கேள்வி:- உங்களை பற்றிய அறிமுகம்?
பதில்:- கருப்பையா செல்வராஜா எனும் பெயரைக் கொண்ட நான் ஒரு சட்டத்தரணியாக உள்ளதுடன், சிறுகதை எழுத்தாளராகவும் உள்ளேன். இலங்கை பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றதுடன், லண்டன் பல்கலைக்கழகத்தில் முதுமாணி பட்டம் பெற்றுள்ளேன். அத்துடன், இலங்கை சட்டக் கல்லூரியில் விரிவுரையாளராக கடமையாற்றியுள்ளேன். சட்டத்துறையில் சுமார் 40 வருடகால அனுபவத்தைக் கொண்டிருக்கிறேன்.
தற்போது பிரிட்டன் அரசியல் நீரோட்டத்தில் இரண்டறக் கலந்து, கவுன்சிலராகி, அந்நாட்டின் பழமைமிக்க அரசியல் கட்சியின் பாராளுமன்ற வேட்பாளராக போட்டியிட்டு செல்வாக்குமிக்க அரசியல்வாதியாகவும் விளங்கி வருகின்றேன்.
லண்டனில் முதல் தமிழ் கவுன்சிலர் எனும் பெருமையையும் பாராளுமன்றத்தில் வேட்பாளராக போட்டியிட்ட முதல் தமிழ் வேட்பாளர் எனும் பெருமையையும் நான் பெறுகின்றேன். அத்துடன், பல்வேறு சமூகப் பணிகளிலும் ் ஈடுபட்டு வருகின்றேன். லண்டனில் வசித்து வந்தாலும், ஒவ்வொரு வருடமும் இலங்கை வந்து செல்வது வழமையாகும்.
கேள்வி:- உங்களது எழுத்துத்துறை அனுபவம் பற்றி கூறுங்களேன்?
பதில்:- எனது எட்டாவது, ஒன்பதாவது வயது முதல் எழுத்துத்துறையில் அதீத ஈடுபாடு கொண்டு விளங்கிய நான், சிறுகதைகளை எழுத ஆரம்பித்தேன். மாத்தளை செல்வராஜா எனும் புனைப்பெயரில் எனது சிறுகதைகள் வெளிவரத் தொடங்கியதுடன், இதுவரையில் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளேன். ஆரம்ப காலத்தில் காதல், சமூக கதைகளை நான் எழுதினாலும் கூட, மலையக சமூகத்தில் இடம்பெறும் உண்மைச் சம்பவங்களை உள்ளடக்கியே நான் சிறுகதைகளை எழுதி வருகின்றேன்.
எனக்கு கதைகள் எழுத ஊக்கம் அளித்து கதைகளை பத்திரிகையில் பிரசுரித்து உதவியவர்களில் முக்கியமானவராக தினகரன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர், காலஞ்சென்ற சிவகுருநாதன் விளங்கினார். அவர் ஒரு நல்ல உள்ளம் படைத்த சிறந்த மனிதராக விளங்கினார்.
கேள்வி:- உங்களது முதலாவது சிறுகதை என்ன? அச்சிறுகதை எந்தப் பத்திரிகையில் வெளிவந்தது?
பதில்: –எனது முதலாவது சிறுகதை ‘கள்ளத்தோணியா’. எனது 14ஆவது வயதில் ‘மலைமுரசு’ இலக்கிய சஞ்சிகையில் வெளிவந்தது. அப்போதைய காலகட்டத்தில் மலையகத்தில் ‘மலைமுரசு’ சஞ்சிகை மிகவும் பிரபலமாக இருந்ததுடன், இந்தியாவில் அக்காலத்தில் வெளியாகிய ‘மணிக்கொடி’ போன்ற சஞ்சிகைகளுக்கு ஒப்பானதாகவும் ‘மலைமுரசு’ சஞ்சிகை பிரசித்தி பெற்று விளங்கியது. மலைமுரசு சஞ்சிகையில் மலையகத்திலுள்ள அனைத்து எழுத்தாளர்களும் எழுதினர். நான் எழுதிய ‘கள்ளத்தோணியா’ சிறுகதை மலைநாட்டு மக்கள் மத்தியில் புரட்சியை ஏற்படுத்தியதென்றே கூற வேண்டுமென்பதுடன், சிறுகதையின் ‘கள்ளத்தோணியா’ எனும் தலையங்கமே புரட்சிக்கு காரணமாக அமைந்தது.
