Home » சின்னம்மை தடுப்பூசி ஏற்றல் முதற்கட்டம் நேற்று ஆரம்பம்
06 முதல் 09 மாத குழந்தைகளுக்கு

சின்னம்மை தடுப்பூசி ஏற்றல் முதற்கட்டம் நேற்று ஆரம்பம்

WHO, UNICEF ஒத்துழைப்பு

by Damith Pushpika
January 7, 2024 6:10 am 0 comment

ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் (UNICEF) இலங்கையில் சின்னம்மை நோய்க்கான மேலதிக தடுப்பூசிகளை வழங்கும் செயற்பாட்டை துரிதப்படுத்த சுகாதார அமைச்சுக்கு ஒத்துழைப்பு வழங்குகிறது. தடுப்பூசியை வழங்கும் செயற்பாட்டின் முமுதலாவது கட்டம் 09 மாவட்டங்களில் 1,600 சிகிச்சை நிலையங்கள் ஊடாக நேற்று (06) சனிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டது. 2023ஆம் ஆண்டு மே மாதம் முதல் 700க்கும் மேற்பட்ட சின்னம்மை நோயாளர்கள் பதிவாகியுள்ளதையடுத்து, இலங்கையில் இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் சின்னம்மை நோய்க்கான மேலதிக தடுப்பூசி வழங்கும் திட்டத்தை சுகாதார அமைச்சு நடைமுறைப்படுத்த, உலக சுகாதார ஸ்தாபனத்துடன் (WHO) இணைந்து ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் (UNICEF) ஒத்துழைப்பு வழங்குகிறது.

மேலதிக தடுப்பூசி செயற்பாடு இரண்டு கட்டங்களாக முன்னெடுக்கப்படவுள்ளதுடன், இதன் முதலாவது கட்டம் அதிக சனத்தொகையை கொண்ட அடையாளம் காணப்பட்ட ஒன்பது மாவட்டங்களில் 06 – 09 மாத குழந்தைகளை இலக்கு வைத்து நேற்று ஆரம்பிக்கப்பட்டது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, கண்டி, யாழ்ப்பாணம், குருநாகல் மற்றும் கல்முனை ஆகிய பகுதிகளில் சின்னம்மை நோய் பதிவுகள் அதிகம் காணப்படுவதால் இந்தப் பகுதிகளில் முதற்கட்டம் தடுப்பூசி திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இரண்டாவது கட்டம் ஜனவரி 20ஆம் திகதி ஆரம்பிக்கப்படவிருப்பதுடன், இது நாடு முழுவதிலுமுள்ள ஏனைய வயதுப் பிரிவினருக்கு விஸ்தரிக்கப்படும்.

மேலதிக தடுப்பூசி செயற்பாடு குறித்து அறிவிக்கும் முகமாக அண்மையில் கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதி கிரிஸ்டின் ஸ்கூக் குறிப்பிடுகையில்,

“இலங்கையில் தேசிய தடுப்பூசி திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் மற்றும் உலக சுகாதார ஸ்தாபனம் ஆகியன பல ஆண்டுகளாக சுகாதார அமைச்சுடன் நெருக்கமாக இணைந்து பணியாற்றி வருகிறது. அதிகமானவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டாலும் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளாத குழந்தைகள் மத்தியில் குறிப்பாக பிராந்தியத்தில் தொற்று அதிகரித்திருப்பதால் சின்னமுத்து ஏற்படலாம். சின்னமுத்து நோயாளர்கள் தொடர்பில் எண்ணிக்கை குறைவானதாக இருந்தாலும் இது குறித்து நாம் கவனம் செலுத்துவது அவசியம். இதனால்தான் சுகாதார அமைச்சு இதனைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளது” என்றார்.

2020-2021 காலப்பகுதியில் கொவிட்-19 தொற்று காணப்பட்ட சந்தர்ப்பத்தில் தடுப்பூசிகளின் தரத்தை பராமரிப்பதற்கு குளிரூட்டல் உபகரணக் கட்டமைப்பிலுள்ள இடைவெளிகளை நிவர்த்தி செய்வதற்கும், அதன் ஊடாக பயனுள்ள நோய்த்தடுப்பு நடவடிக்கையை சந்தேகத்துக்கிடமின்றி நடைமுறைப்படுத்துவதற்கும் ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் ஒத்துழைப்பு வழங்கியதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அதேநேரம், வெற்றிகரமாக முன்னெடுக்கப்படும் தடுப்பூசித் திட்டம் குறித்து நம்பிக்கையை வெளியிட்டுக் கருத்துத் தெரிவித்த சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்திய கலாநிதி பாலித மஹிபால குறிப்பிடுகையில், “உலகில் எந்தவொரு நாடும் 99 வீதம் நோய் தடுப்பு வழங்கலை அடையவில்லை. ஆனால், இலங்கை இதனைப் பெற்றுள்ளது என்பதை நான் எந்தவித தயக்கமும் இன்றி உறதியாகக் கூறுவேன். எனவே, இந்த மேலதிக தடுப்பூசி வழங்கல் செயற்பாடானது சின்னமுத்து நோயைக் குறைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.

ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கைக்கான பிரதிநிதி வைத்திய கலாநிதி அலாகா சிங் குறிப்பிடுகையில், “இந்த நோயினால் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் குறித்து மேற்கொள்ளப்பட்டுள்ள பதிவுகள் குறைவாக இருப்பதுடன், இதுவரை எந்த உயிரிழப்புக்களும் பதிவாகவில்லை. இருந்தபோதும், சின்னமுத்து நோய் சிறுவர்கள் மத்தியில் ஏற்படக்கூடிய பாரிய நோயாக மாறலாம் என்பதால், இது தடுக்கப்பட வேண்டும். இதற்கமைய, சுகாதார அமைச்சானது தனது வலுவான ஆரம்ப சுகாதாரக் கட்டமைப்புக்களின் ஊடாக இரண்டு கட்டங்களில் விரைவான மேலதிக தடுப்பூசி செயற்பாட்டை முன்னெடுப்பதில் களமிறங்கியுள்ளது. உலக சுகாதார ஸ்தாபனம் என்ற ரீதியில் நாம் இந்த வேலைத்திட்டத்திற்கு எங்களது முழு ஆதரவை வழங்குவதுடன், இலங்கையின் ஒட்டுமொத்த மீட்சியும் முன்னோக்கிச் செல்வதையும் வலியுறுத்துகின்றோம்” என்றார்

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division