Home » டெங்கு: மக்களின் பங்களிப்பின்றி கட்டுப்படுத்த முடியாத நோய்

டெங்கு: மக்களின் பங்களிப்பின்றி கட்டுப்படுத்த முடியாத நோய்

by Damith Pushpika
December 31, 2023 6:45 am 0 comment
  • கவனயீனத்தையும் அசிரத்தையையும் தனக்கு சாதகமாக்கும் நுளம்பு
  • முழுமையாகக் கட்டுப்படுத்தவும் குணப்படுத்தவும் கூடிய நோயினால் உயிரிழக்கும் துர்ப்பாக்கியம்

இலங்கையில் கடந்த சில மாதங்களாக சீரற்ற காலநிலை நிலவி வருகிறது. இக்காலநிலை ஒரிரு நோய்கள் பரவுவதற்கும் சில நோய்கள் தலைதூக்குவற்கும் சாதமாக அமைகின்றன. இதனை அண்மைக் காலமாக அவதானிக்க முடிகிறது.

அந்த வகையில் மழைக்காலநிலையுடன் சேர்த்து தலைதூக்கும் நோயாக டெங்கு வைரஸ் காய்ச்சல் விளங்கி வருகிறது. இது உயராபத்து மிக்க நோயான போதிலும் அதனை தவிர்த்துக் கொள்ளலாம் அல்லது கட்டுப்படுத்திக் கொள்ளலாம்.

டெங்கானது ஒரு வகை வைரஸ் ஆகும். இது தானாகப் பரவக்கூடிய பண்பைக் கொண்ட ஒன்றல்ல. அதன் பரவுதலுக்கு காவி மிகவும் இன்றியமையாதது. காவி இன்றி பரவ முடியாத வைரஸே டெங்கு. இவ்வாறான பண்பைக் கொண்டுள்ள இவ்வைரஸின் காவியாகவே நுளம்பு செயற்படுகிறது. நுளம்பில் பல இனங்கள் உள்ளன. அந்த அனைத்து இன நுளம்புகளையும் தம்மைக் காவும் ஊடகமாக இவ்வைரஸ் பயன்படுத்திக் கொள்வதுமில்லை. அத்தோடு எல்லா நுளம்புகளும் இவ்வைரஸின் காவியாகத் தொழிற்படுவதுமில்லை. நுளம்புகளில் காணப்படும் ஈடிஸ் எஜிப்டைய் இன நுளம்புகள் மாத்திரமே இவ்வைரஸின் காவியாகத் தொழிற்படுகின்றது.

இந்த ஈடிஸ் எஜிப்டைய் இன நுளம்புகளானது மழைநீர் உள்ளிட்ட தெளிந்த நீர் தேங்கும் இடங்களில் முட்டையிட்டு பல்கிப் பெருகக்கூடியன.

ஒரு தடவைக்கு நூறு முதல் இரு நூறு வரையில் முட்டையிட்டு பல்கிப்பெருகும் இந்நுளம்புகள் மழைக் காலநிலையைத் தமது பெருக்கத்திற்கான வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்கின்றன.

ஆனால் வீட்டுச்சூழலிலும் சுற்றாடலிலும் தெளிந்த நீர் தேங்க முடியாத படி சுற்றாடலை சுத்தமாகவும் உலர் நிலையிலும் பேணினால் இவ்வின நுளம்புகள் பெருக வாய்ப்பு இருக்காது. அப்போது டெங்கு வைரஸைக் காவிப் பரப்ப ஊடகமும் இராது. அதன் பயனாக டெங்கு வைரஸ் அச்சுறுத்தல் அற்ற நிலை ஏற்பட்டுவிடும். இதுதான் டெங்கு நோயின் யதார்த்தம். இதனை சரியான முறையில் புரிந்து கொண்டு செயற்பட்டால் டெங்கு வைரஸ் குறித்து அச்சம் கொள்ளவே தேவையில்லை.

இருந்த போதிலும் இவ்வைரஸ் நோய் தொடர்பில் மக்கள் மத்தியில் காணப்படும் கவனயீனங்களையும் அசிரத்தைகளையும் இவ்வின நுளம்புகள் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு மழைக்காலநிலையுடன் பல்கிப் பெருகுகின்றன.

