63
முப்பொழுதும் சிந்தை செய்து
மூளையைச் சலவை செய்து
எப்பொழுதும் நன்மை பெற
எழுதிவைத்த நியதிகள் பல
மூதறிஞர் அவை கூடி
முழுநேரம் வாதம் செய்து
வாதந்தனை நீக்கிடவே
வகுத்தளித்த வரன்முறைகள் பல
நியதிகளுக்கு நெருப்பிட்டு
வரன்முறையின் வாயடைத்து
காலத்தை வீணடிப்பர்
கள்ளமனம் உள்ள குழாம்
நியதிகளை நிந்தித்து
கடமைகளைக் காடேற்றி
சம்பளமும் கிம்பளமும் – அவர்
சுகமாகச் சேர்த்திடுவார்
நியதிகள் என்ன செய்யும்
நீதிக்காய்க் கண்ணீர் வடிக்கும்
வகுத்தளித்த நியதியெல்லாம்
ஏட்டுநிலை மட்டும்தான்.