமைச்சர் இந்த மாற்று ஏற்பாட்டைச் செய்திருந்தார்.
அரசு தரப்பில் அன்றைய சட்ட மா அதிபர் சிவா பசுபதி வழக்கைத் தாக்கல் செய்திருந்தார். 1976 ஜூன் 18ஆம் திகதி வழக்கு ஆரம்பமானது. நீங்கள் குற்றவாளியா, சுத்தவாளியா என நீதிமன்றத்தின் கேட்கப்படவே, அமிர்தலிங்கம் எழுந்துநின்று தான் குற்றவாளியா இல்லையா எனச் சொல்ல விரும்பவில்லை என்றும் ஏனெனில் அவசரகால சட்டத்தின் மீது அமைக்கப்பட்ட இந்த நீதிமன்ற அமர்வே செல்லுபடியற்றது என்பதோடு புதிய குடியரசு அரசியல் அமைப்பு சட்டமும் செல்லுபடியற்றது என்றார்.
ஜி.ஜி.பொன்னம்பலம் எழுந்து, இந்த அமர்வே சட்டபூர்வமற்றது என்பதை தமது நிலைப்பாடு என்றும் சந்தேக நபர்களை பிணையில் விடுவிக்கும்படியும் கேட்டுக் கொண்டார். அவர்களை நீதிமன்றம் பிணையில் விடுவித்து ஜூலை 12ஆம் திகதிக்கு விசாரணையை ஒத்திவைத்தது.
ஜி.ஜி பொன்னம்பலம் முன்வைத்த வாதம் இதுதான்.
புதிய குடியரசு அரசியலமைப்பு சட்டம் 1972 மே 22ஆம் திகதி பிரயோகத்துக்கு வந்தது. அதற்குமுன் வழக்கில் இருந்தது சோல்பரி அரசியலமைப்பு. அச் சட்டத்தின் கீழேயே அன்றைய மகா தேசாதிபதி 1972 மே 15ஆம் திகதி அவசரகாலச் சட்டத்தைப் பிறப்பித்தார். இது நடந்து ஏழு நாட்களின் பின்னரேயே புதிய குடியரசு அரசியலமைப்பு சட்டபூர்வமாக பிரகடனப்படுத்தப்பட்டது. புதிய அரசியலமைப்பின் கீழ், அவசரகால சட்டத்தை கொண்டுவருவதா இல்லையா என்பதை பிரதமரே தீர்மானிக்க வேண்டும். அவரது ஆலோசனையின் படியே ஜனாதிபதி அவசரகால சட்டத்தை பிறப்பிக்க முடியும். இங்கே, புதிய அரசயலமைப்பின் பிரகாரம் அது பின்பற்றப்படவில்லை. எனவே, காலாவதியாகிவிட்ட அரசியல் சட்டத்தின் கீழ் பிறப்பட்ட அவசரகால சட்டம் புதிய அரசியலமைப்பில் நீடிக்க முடியாது. இரண்டாவதாக புதிய அரசியலமைப்பின் கீழ் அவசரகால சட்டம் முறையாக பிறப்பிக்கப்படவில்லை. எனவே இந்த அமர்வே சட்டபூர்வ மற்றது என்பதால் கைதானவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பது ஜி.ஜி. தரப்பின் வாதமாக இருந்தது.
தீர்ப்பு 1976 செப்டம்பர் 19ஆம் திகதி வாசிக்கப்பட்டது. அமர்வின் தலைமை நீதியரசர், அவசரகாலச் சட்டம் முறையாக பிறப்பிக்கப்படவில்லை என்பதை ஏற்றுக் கொண்டார். நால்வரும் விடுதலை செய்யப்பட்டனர். பின்னர் சிவா பசுபதியும் வழக்கை வாபஸ் பெற்றுக் கொண்டார். ஸ்ரீமாவோ அரசுக்கு இது பெரும் பின்னடைவாக அமைந்தது. என்.எம்.பெரேரா, கொல்வின் ஆர்டி சில்வா, பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்க போன்ற பெரிய தலைகள் அரசில் அங்கம் வகித்தும் கூட இவ்வாறான ஒரு தவறு நடைபெற்றிருந்தது அன்றைய நீதித்துறையில் பெரிய விஷயமாக வியந்து பேசப்பட்டது. பின்னர் ஸ்ரீமாவோ அரசு அவசரகால சட்டத்தை முறைப்படி பிரகடனம் செய்ய வேண்டியதாயிற்று.