கேள்வி:- ‘கள்ளத்தோணியா’ சிறுகதைக்கு பின்னர் நீங்கள் எழுதிய ஏனைய சிறுகதைகள் ‘மலைமுரசு’ சஞ்சிகையை தவிர வேறு பத்திரிகைளில் வெளிவரத் தொடங்கினவா?
பதில்:- ஆம். ‘கள்ளத்தோணியா’ சிறுகதைக்கு பின்னர் நான் எழுதிய பல சிறுகதைகள் இலங்கையில் தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் பிரபலம் மிக்க பத்திரிகைகளான தினகரன் வாரமஞ்சரி, வீரகேசரி, தினக்குரல் ஆகிய பத்திரிகைகளிலும் எமது நாட்டில் ஏற்கெனவே வெளிவந்த சிந்தாமணி பத்திரிகையிலும் வெளிவந்துள்ளன. தினகரன் வாரமஞ்சரி, வீரகேசரி, தினக்குரல், சிந்தாமணி ஆகியவற்றுக்கும் லண்டனில் புதினம், பூபாள ராகங்கள் ஆகியவற்றுக்கும் நான் என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன்.
இவ்வாறு எமது நாட்டில் அனைத்து பத்திரிகைகளிலும் எனது சிறுகதைகள் வெளிவரும் வாய்ப்பு கிட்டியமையை நான் பெரும் பாக்கியமாகவே கருதுகின்றேன்.
கேள்வி:- உங்களது சிறுகதைகளில் கருப்பொருள் என்ன?
பதில்: –மலையக மக்களின் நலனையே கவனத்தில் கொண்டுள்ளேன். இதனால் அம்மக்களின் பவ்வேறுபட்ட பிரச்சினைகளை எனது சிறுகதைகளில் வெளிக்கொண்டு வந்துள்ளேன். நான் எழுதிய இரண்டு சிறுகதைகளை தவிர, ஏனையவை அனைத்தும் மலையகத்தையும் மலையக மக்களையும் அம்மக்களின் பிரச்சினைகளையும் அடிப்படையாக கொண்டவையாகும்.
நான் மலையக சிறுகதை எழுத்தாளராக உள்ளதால், மலையக பிரச்சினைகளே எனது சிறுகதைகளில் எதிரொலிக்கின்றன.
கேள்வி:- உங்களது ‘கள்ளத்தோணியா’ சிறுகதை உட்பட ஏனைய சிறுகதைகள் தற்போதும் கைவசம் உள்ளனவா?
பதில்: –இல்லை. பத்திரிகைகளில் வெளிவந்த எனது சிறுகதைகளில் முக்கால்வாசி சிறுகதைகள் 1983 கலவரத்தின் போது, மாத்தளையிலுள்ள எனது வீட்டுடன் எரிந்து விட்டன.
நான் ஆரம்பம் தொட்டு எழுதிய சிறுகதைகளை லண்டனிலுள்ள எழுத்தாளர்கள் கோரிய போது, அவற்றில் 15 சிறுகதைகளை தேசிய சுவடிக்கூடத் திணைக்களத்தில் இருந்து பெற்றுக்கொண்டேன். ஆயினும், சுமார் 25 சிறுகதைகளை என்னால் பெற்றுக்கொள்ள முடியாமல் போனது. எனது முதலாவது சிறுகதையான ‘கள்ளத்தோணியா’ சிறுகதையைக் கூட தேசிய சுவடிகள்கூடத் திணைக்களத்திலிருந்து என்னால் பெற்றுக்கொள்ள முடியவில்லை.
கேள்வி: –சிறுகதையை தவிர, உங்களின் ஏனைய எழுத்துத்துறை ஈடுபாடுகள் பற்றிக் கூறுங்களேன்?
பதில்:- ஆம். கவிதை எழுதுவதிலும் எனக்கு ஈடுபாடு உள்ளது. சில கவிதைகள் பத்திரிகைகளில் வெளிவந்தன. பாடசாலையில் ஒன்பதாவது வகுப்பில் கல்வி கற்ற போது, ‘ஈழநாடு’ எனும் தலைப்பில் நான் எழுதிய கவிதை பாடசாலை சஞ்சிகையில் வெளிவந்தது. பின்னர் உயர் கல்வி காரணமாக கவிதை எழுதுவதை கைவிட்டேன்.
