- பாடசாலை, பல்கலை, தொழில்நுட்ப மாணவர்களின் பயன்பாட்டில் திடீர் உயர்ச்சி
- மாணவர்களுக்கான ‘சிசுசெரிய’ பஸ் சேவைகளும் அதிகரிப்பு
- பாடசாலை மாணவர்களுக்காக 93 வீத நிதியையும் பல்கலை, தொழில்நுட்ப மாணவர்களுக்காக 73 வீத நிதியையும் அரசாங்கமே செலவிடுகிறது
நாடு எதிர்கொண்டிருந்த பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழிநுட்பக் கல்லூரிகளின் மாணவர்களுக்கான மாதாந்த பருவகாலச் சீட்டுக்கான தேவை அதிகரித்ததன் காரணமாக 2023ஆம் ஆண்டில் வருமானமான 21,775 ரூபா கிடைத்துள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
மாதாந்த பருவகாலச் சீட்டுக்காக மாணவர்களிடமிருந்து 07 வீதம் மட்டுமே அறவிடப்படுவதாகவும் எஞ்சிய 93 வீதத்தை அரசாங்கமே ஏற்றுக்கொள்கிறதென்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
பல்கலைக்கழக மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களிடமிருந்து பருவகாலச் சீட்டுக்காக 21 சதவீதம் மட்டுமே வசூலிக்கப்படுவதாகவும், மீதமுள்ள 79 சதவீதம் அரசால் ஏற்கப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
2022ஆம் ஆண்டு வழங்கிய மாதாந்த பருவகாலச் சீட்டுகளுக்கு 14,941 மில்லியன் ரூபா வருமானமாக கிடைத்துள்ளதாகவும் குறிப்பிட்ட அமைச்சர், 2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2023ஆம் ஆண்டில் பருவகாலச் சீட்டு விற்பனை மூலம் 7,834 மில்லியன் ரூபா வருமானமே கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார். 2023ஆம் ஆண்டு பருவகாலச் சீட்டுக்காக 8,000 மில்லியன் ரூபாவை அரசாங்கத்தின் செலவீனமாகப் பெறப்பட்டுள்ளதாகவும் மேலும் 12,136 மில்லியன் பெறப்பட உள்ளதாகவும் தெரிவித்த அமைச்சர், மாணவர்களிடமிருந்து 1,638 மில்லியன் ரூபா மாத்திரமே அறவிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
2022ஆம் ஆண்டு பருவகாலச் சீட்டுக்காக அரசாங்கத்திடமிருந்து 6,100 மில்லியன் ரூபா பெறப்பட்டுள்ளதாகவும், மொத்தத் தொகை 13,788 மில்லியன் ரூபா எனவும், மாணவர்களிடமிருந்து 1,153 மில்லியன் ரூபா மட்டுமே அறவிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இதன்படி, பாடசாலை, பல்கலைக்கழகம் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களுக்கான மாதாந்த பருவகாலச் சீட்டுகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
மாணவர்களுக்கு மானிய கட்டணத்தில் போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக அரசாங்கம் செலவிடும் பணம், நாட்டின் நெடுஞ்சாலை கட்டமைப்பை சீர்செய்வதற்கு ஒதுக்கப்பட்ட தொகையை விட அதிக தொகையை அரசாங்கம் செலவிட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்த வருடம் ஜனவரி மாதம் பாடசாலை விடுமுறை காலம் என்பதனால் சுற்றுநிருபத்தின் பிரகாரம் பருவகாலச் சீட்டு வழங்கும் உரிமை இல்லையென்றாலும் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்காக பருவகாலச் சீட்டுகள் வழங்கப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார். போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன கடந்த வெள்ளிக்கிழமை (12) பாராளுமன்றத்தில் தெரிவிக்கையில்,
இந்த சலுகை திட்டத்தில் மாணவர்களிடமிருந்து 1,638 மில்லியன் ரூபாவே அறவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் வலியுறுத்தினார். பருவச் சீட்டுக்காக பாடசாலை மாணவரிடமிருந்து மொத்த செலவில் 07 வீதம் மாத்திரம் அறவிடப்படும் எனவும் எஞ்சிய 93 வீதத்தை அரசே ஏற்கும் எனவும் அமைச்சர் வலியுறுத்தினார். மேலும், பல்கலைக்கழக மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களிடமிருந்து சீசன் டிக்கெட்டுக்கு நிர்ணயிக்கப்பட்ட மதிப்பில் 21 சதவீதம் மட்டுமே வசூலிக்கப்படுவதாக குறிப்பிட்ட அமைச்சர், மீதமுள்ள 79 சதவீத தொகையை அரசு ஏற்கும் என்றார். அத்துடன், 2022ஆம் ஆண்டு சலுகை முறையின் கீழ், 14,941 மில்லியன் ரூபா பெறுமதியான பருவச் சீட்டுகளை வழங்குவதற்காக மாணவர்களிடமிருந்து 1153 மில்லியன் ரூபா மாத்திரமே வசூலிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். அதற்கான அரசாங்க செலவீனமாக இபோசவுக்கு 33,000 மில்லியன் ரூபா இரண்டு வருடங்களுக்கு 14,000 மில்லியன் மாத்திரமே கிடைத்துள்ளதாக தெரிவித்த அமைச்சர், நிலுவைத் தொகையை பெற்றுக்கொள்வதில் தாமதம் ஏற்பட்டமையால் இபோசவை பராமரிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இதற்கு மேலதிகமாக, பாடசாலை மாணவர்களுக்கான சிசுசெரிய பாடசாலை பஸ் சேவைக்காக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கும் திறைசேரியால் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதுடன், பாடசாலை மாணவர்களுக்கான பஸ் சேவைக்காக 790 இலங்கை போக்குவரத்து சேவை பஸ்களும் 710 தனியார் பஸ்களும் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
2023 ஆம் ஆண்டில், 5,331 பாடசாலைகளைச் சேர்ந்த சுமார் 1,15,500 மாணவர்கள் பயணம் செய்துள்ளனர், இதற்காக போக்குவரத்து சபை 493.71 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு சிசுசெரிய திட்டத்துக்காக 1,660 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது. ஆனால் திறைசேரியிலிருந்து பெறப்பட்ட தொகை 1,580 மில்லியன் ரூபா மட்டுமே. இத்திட்டத்தில் பயன்படுத்தப்படும் பஸ்கள் மூலம் கிடைக்கும் வருமானம் செலவுகளுக்கு மாத்திரமே போதுமானதாக இருக்கிறது. எனினும், கல்விக்கு உதவும் சமூக அக்கறை செயலாக இந்த சேவையை இலங்கை போக்குவரத்துச் சபை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன சுட்டிக்காட்டினார். சிசுசெரிய சேவைக்கு மேலதிகமாக, மேலும் 1,450 பஸ்கள் தினமும் பாடசாலைகள் ஆரம்பமாகும் நேரம் மற்றும் நிறைவு செய்யப்படும் நேரங்களின்படி பயன்படுத்தப்படுகின்றன, இந்த சேவை நாடு முழுவதும் தொடர்ந்து செயற்படுகிறது. அத்துடன், அலுவலக பணியாளர் மற்றும் பாடசாலை மாணவர்களென இருபாலரும் பயன்படுத்தக்கூடிய பொதுச் சேவையாக பேணுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதென்றும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.