கனடாவின் ரொறன்ரோ மாநகரில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை 15ஆம் திகதி கனேடிய பல்லின பத்திரிகையாளர்கள் கழகத்தின் சமூக சேவையாளர்கள் மற்றும் பத்திரிகை ஆசிரியர் களுக்கான விருதுகள் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது.
கழகத்தின் தலைவர் தோமஸ் சாரஸ் தனது குழுவினருடன் அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாகச் செய்திருந்தார்.
இவ்வருடத்தின் சமூகசேவையாளர்களுக்கான விருதுகளைப் பெற்ற ‘கனடா உதயன்’ நண்பர்களான தொழிலதிபர் தேவதாஸ் சண்முகலிங்கம் (தாஸ்) மற்றும் மொன்றியால் எழுத்தாளர் வீணைமைந்தன் சண்முகராஜா ஆகியோரை அங்கு கூடியிருந்த நண்பர்கள் அனைவரும் வாழ்த்தினர்.
குறிப்பாக கனடா உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லோகேந்திரலிங்கம் மற்றும் ‘உலகத் தமிழர்’ பத்திரிகையின் பிரதம ஆசிரியர் கமலவாசன் ஆகியோர் சகிதம் அங்கு கூடியிருந்த பத்திரிகைத்துறை, வானொலி மற்றும் தொலைக்காட்சித்துறை நண்பர்கள் அனைவரும் விருதுகளைப் பெற்ற இரு வெற்றியாளர்களையும் வாழ்த்தினர். மாகாண பாராளுமன்ற உறுப்பினரும் போக்குவரத்து அமைச்சின் இணை அமைச்சருமான விஜே தணிகாசலமும் அங்கு வருகைத் தந்திருந்தார்.
அங்கு வருகை தந்திருந்த தமிழ் பேசும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் கனடா உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியரும் கனடிய பல்லின பத்திரிகையாளர்கள் கழகத்தின் சிரேஷ்ட உப தலைவர்களில் ஒருவருமான லோகேந்திரலிங்கம் நன்றி தெரிவித்தார்.