அதன் விளைவாகவே இவ்வருடம் ஜனவரி முதல் டிசம்பர் 29ஆம் திகதி வரை 87 ஆயிரத்து 78 பேர் இந்நோய்க்கு உள்ளானவர்களாக அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர். அவர்களில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த டிசம்பர்(2023) மாதத்தில் மாத்திரம் இந்நோய்க்கு உள்ளானவர்களாகப் பதிவாகி இருக்கின்றனர்.

இந்தப் பின்புலத்தில் கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய மேல் மாகாணம் டெங்கு அபாய பிரதேசமாக விளங்கிக் கொண்டிருக்கின்றது. இந்நாட்டில் இற்றை வரையும் இந்நோய்க்கு உள்ளாகியுள்ளவர்களில் 45.4 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் அதாவது 39 ஆயிரத்து 543 பேர் இம்மாகாணத்திலேயே அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர்.

25 மாவட்டங்களைக் கொண்டுள்ள இந்த தீவு நாட்டில் டெங்கு நோய் தாக்கப்பட்டவர்களில் சுமார் அரை வாசிக்கும் அதிகமானவர்கள் மேல் மாகாணத்தில் அடையாளம் காணப்பட்டிருப்பது சாதாரணமாக நோக்கக்கூடிய விடயமல்ல. டெங்கு வைரஸைக் காவிப் பரப்பும் நுளம்புகளின் பெருக்கத்துக்குச் சாதகமான சூழலை இம்மாகாணம் பெரிதும் கொண்டிருப்பதன் வெளிப்பாடே இது. அதேநேரம் இந்நுளம்புகள் மழைநீர் உள்ளிட்ட தெளிந்த நீர் தேங்கும் இடங்களில் பல்கிப் பருகும் பண்பைக் கொண்டிருப்பதால் அதற்கு ஏற்ற சூழலையும் இம்மாகாணமே அதிகம் கொண்டிருப்பதும் தெளிவாகிறது.

குறிப்பாக தெளிந்த நீர் தேங்கக்கூடிய கைவிடப்பட்ட யோகட் கப்புகள், சிரட்டைகள், பொலித்தீன், சிலிசிலி பைகள், பிளாஸ்ரிக் பொருட்கள், மட்பாண்டங்கள், அலுமினியப் பாத்திரங்கள், டயர்கள் உள்ளிட்ட அனைத்து திண்மக் கழிவுப் பொருட்களும் டெங்கு நுளம்புகள் முட்டையிட்டு பல்கிப் பெருகும் முக்கிய இடங்களாகும். அவ்விடங்களை முறையாகவும் சீராகவும் அப்புறப்படுத்தி சுற்றாடலை சுத்தமாகவும் உலர் நிலையிலும் பேண வேண்டும். அது தொடர்பான பொறுப்பில் கவனயீனமும் அசிரத்தையும் நிலவுவதும் இக்காய்ச்சலுக்கு உள்ளாவோரின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட துணைபுரியக்கூடிய காரணியாக விளங்குகின்றது.

டெங்கு வைரஸின் காவியாகத் தொழிற்படும் நுளம்புகளின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை இக்காரணங்கள் அனைத்தும் வலியுறுத்தி நிற்கின்றன. ஆனால் இவை மக்களின் ஆதரவையும் ஒத்துழைப்பையும் வேண்டி நிற்கும் பணியாகும். இதைவிடுத்து தனியே அரச நிறுவனங்களால் மாத்திரம் கட்டுப்படுத்தக்கூடிய நோயல்ல டெங்கு.

திண்மக் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்துவதிலும் சுற்றாடலை நுளம்புகள் பெருக முடியாதபடி சுத்தமாகப் பேணிக் கொள்வதிலும் மக்களுக்கு பாரிய பொறுப்பு உள்ளது. இப்பொறுப்பில் கவனயீனமும் அசிரத்தையும் அதிகரித்திருப்பதன் விளைவாகவே இவ்வருடமும் 55 பேரின் உயிர்களைக் காவு கொண்டிருக்கிறது இவ்வைரஸ்.

இந்த நிலையில் டெங்கு நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு தேவையான அறிவுறுத்தல்களை உள்ளடக்கிய சுற்றறிக்கையை ஜனாதிபதியின் செயலாளர் வெளியிட்டும் இருக்கிறார்.

