திருச்சி பெரம்பலூர் அருகே பழுதாகி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேன் மீது பஸ் வண்டியொன்று மோதி விபத்துக்குள்ளானதில் இலங்கையை சேர்ந்த 16 ஐயப்ப பக்தர்கள் படுகாயமடைந்துள்ளனர். இலங்கையை சேர்ந்த 03 பெண்கள் உட்பட 16 பேர் சபரிமலை ஐயப்ப பக்தர்கள், சபரிமலை செல்வதற்கு இலங்கையிலிருந்து சென்னை சென்றுள்ளனர். சென்னை விமான நிலையத்திலிருந்து இலங்கையை சேர்ந்த 16 ஐயப்ப பக்தர்களும் சபரிமலைக்கு செல்வதற்கு வேன் ஒன்றை வாடகைக்கு அமர்த்தி சென்று கொண்டிருந்தனர்.
நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை அதிகாலை சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா விஜயகோபாலபுரம் என்ற இடத்தில் வந்த போது வேனின் டயர் திடீரென வெடித்தது. இதைடுத்து வீதியோரமாக வேனை நிறுத்தி சில்லு மாற்றும் வேலையில் சாரதி ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த மற்றொரு வேன் சாரதியும் அவரது வண்டியை நிறுத்திவிட்டு வந்து சென்னை வேன் சாரதிக்கு உதவி செய்து கொண்டிருந்தார். இந்நிலையில் சென்னையிலிருந்து கம்பம் என்ற இடத்தை நோக்கி சென்ற தனியார் பஸ் முன்னால் நின்ற சென்னை வேனின் பின்புறம் மோதியது. பெரம்பலூர் பகுதியில் விபத்து இடம்பெற்றுள்ளதையடுத்து அப்பகுதியிலுள்ள சற்குணராஜா என்பவர் ஸ்தலத்துக்கு விரைந்து காயமடைந்தவர்களுக்கு உதவி புரிந்துள்ளார். இவர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மகளிர் அணியிலுள்ள ராஜாமணி என்பவரின் மகன் என்றும் நுவரெலியா பகுதியைச் சேர்ந்தவரென்றும் தெரிய வருகிறது.
திருச்சி எம்.கே. ஷாகுல் ஹமீது