ஆங்கில பத்திரிகைகளான ஒப்சேவர், டெய்லிநியூஸ் ஆகிய பத்திரிகைகளில் பல்வேறு கட்டுரைகளை எழுதியுள்ளேன். டெய்லிநியூஸில் மலையக மக்கள் எதிர்நோக்கும் சாதிப் பிரச்சினை, கல்வி மற்றும் சம்பளப் பிரச்சினைகள், மலையகத்தில் லயனில் வசிப்பவர்களின் பிரச்சினை, வாழ்வாதாரப் பிரச்சினை உள்ளிட்ட விடயங்களை முன்வைத்து பல கட்டுரைகளை எழுதியுள்ளேன்.
1972இல் டெய்லிநியூஸ் ஆங்கிலப் பத்திரிகையில் ‘The Plantation Worker’ எனும் தலைப்பில் எனது கட்டுரை வெளிவந்ததுடன், அக்கட்டுரையில் மலையக மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை
அப்பட்டமாக எடுத்துக் காட்டினேன். இதனால் அக்கட்டுரை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
கேள்வி:- உங்களது சிறுகதைகளைத் தொகுத்து நூலாக வெளியிட்டிருக்கின்றீர்களா?
பதில்:- ஆம். நான் எழுதிய சிறுகதைகளை தொகுத்து ‘காவேரி’ எனும் தலைப்பில் எனது முதலாவது நூலை 2003 நவம்பரில் மாத்தளை முத்துமாரியம்மன் கோயிலிலும் அதனைத் தொடர்ந்து கண்டியிலும் வெளியிட்டேன். இந்நூல் வெளியீட்டு விழாவில் எழுத்தாளர்கள் பலர் கலந்துகொண்டதுடன், எனது நூலுக்கான சிறந்த விமர்சனத்தையும் முன்வைத்தனர்.
கேள்வி:- நீங்கள் இலங்கையிலிருந்து லண்டனுக்கு புலம்பெயர்ந்து செல்லக் காரணம் என்ன?
பதில்:- லண்டனில் உயர் கல்வியை தொடரும் நோக்கமே பிரதான காரணமாக இருந்தது, 1984 இல் லண்டனுக்கு புறப்பட்டேன். அங்கு சட்டத்துறையில் உயர் கல்வியை தொடர்ந்தேன்.
கேள்வி:- இன்னமும் பல நூல்களை வெளியிடும் எண்ணமுண்டா??
பதில்:- ஆம். எதிர்வரும் 2024 மே அல்லது அதற்கடுத்த மாதங்களில் எனது இரண்டாவது நூலை வெளியிட எதிர்பார்த்துள்ளேன். நான் எழுதிய 30 சிறுகதைகளின் தொகுப்பாக இது வெளிவரும்.
அத்தோடு ஆங்கிலமொழியில் நாவலொன்றை நான் எழுதி வருவதுடன், கூடிய விரைவில் அந்நாவலையும் வெ ளியிடவிருக்கின்றேன்.
கேள்வி:- நீங்கள் தற்போது புலம்பெயர்ந்து வெளிநாட்டில் வாழ்கின்றீர்கள். புலம்பெயர் சூழல் பற்றியும் உங்கள் சிறுகதைகள் பேசியுள்ளனவா?
பதில்:- ஆம், லண்டனில் சட்டத்தரணியாக தொழில்புரிந்த அனுபவம் மற்றும் எனது சொந்த அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு சிறுகதையொன்றை எழுதியுள்ளேன். அதுதான் ‘விடுதலையை நோக்கி…’
இலங்கையில் நிலவிய யுத்த சூழ்நிலை காரணமாக பல்வேறு இன்னல்களுக்கும், துன்பங்களுக்கும் ஆளாகி உயிர் அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்தோர் அனேகர். இவ்வாறு புலம்பெயர்ந்தோர் வெளிநாடுகளில் அகதி அந்தஸ்து கோருதல், ஆரம்பத்தில் அகதி அந்தஸ்து கோரிக்கை நிராகரிக்கப்படுதல், பின்னர் அவர்களுக்காக ஆதாரங்களை திரட்டி, நீதிமன்றத்தில் வாதாடி, அகதி அந்தஸ்தை பெற்றுக்கொடுத்தல் உள்ளிட்ட விடயங்கள் ‘விடுதலையை நோக்கி…’ எனும் சிறுகதையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
கேள்வி:- தற்போது மலையக இலக்கியம் எவ்வாறு உள்ளது?
பதில்:- தற்போது மலையக இலக்கியம் பாரிய முன்னேற்றம் கண்டுள்ளது. மலையக இலக்கியம் புதிய பரிமாணங்களைக் கண்டு, ஈழத்து தமிழ் இலக்கியத்தில் முக்கிய இடத்தை வகிக்கின்றது. தற்போது மலையக எழுத்தாளர்களுக்கு தனித்துவமான ஓர் இடம் உண்டு. பல புதிய எழுத்தாளர்கள் மலையகத்தில் உருவாகி வருகின்றனர். இலக்கியத்துறையில் அதிக ஈடுபாடுடைய பல எழுத்தாளர்களை மலையகத்தில் காணமுடிகின்றது.
