நவலோக மருத்துவமனை குழுமத்தினால் வருடாந்தம் நடாத்தப்பட்ட நத்தார் கொண்டாட்டங்கள் வெகு விமரிசையாக அண்மையில் நிறைவடைந்தன. வருடாந்த கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களின் முதற்கட்டமாக கிறிஸ்மஸ் கேக் கலவை அண்மையில் தயாரிக்கப்பட்டதுடன், டிசம்பர் மாத தொடக்கத்தை முன்னிட்டு வைத்தியசாலை வளாகம் முழுவதும் கிறிஸ்மஸ் அலங்காரங்கள் மற்றும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
நவலோக மருத்துவமனையில் வருடாந்த கிறிஸ்மஸ் கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் முக்கிய இடத்தைப் பிடிக்கும் கிறிஸ்மஸ் கரோல் இசைக்கச்சேரி 3 நாட்கள் இடம்பெற்றதுடன் கடைசி இசை நிகழ்ச்சி டிசம்பர் 15 ஆம் திகதி நவலோக வைத்தியசாலையின் முகப்பில் இடம்பெற்றது. இதில் நவலோக மருத்துவமனை குழுமத்தின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் நவலோக வைத்தியசாலையின் சிறுவர் மருத்துவ மனையில் பங்குபற்றும் சிறார்களுக்கு கிறிஸ்மஸ் தாத்தாவினால் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வில் ஏறக்குறைய 50 சிறுவர்கள் கலந்துகொண்டதுடன் இந்நிகழ்வில் பங்குபற்றிய சகல சிறார்களுக்கும் உணவு மற்றும் பானங்கள் வழங்கப்பட்டன.
நவலோக வைத்தியசாலையின் வருடாந்த கிறிஸ்மஸ் வேலைத்திட்டம் தொடர்பில் மருத்துவமனை குழுவின் தலைவர் டொக்டர் ஜயந்த தர்மதாச கருத்து தெரிவிக்கையில். “வருடாந்திர கிறிஸ்மஸ் நிகழ்வு நவலோக மருத்துவமனையின் ஒரு அங்கமாகும், மேலும் எங்கள் ஊழியர்கள் கோவிட் காலத்தைத் தவிர ஒவ்வொரு வருடமும் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்து வருகின்றனர். அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் கிறிஸ்மஸ் கரோல்கள் மற்றும் பிற கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் மூலம், நோயாளிகளுக்கு மன மகிழ்ச்சியை அளிக்க முடிகிறது.” என கூறினார்.