இலங்கை நீதித்துறை வரலாற்றிலேயே பேசப்படும் வழக்காக இது அமைந்தது. அதேபோன்ற ஒரு வழக்கு சில வருடங்களுக்கு முன்னர் இந் நாட்டில் நிகழ்ந்தது. ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஒரு புதிய அரசாங்கம் செல்லுபடியற்றது என்று உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு ஒரு மைல்கல் தீர்ப்பாகும்.
இறுதித் தீர்ப்பு டிசம்பர் 28ஆம் திகதி வெளியானது. ஜனாதிபதி எடுத்த தீர்மானங்கள் அரசியலமைப்பு சட்டத்துக்கு இணக்கமானவை அல்ல என அதிகாரம் படைத்த ஜனாதிபதிக்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டது. புதிதாக அமைக்கப்பட்ட 52 நாள் அரசு செல்லுபடியற்றதாகவே, ரணில் விக்கிரமசிங்க மீண்டும் பிரதமராக பதவியேற்றார்.
ஜனநாயக அமைப்பில் அரசாங்கத்தை கேள்வி கேட்கும், மாற்றி அமைக்கும் அதிகாரம் மக்களிடமிருந்தாலும் அந்த அதிகாரத்தை சட்ட ரீதியாக நிர்வகிக்கும், பயன்படுத்தும் உயர் அதிகாரத்தை நீதிமன்றங்கள் கொண்டிருக்கின்றன. இவ்வகையில் ஸ்ரீ மாவோ அரசின் ஒரு நகர்வு தவறு என்றும் மைத்திரிபால சிறிசேனவின் தீர்மானம் அரசியலமைப்புக்கு உட்பட்டது அல்ல என்றும் நீதிமன்றம் வழங்கிய இவ்விரண்டு தீர்ப்புகளும் முக்கியமானவை. இவை போன்ற மற்றொரு மிக முக்கியமான தீர்ப்பாகவே, ஜனாதிபதியொருவர் வழங்கிய பொதுமன்னிப்பு உத்தரவு முறையாக மேற்கொள்ளப்பட்டதல்ல எனக் கடந்த 17ஆம் திகதி உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைப் பார்க்க வேண்டும். இப்போதுதான் முதல்முறையாக ஜனாதிபதியொருவர் வழங்கிய மன்னிப்பு செல்லுபடியற்றது என உயர்நீதிமன்றத்தினால் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. இது மிக முக்கியமான ஒரு தீர்ப்பு,
மரண தண்டனை கைதிகளை பொது மன்னிப்பில், போதிய காரணங்களின்றி ஜனாபதிமார் விடுவிக்கும் வழக்கம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினாலேயே ஆரம்பித்து வைக்கப்பட்டது. அவர் 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் றோயல் பார்க் தொடர்மாடி குடியிருப்பில் 19 வயதான யோவான் ஜோன்சன் என்ற 19 வயது சிறுவனைக் கொலை செய்த குற்றத்துக்காக ஜூட் ஜயமஹா என்பவருக்கு உயர் நீதிமன்றத்தாலும் உறுதி செய்யப்பட்ட மரண தண்டனையை இரத்துச் செய்து பொது மன்னிப்பில் விடுதலை செய்தார். பதவிக் காலம் முடிவுறும் தறுவாயிலேயே அவர் இந்த மன்னிப்பை வழங்கினார். பின்னர் இந்த பொது மன்னிப்பு சவாலுக்கு உட்படுத்தப்பட்டபோது, கொலைக் குற்றவாளியின் தாயார், பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்களின் கோரிக்கைகளுக்கு அமையவே அவருக்கு பொது மன்னிப்பு அளிக்கப்பட்டதாக மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார். அவர் சார்பாக நீதிமன்றத்தில் ஆஜரான சட்டத்தரணி, சட்டப்படியே கொலைக் குற்றவாளிக்கு மன்னிப்பு அளிக்கப்பட்டதாகத் தெரிவித்து ஆதாரங்களை சமர்ப்பித்தார்.
