உன்னை நாடி…
விண்மகளின் வடிவம்
நீள் கடலில் இறங்கும்
விஞ்சி நிற்கும் பொழிவில்
நீண்ட உரை பகரும்…
இன்னலுற்ற மானிடரும்
இங்கே வருவர்
இன்சுகத்தை நாடுவாரும்
இங்கே இருப்பர்…
கல்மனம் கொண்டாரும்
கற்கண்டாய் இனிப்பாரும்
குஞ்சு குருத்தோடு
கூடி விளை யாடிடுவர்…
பட்டம் பறக்குங்கால்
மிட்டாயும் தீர்ந்திடும்
பந்துடனே எறிபடும்
பந்துக்களின் சீற்றம்…
மீனினத்தின் அழகில்
மீண்டிடும் மோகம்
கப்பல் தவழும் கதியில்
கவிவரியும் ஊறும்…
முத்தெடுக்க மூழ்கியவர்க்கு
முடிந்திடாத சொர்க்கம்
புத்தாக்க கருவிகளும்
தந்துதவும் விளக்கம்…
நாண வரும் கதிரவனின்
நன் நயனக் காட்சி
இன்பத் திகைப் பூட்டும்
இறை அத் தாட்சி…
சிறுநண்டு கீறும் படம்
சிந்தனையைத் தூண்டும்
சிப்பிகள் சிதைந்த தடம்
சித்தாந்தம் பேசும்…
நீள் நிலப்போர்வை
நின்றவுடன் பொங்கும்
கொந்தளிப்பில் நொந்தவை
காந்தமென இழுக்கும்…
நெஞ்சகத்தில் அச்சமெனும்
பஞ்சணைகள் இருந்தும்
களித்து வர கையிடுக்கில்
குழந்தை மனம் ஏங்கும்….