போதைப்பொருள் மற்றும் பாதாளக் குழுக்களை ஒடுக்கும் ‘யுக்திய’ பொலிஸ் மற்றும் அதிரடிப்படையினரின் விசேட சுற்றிவளைப்புகளில் இதுவரை நாடளாவிய ரீதியில் 17 ஆயிரத்து 837 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்போது ஹெரோயின், ஐஸ் உட்பட 450 கிலோகிராமுக்கும் அதிகமான போதைப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.
போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுக்களை ஒடுக்கும் ‘யுக்திய’ பொலிஸ் விசேட வேலைத்திட்டம் பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் பணிப்புரைக்கமைய, முப்படையினரின் ஒத்துழைப்புடன் நாடளாவிய ரீதியில் கடந்த 17ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
கடந்த 17ஆம் திகதி முதல் 24ஆம் திகதிவரை ஒருவார காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் 17,666 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இருப்பினும், நத்தார் பண்டிகையை முன்னிட்டு பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டமையால் இரண்டு நாட்களுக்கு ‘யுக்திய’ சுற்றிவளைப்புகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தன.
எவ்வாறாயினும், ‘யுக்திய’ பொலிஸ் சுற்றிவளைப்புகள் கடந்த புதன்கிழமை முதல் மீள ஆரம்பிக்கப்பட்டதுடன், இதன்போது 2,889 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். நாடளாவிய ரீதியில் இதுவரையான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட யுக்திய சுற்றிவளைப்புகளில் 17,837 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கையின்போது கைது செய்யப்பட்ட 850 பேர் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் மேலதிக விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், 186 பேருக்கு எதிராக சட்டவிரோத சொத்துக் குவிப்பு விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், 1,187 சந்தேக நபர்கள் புனர்வாழ்வு மத்திய நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு ஏற்கனவே சந்தேக நபர்களாக பட்டியலிடப்பட்டு தேடப்பட்டு வந்த 4,665 சந்தேக நபர்களில் 1,375 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.