இதைப் பின்பற்றியே சுமார் நான்கு கொலைக்குற்றத்துக்கான மரணதண்டனை கைதிகளுக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பொதுமன்னிப்பு அளித்திருப்பதாக அறிய முடிகிறது. அவர்களில் ஒருவரே துமிந்த சில்வா.
2011 அக்டோபர் 8ஆம் திகதி முல்லேரியா ஹிம்புட்டான பகுதியில் நடைபெற்ற ஒரு சம்பவத்தில் பாரத லக்ஷ்மன் பிரேமசந்திரவும் மேலும் மூவரும் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். இச்சம்பவத்தில் துமிந்த சில்வாவும் காயமடைந்தார். துமிந்த சில்வா அடுத்த மாதமே மேலதிக சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்று 2013ஆம் திகதி இலங்கை திரும்பினார். அன்றைய தினமே பாரத லஷ்மன் கொலை தொடர்பாக புலனாய்வாளர்களினால் கைது செய்யப்பட்டார். 2015 ஆட்சி மாற்றத்தின் பின்னர் 13 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டு ட்ரயல் அட்பார் நீதிமன்றத்தில் விசாரணை ஆரம்பமானது. தீர்ப்பு வழங்கப்பட்டபோது மன்றின் தலைமை நீதிபதி ஷிரான் குணரத்ன சந்தேக நபர்களை விடுவித்து தீர்ப்பளித்தார்.
எனினும் நீதிபதி பத்மினி ரணவக்க, துமிந்த சில்வா உட்பட ஐவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்க, மூன்றாவது நீதிபதியான எம்.சி.பி.மொறாயஸ், நீதிபதி ரணவக்கவின் தீர்ப்போடு ஒத்துப்போவதாகச் சொல்லவே பெரும்பான்மை அடிப்படையில் மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதன் பேரிலான மேன்முறையீடு உயர்நீதிமன்றத்துக்கு வந்தது. விசாரணை நடைபெற்று 2018 அக்டோபர் 11ஆம் திகதி தீர்ப்பு வெளியானது. அத்தீர்ப்பு கீழ் நீதிமன்றத்தீர்ப்பை உறுதி செய்ய, துமிந்த சில்வா, தெமட் டகொட சமிந்த மற்றும் டி.எம்.சரத்குமார ஆகியோர் கொலைக் குற்றவாளிகளாக இனம் காணப்பட்டு மரண தண்டனை கைதிகளாகினர்.
மரண தண்டனைக் கைதியான துமிந்த சில்வாவை 2021 ஜனவரி 24ஆம் திகதி பொசன் போயா தினத்தன்று தனது பொது மன்னிப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி கோட்டாபய ராஜபக்ஷ விடுதலை செய்தார். மரணதண்டனைக் கைதிகள் தனிப்பட்ட மற்றும் அரசியல் ரீதியாக பொது மன்னிப்பில் விடுவிக்கப்படுவதை எதிர்த்து சிறைக் கைதிகள் அப்போது போராட்டங்களையும் நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வெளியே வந்த அவருக்கு வீடமைப்பு அமைச்சில் ஒரு பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது. அவர் பொது மன்னிப்பில் வெளியே வந்தாலும், பிரேமச்சந்திரவின் மகள் ஹிருணிகா பிரேமச்சந்திர அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்ததுடன் ஜனாதிபதியின் மன்னிப்பை சவாலுக்குட்படுத்தினார. ஹிருணிகாவின் தாயாரும் துமிந்தவின் மன்னிப்பை எதிர்த்து மனுதாக்கல் செய்திருந்தார். இதையடுத்து அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார். எனினும் தொடர்ந்தும் அவர் மருத்துவ சிகிச்சை என்ற பெயரில் ஸ்ரீ ஜயவர்தனபுர ஆஸ்பத்திரியிலேயே தங்கியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கதே. உயர் நீதிமன்றம் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பை இரத்துச் செய்து மரண தண்டனை தொடர வேண்டும் எனத் தீர்ப்பளித்த பின்னர் கடந்த 19ஆம் திகதி புலனாய்வு அதிகாரிகள் அவரைக் கைது செய்ததும் கூட ஸ்ரீ ஜயவர்தனபுர மருத்துமனையில்தான்!
