நாட்டை பொறுப்பேற்று கடந்த 15 மாதங்களில் நாட்டின் நல்வாழ்வுக்கு தேவையான சுமார் 45 சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளை புதுப்பித்திருப்பதுடன், எதிர்காலத்திலும் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக, நீதி அமைச்சர் விஜேயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.
நீதி அமைச்சில் நேற்று முன்தினம் (22) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய அவர்,
“இந்த சமூகம் அனைத்துத் துறைகளிலும் சீரழிந்து விட்டதுடன், இது ஓரிரு நாளில் நடந்ததல்ல. நீண்டநாட்களாக நடந்து வந்ததொன்று. தற்போது உச்சத்தை எட்டியுள்ளது.
இந்நிலையை மாற்றியமைக்கவே எமக்கு தேவையாக இருக்கிறது. அதனால் நாம் நாட்டை பொறுப்பேற்று கடந்த 15 மாதங்களில் நாட்டின் நல்வாழ்வுக்கு தேவையான சுமார் 45 சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளை புதுப்பித்திருக்கிறோம். எதிர்காலத்திலும் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள எதிர்பார்க்கிறோம். கிராமமும் கோயிலுமென்ற கருத்து இப்போது மாறிவிட்டது. மற்ற மதங்களிலும் அப்படியே. பணத்தின் அடிப்படையிலான சமுதாயமே இந்தக் காலத்தில் உருவாகி இருக்கிறது.
சமூகத்தை போதைப்பொருள் கட்டிப்பிடித்துக்கொண்டிருக்கிறது.
இந்த சமூகத்தை நாம் நல்வழிக்கு கொண்டுவர வேண்டும். அதனாலேயே நீதி அமைச்சென்ற வகையில் சமூகத்தின் நல்வாழ்வுக்கு தேவையான அடித்தளத்தை அமைத்து வருகின்றோம். அதனொரு கட்டமாக சமுதாயத்துக்காக உழைக்கும் முன்மாதிரியான மற்றும் பொறுப்பான நபர்களுக்கு சமாதான நீதிவான் பதவி வழங்க நாம் தீர்மானித்தோம்.
1978 நீதிமன்ற அமைப்பு சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதிக்கு மேல் நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்க அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது.
நீதிச்சேவை ஆணைக்குழுவுக்கு மாவட்ட நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்க அதிகாரம் வழங்கப்பட்டிருப்பது போன்று, நீதி அமைச்சருக்கு சமாதான நீதிவான்களை நியமிக்க அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால், இந்த நியமனங்களை நாம் கண்டபடி வழங்க மாட்டோம்.
கடந்த காலங்களில் தேவையற்ற நபர்களுக்கும் சமாதான நீதிவான் நியமனம் வழங்கப்பட்டிருக்கிறது. அவ்வாறான நபர்கள் சிலரின் நியமனங்களை இரத்துச்செய்ய நடவடிக்கை எடுத்தோம்” என்றார்.