தமிழ் மக்களின் பாரம்பரியத்தையும் வீரத்தையும் பறைசாற்றும் வகையில் தமிழ்நாட்டில் காலம்காலமாக நடத்திவரும் ஜல்லிக்கட்டு வீர விளையாட்டை, இலங்கையின் வரலாற்றில் முதன்முறையாக கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவருமான செந்தில் தொண்டமான் கிழக்கு மாகாணத்தில் நடத்தியுள்ளார். நேற்று (06) திருகோணமலையின் சம்பூரில் ஜல்லிக்கட்டு வீர விளையாட்டுப் போட்டி நடைபெற்றது.தமிழரின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு தமிழ்நாட்டை தாண்டி வேறொரு நாட்டில் நடைபெறுவது இதுவே முதன்முறையாகும்.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மலேசிய பாராளுமன்ற உறுப்பினர் டட்டுக் ஸ்ரீ முருகன் மற்றும் நடிகர் நந்தா, சிறப்பு விருந்தினர்களாக ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நல சங்க தலைவர் ஒண்டிராஜ், செயலாளர் ராஜா ஆகியோர் கலந்துகொண்டதுடன், இந்தியா உட்பட பல நாடுகளை சேர்ந்த விசேட அழைப்பாளர்களும் கலந்துகொண்டனர்.