இந்த வருடம் தேர்தல் ஆண்டு என்பதால் அரசியல் கட்சிகள் யாவும் தம்மை தேர்தலுக்குத் தயார்படுத்தத் தொடங்கியிருக்கும் சூழ்நிலையில் வடக்கு, கிழக்கைச் சேர்ந்த தமிழ் அரசியல் கட்சிகள் இன்னமும் தம்மை அரசியல் ரீதியாகத் தீவிரப்படுத்தத் தொடங்கியிருப்பதாகத் தெரியவில்லை.
மாறாக தமிழ் அரசியல் தரப்பில் முக்கிய இடத்தை வகிக்கும் இலங்கை தமிழரசுக் கட்சி தனக்கான அடுத்த தலைவர் யார் என்பதைத் தீர்மானிப்பதிலேயே தற்பொழுது ஆர்வம் காட்டிவருகிறது.
ஆரம்பித்த நாள் முதல் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமைப் பொறுப்புக்கு வந்தவர்கள் அனைவரும் கட்சியின் ஏகோபித்த ஆதரவுடன் தெரிவானவர்களாகவே காணப்பட்டனர். இவ்வாறான நிலையில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தற்போதைய தலைவர் மாவை சேனாதிராஜா வயதுமூப்புக் காரணமாக அப்பதவியிலிருந்து விலகக் கூடிய காரணத்தினால் அடுத்த தலைவர் யார் என்பதற்கான போட்டி ஆரம்பித்துள்ளது.
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் அடுத்த தலைவருக்கான தெரிவுக்கு கட்சியின் யாப்பிற்கு அமைய பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சிவஞானம் சிறிதரன் ஆகியோர் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர்.
கட்சியின் மாநாட்டிற்கான திகதி தீர்மானிக்கப்பட்ட நிலையில் தலைவராக தெரிவு செய்ய எண்ணுபவரை கட்சியின் நிரந்தர உறுப்பினர்கள் 6 பேருக்கு குறையாதோர் ஒப்பமிட்டு முன்கூட்டியே சமர்ப்பிக்க வேண்டும். இதனால் தெரிவாக விரும்புபவர்களின் பெயரை கடந்த வருடம் நவம்பர் மாதம் 30 ஆம் திகதிக்கு முன்பு சமர்ப்பிக்குமாறு சகல தொகுதிக் கிளைகளுக்கும் எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த ஏற்பாட்டிற்கு அமைய பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் பெயரை பரிந்துரைத்து 12 உறுப்பினர்கள் ஒப்பமிட்ட விண்ணப்பமும், பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனின் பெயரை பரிந்துரைத்து 6 உறுப்பினர்கள் ஒப்பமிட்ட விண்ணப்பமும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
இதில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் பெயரை வடக்கு மாகாண சபையின் முன்னாள் கல்வி அமைச்சர் த.குருகுலராஜா மற்றும் கரைச்சி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் வேழமாலிதன் உள்ளிட்ட ஆறு பேர் முன்மொழிந்துள்ள நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் பெயரைக் குறிப்பிட்டு கட்சியின் சிரேஷ்ட உபதலைவர் சி.வி.கே.சிவஞானம், நிர்வாகச் செயலாளர் எஸ்.எக்ஸ். குலநாயகம், மன்னாரைச் சேர்ந்த தி. பரஞ்சோதி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சொலமன் சூ சிறல், குமாரசாமி, திருகோணமலையைச் சேர்ந்த ஜேம்ஸ் சமத்தர், கொழும்பு கிளையைச் சேர்ந்த இரட்ணவடிவேல் உட்பட 12 பேர் கையொப்பமிட்டுள்ளனர்.
பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் பெயரை முன்மொழிந்துள்ள 12 பேரில் வடக்கு, கிழக்கின் 8 மாவட்டங்களுடன் கொழும்புக் கிளையைச் சேர்ந்த ஒருவரும் ஒப்பமிட்டுள்ளார். கட்சியின் மூத்த தலைவராக இருக்கும் ஆர். சம்பந்தன், மாவை சேனாதிராஜா ஆகியோர் வயது மூப்பு காரணமாக கட்சிப் பணியிலிருந்து விலகக்கூடிய சூழலில், அடுத்த தலைமுறைத் தலைவர்கள் கட்சியை பொறுப்பேற்று எதிர்காலத்திற்கு வழிநடத்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக எழுந்து வருகிறது.
இதன் அடிப்படையில் எதிர்வரும் 27 மற்றும் 28ஆம் திகதிகளில் தமிழரசுக் கட்சியின் 27 ஆவது மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டிலேயே அடுத்த தலைவர் யார் என்பது போன்ற பல்வேறு விடயங்கள் அறிவிக்கப்படவுள்ளன.
தலைவர் பதவிக்கு இருவர் போட்டியிடும் நிலை உருவாகியிருப்பதால் கட்சிக்குள் பிளவு ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர். இதுவரை காலமும் தலைமைத்துவத்துக்கு ஏகமனதாகத் தீர்மானம் எடுக்கப்பட்ட நிலையில் இம்முறை தேர்தலுக்குச் செல்வது பொருத்தமற்றது என்பது அவர்களின் நிலைப்பாடாக இருக்கின்றது.