நாட்டிலுள்ள மருத்துவ அதிகாரி அலுவலகப் பிரிவுகளில் 62 பிரிவுகள் டெங்கு அச்சுறுத்தல் அதிகமுள்ள பிரிவுகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள போதிலும் மேல் மாகாணத்துக்கு வெளியே கண்டி, புத்தளம், குருநாகல், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, இரத்தினபுரி, கேகாலை ஆகிய மாவட்டங்களின் பல பிரதேசங்களிலும் டெங்கு நோய்க்கு உள்ளாவோரின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டிருப்பதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் மருத்துவர் நிமல்கா பன்னிலகெட்டி தெரிவித்திருக்கிறார்.

இன்றைய காலகட்டத்தில் சுற்றாடல் சுத்தம் தொடர்பில் மக்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். திண்மக்கழிவுப் பொருட்கள் தொடர்பான அசிரத்தையின் விளைவாகவே தெளிந்த நீர் தேங்கக்கூடிய கழிவுப் பொருட்கள் சுற்றாடலிலும் வீட்டுச் சூழலிலும் நிறைந்து காணப்படுகின்றன.

இக்கழிவுப் பொருட்களை முறையாகவும் சீராகவும் அப்புறப்படுத்துவதில் மக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும். இது மிகவும் இன்றியமையாத தேவையாகும். இத்தேவை குறித்து உரிய முறையில் கவனம் செலுத்தி செயற்படாவிடில் காலம் முழுவதும் டெங்கு அச்சுறுத்தல் நீடித்து நிலைக்கவே செய்யும். அதுவே மருத்துவ நிபுணர்களின் கருத்தாகும்.

அதேநேரம் இந்நோய்க்கு உள்ளான ஒருவருக்கு நான்கு விதமான அறிகுறிகள் வெளிப்படலாம். சிலருக்கு சாதாரண காய்ச்சலாகவும் இன்னும் சிலருக்கு கடும் காய்ச்சலாகவும், மேலும் சிலருக்கு இரத்தக் கசிவுடன் கூடிய காய்ச்சலாகவும், அசாதாரண காய்ச்சலாகவும் கூட இந்நோய் அறிகுறிகள் வெளிப்படலாம். குறிப்பாக காய்ச்சலுடன் தலைவலி, கண்களின் கீழ்ப்பகுதியில் வலி, தசைவலி, மூட்டுக்களில் வலி, வாந்தி, தோலில் சிவப்பு நிறப் புள்ளிகள், இரத்தக்கசிவு போன்றவாறான அறிகுறிகள் அவற்றில் குறிப்பிடத்தக்கவையாகும்.

அதன் காரணத்தினால் தற்போதைய சூழலில் 48 மணித்தியாலயங்களுக்கு மேல் காய்ச்சல் காணப்படுமாயின் தாமதியாது தகுதி வாய்ந்த மருத்துவரை அணுகி மருத்துவ ஆலோசனையுடன் சிகிச்சை பெற்றுக்கொள்ளுமாறு தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர் டொக்டர் சுதத் சமரவீர மக்களிடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

ஏனெனில் காய்ச்சல் தொடர்பான கவனயீனமும் அசிரத்தையும் தான் பலரது மரணத்துக்குக் காரணமாக அமைந்து விடுகின்றது என்றும் மருத்துவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஒன்றில் முழுமையாகத் தவிர்த்துக்கொள்ளவோ அல்லது மருத்துவ ஆலோசனையுடன் கூடிய சிகிச்சை மூலம் குணப்படுத்திக் கொள்ளவோ கூடிய நோயினால் உயிரிழப்பது தான் துர்பாக்கிய நிலையாகும்.ஆகவே நுளம்புகள் பெருக முடியாதபடி சுற்றாடலை சுத்தமாகவும் உலர்நிலையிலும் பேணிக் கொள்வது டெங்கு அச்சுறுத்தலைத் தவிர்த்து கட்டுப்படுத்திட உதவக்கூடியதாகும். அதனால் இது தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய பொறுப்பு மக்களுடையதாகும்.

மர்லின் மரிக்கார்

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division