ஹிருணிகா பிரேமச்சந்திர, அவரது தாயார் சுமனா மற்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினர் சட்டத்தரணி கஸ்ஸாலி ஹுசைன் ஆகியோரின் அடிப்படை உரிமை மீறல் மனுக்களின் மீதே உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. உயர்நீதிமன்ற நீதியரசர் பிரீதி பத்மன், சூரசேன, நீதியரசர்களான காமினி அமரசேகர, அர்ஜூன் ஒபேசேகர ஆகியோரின் இணக்கத்துடன் திர்ப்பை வாசித்தார்.
ஜனாதிபதியின் மன்னிப்பு வழங்கும் அதிகாரத்தை மறுபரிசீலணைக்கு உட்படுத்தும் அதிகாரம் உயர்நீதிமன்றத்துக்கு இல்லை என்ற எதிர்தரப்பு வாதத்தை நீதியரசர் நிராகரித்தார். இந்த மன்னிப்பில், மன்னிப்பு வழங்குவது தொடர்பில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய நடைமுறைகளை அனுசரிக்கவில்லை என்றும் அரசியலமைப்பின் 34(1) உறுப்புரையின் கீழ் குற்றவாளி ஒருவருக்கு மன்னிப்பளிக்கும் போது பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் குறிப்பிடப்பட்டிருப்பதாகவும் தெரிவித்த நீதியரசர், குற்றவாளிகளில் இருந்து துமிந்த சில்வாவை மன்னிப்புக்காக தேர்வு செய்தமுறை சிக்கலானது என்றும் தெரிவித்திருந்தார். ஒருவருக்கு மன்னிப்பு வழங்கும்போது, அந்நபரை குற்றவாளியாகத் தீர்ப்பளித்த நீதிபதியிடமிருந்து அறிக்கை ஒன்றை பெற வேண்டும். அது சட்ட மா அதிபருக்கு அனுப்பி அவரது கருத்தை பெற்று சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு சமர்ப்பித்து அவரது கருத்தை அறிய வேண்டும். இந்நடைமுறைகளின் பின்னரேயே ஒருவருக்கு மன்னிப்பு அளிப்பதா இல்லையா என்பதை ஜனாதிபதி தீர்மானிக்க வேண்டும். இந்த நடைமுறை பின்பற்றப்பட்டதா என்பது உறுதி செய்யப்படவில்லை. முன்னாள் ஜனாதிபதி சமர்ப்பித்த சத்தியக் கடதாசியில் உள்ள விடயங்களையும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று தமது தீர்ப்பில் நீதியரசர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இக் காரணங்களைக் குறிப்பிட்ட, துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பை இரத்துச் செய்த நீதிமன்றம் தண்டனை தொடரும் என அறிவித்திருக்கிறது. அப்பாவின் மரணத்துக்கு நியாயம் பெற்றுத்தர வேண்டும் என்பதற்காக சற்றும் அச்சமின்றி துணிச்சலாகப் போராடிய ஹிருணிகா முன்மாதிரியான மங்கை. இத்தீர்ப்பு தனக்கான தனிப்பட்ட வெற்றியல்ல என்றும், தவறுகளைத் திருத்தி நீதி, நியாயத்தை நிலைநாட்ட விரும்பும் அனைவருக்குமான வெற்றி என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
- அருள் சத்தியநாதன்