மறுபக்கத்தில், கட்சியின் தலைமைப் பதவிக்குத் தேர்தல் மூலம் ஒருவரைத் தெரிவுசெய்வது கட்சி ஜனநாயக நடைமுறையில் சிறந்து விளங்குவதற்கான உதாரணமாகும் என மற்றுமொரு தரப்பினர் சுட்டிக்காட்டுகின்றனர். இலங்கை அரசியலில் குறிப்பாக தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில் இலங்கை தமிழரசுக் கட்சி முக்கியமானதொரு பாகத்தை வகித்து வருகிறது. இவ்வாறான பின்னணியில் இதன் தலைமைத்துவம் மிகவும் பலமுடையதாகவும், ஏனைய அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்துக் கொண்டுசொல்லக் கூடியதாகவும் அமைவதே பொருத்தமானதாக இருக்கும்.
உதாரணமாக எடுத்துக் கொண்டால் மூத்த தலைவர் இரா.சம்பந்தன் அனைத்து தமிழ்க் கட்சிகளையும் குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்சிகளை ஒன்றிணைத்து வழிநடத்திச் செல்லக் கூடிய தலைவராகக் காணப்பட்டார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது உத்தியோகபூர்வமாகப் பதிவுசெய்யப்படாத கட்சியாக இருந்தாலும், அதனை ஒரு கூட்டணியாக ஒன்றிணைத்துக் கொண்டுசெல்லக்கூடிய திறன் அவரிடம் இருந்தது என்பதை எவரும் மறுக்க முடியாது.
இவ்வாறான பின்னணியில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற கூட்டணியில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஆதிக்கம் மேலோங்கியிருப்பதாக கடந்த காலங்களில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வந்தன. ஒரு சில விடயங்களைத் தீர்மானிக்கும்போது தமிழரசுக் கட்சி கூட்டணியாக முடிவெடுக்காமல் பங்காளிக் கட்சிகளைத் தவிர்த்து தனித்து முடிவெடுத்த சந்தர்ப்பங்களும் காணப்படுகின்றன.
தமிழர்கள் சிறுபான்மையாக உள்ள நாட்டில் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் தமக்கிடையே வேறுபட்டு நிற்பது அரசியல் ரீதியாக தமிழினத்தைப் பலவீனப்படுத்தும். எனவே, தமிழரசுக் கட்சியும் சரி, கூட்டமைப்பின் ஏனைய பங்காளிக் கட்சிகளும் சரி ஒற்றுமையாக ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். எனவே, தமிழரசுக் கட்சியின் தலைமை தொடர்பில் எடுக்கப்படக் கூடிய தீர்மானமும் இவ்விடயத்தில் தாக்கம் செலுத்தும் ஒன்றாக இருக்க வேண்டும் என்றே தமிழ் மக்கள் கருதுகின்றனர்.
தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளைச் சர்வதேச மட்டத்துக்கு எடுத்துச் செல்லக் கூடிய வல்லமைமிக்க நபரே இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவத்துக்குப் பொருத்தமானவர் என்று அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கூறியிருந்தார்.
தலைமைத்துவம் ஜனநாயக ரீதியிலேயே தெரிவு செய்யப்படும். கடந்த பத்து ஆண்டுகளாகத் தமிழரசுக் கட்சிக்கு அடுத்த தலைவர் யார் என்பதை மக்கள் புரிந்து வைத்துள்ளார்கள்.
கட்சியின் தலைவராக வர வேண்டியவர் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளை சர்வதேச அளவுக்கு எடுத்துச் செல்லக்கூடிய சர்வதேச தொடர்புகள் உள்ள நபராக இருந்தால் மட்டுமே சாத்தியம்.
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அதிகாரப் பரவலாக்கம் ஊடாகவே அரசியல் தீர்வு காண முடியும். அதற்காகவே தமிழரசுக் கட்சி செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையில், அரசியல் சாசனம் தொடர்பில் அதீத அறிவு உள்ள நபரே தமிழரசுக் கட்சியின் தலைவராக வரவேண்டும் என்ற ரீதியில் அவர் தனது கருத்தை முன்வைத்திருந்தார்.
இருந்தபோதும், தலைமைத்துவம் தொடர்பில் கட்சிக்குள் மாறுபட்ட நிலைப்பாடுகள் இருப்பதாகத் தெரியவருகிறது. இரு தரப்பிலும் ஆதரவு கோரும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எனவே, இந்தத் தலைமைத்துவப் போட்டியானது பங்காளிக் கட்சிகளுக்கிடையில் பிளவை ஏற்படுத்தாது அனைவரையும் ஒன்றிணைக்கக் கூடியதாக அமைய வேண்டும் என்றே தமிழர்கள் விரும்புகின்றனர்.
பி.ஹர்ஷன்