கேள்வி:- நீங்கள் இலங்கையை விட்டு புலம் பெயர்ந்தபோதிருந்த மலையக சமூகமா இப்போது நீங்கள் பார்ப்பது?
பதில்:- ஆம். அன்றைய மலையக மக்கள் வாழ்வாதாரம் உட்பட அனைத்திலும் மிகவும் பின்தங்கி இருந்தனர். ஆனால், இன்றைய மலையகப் பிள்ளைகள் கல்வியில் முன்னேற்றம் கண்டு வருகின்றனர். இன்றைய மலையக பிள்ளைகள் மிகவும் ஆர்வத்துடன் கல்வி கற்பதுடன், பல்கலைக்கழகம்வரை சென்று, அதற்கப்பால் உயர் கல்வியையும் தொடர்கின்றனர். கற்றல் சார்ந்த பல்வேறு துறைகளிலும் மலையக பிள்ளைகள் தற்போது சிறந்து விளங்குகின்றனர்.
ஆனால் கல்வியில் சிறந்து விளங்கினாலும், அம்மக்களின் வாழ்க்கைத்தரம் இன்னும் போதியளவில் உயர்வடையவில்லை. அதற்கு அவர்களிடம் போதிய வசதி இல்லை. பணம், சுகாதாரம், சீரான வாழ்விடம் போன்ற அடிப்படை தேவைகள் இன்றும் அவர்களுக்கு உரிய முறையில் பூர்த்தி செய்து கொடுக்கப்படவில்லை.
கேள்வி:- மலையக மக்களுக்காக நீங்கள் முன்வைக்கும் வாதம் என்ன?
பதில்:- இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான ஜீவன் தொண்டமான், மலையக தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளிமார்கள் ஆகியோர் மலையக மக்கள் எதிர்நோக்கி வரும் சம்பளப் பிரச்சினை, வீட்டு வசதியின்மை பிரச்சினை, குடியுரிமை பிரச்சினை உள்ளிட்ட விடயங்கள் பற்றி பேசுகின்றனர். இது வரவேற்கத்தக்கதாயினும், இப்பிரச்சினைகளை தீர்த்துவைத்து மலையக மக்களின் வாழ்வை பிரகாசிக்க செய்ய வேண்டும்.
மலையக மக்களின் லயன் வாழ்க்கை முறையை ஒழித்து, அடிப்படை வசதிகள் கொண்ட வீடுகளில் அவர்களை வாழவைக்க வேண்டும், மலையக மக்களுக்கு நாள் சம்பளமாயின் சுமார் 1,800 ரூபாவரை பெற்றுக்கொடுக்க வேண்டும். அல்லாவிடின், அம்மக்கள் மாதாந்த சம்பளத்தை பெற்றுக்கொள்ள வழிசெய்ய வேண்டும். மலையக மக்களின் நலனுக்காக அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து செயற்பட முன்வர வேண்டும்.
கேள்வி:- இறுதியாக வாசகர்களுக்கு நீங்கள் கூற விரும்புவது என்ன?
பதில்:- இலங்கையில் தமிழ் மக்கள் மிகவும் கஷ்டத்தை எதிர்நோக்குவதுடன், மலையகத்திலும் யாழ்ப்பாணத்திலுமே தமிழ் மக்கள் அதிகளவில் கஷ்டத்தை எதிர்நோக்குகின்றனர். மலையக மக்களுக்காக, அவர்களின் நலன்களுக்காக, அவர்களின் சுபீட்சமான வாழ்வுக்கான விடயங்கள் நான் இனிமேலும் எழுதும் சிறுகதைகளில் முன்வைக்கப்படும் என்பதுடன், மலையக மக்களின் ஒளிமயமான விடியலுக்காகவும் எனது ஆத்ம திருப்திக்காகவும் எனது உயிர் பிரியும்வரை எனது சிறுகதைகள் மூலமாக மலையக மக்களுக்காக எனது குரல் ஓங்கி ஒலித்துக்கொண்டே இருக்கும். மலையக மக்களுக்காக எனது சிறுகதைகள் தொடர்ந்தும் பேசிக்கொண்டே இருக்கும்.
நேர்கண்டவர் - ஆர்.சுகந்தினி