தற்போதைய பொருளாதார நெருக்கடியை அடுத்து மக்களை எச்சரிக்கும் வகையிலான அறிவுறுத்தல்கள் எவற்றையும் தாம் வெளியிடவில்லையென, பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரும் நிஹால் தல்துவ தெரிவித்தார். தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக மக்களை மிகவும் அவதானமாக இருக்குமாறு பொலிஸாரால் அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் இதற்கமைய சில விடயங்கள் வலியுறுத்தப்பட்டிருப்பதாகவும் செய்திகளும், பதிவுகளும் முகநூல் மற்றும் வட்ஸ்அப் ஆகியவற்றில் பகிரப்பட்டு வருகின்றன.
இது தொடர்பாக இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தை தளமாக கொண்டியங்கி வரும் ‘Fact Seeker’ இனால் ஆராய்ந்து வெளியிடப்பட்டுள்ள தெளிவுப்படுத்தலிலேயே மேற்கண்ட விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸாரால் வெளியிடப்பட்டிருப்பதாக பகிரப்பட்டு வந்த பதிவுகளில் ‘விலை உயர்ந்த கடிகாரங்களை அணியாதீர்கள், விலை உயர்ந்த மாலைகள், வளையல்கள், காதணிகளை அணியாதீர்கள், உங்கள் கைப்பைகள் தொடர்பாக கவனமாக
இருங்கள், ஆண்கள் விலை உயர்ந்த கைக்கடிகாரங்கள், விலை உயர்ந்த செயின்கள் அணிவதை தவிர்க்க வேண்டும், உங்கள் விலை உயர்ந்த கையடக்க தொலைபேசிகளை பொது இடங்களில் பயன்படுத்தாதீர்கள், அந்நியர்களை காரில் அழைத்துச் செல்வதை தவிர்க்கவும், தேவைக்கு அதிகமான பணத்தை எடுத்துச் செல்ல வேண்டாம், நீங்கள் பயணம் செய்யும் போது உங்கள் ஏ.டி.எம். மற்றும் கிரெடிட் கார்ட்களை பாதுகாப்பாக வைத்திருங்கள்’ ஆகிய அறிவுறுத்தல்கள் உள்ளடங்கியிருந்தன. இது தொடர்பாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவவிடம் ‘Fact Seeker’ இனால் வினவப்பட்ட போது, பொலிஸ் திணைக்களத்தால் அவ்வாறான அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லையென, அவர் உறுதிப்படுத்தினார்.