நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்கும் பாரிய பொறுப்பு பாதுகாப்புப் படையினருக்கு இருப்பதாகவும், அதில் தலையிடவோ அல்லது கட்டுப்படுத்தவோ எவருக்கும் இடமளிக்க முடியாது எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தினார்.
மக்களின் இறைமையையும் நாட்டின் தனித்துவத்தையும் பாதுகாக்கும் பொறுப்பு பாதுகாப்புத் தரப்பினருக்கும் உண்டு எனச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இன மற்றும் மத ரீதியாக எவரேனும் செயற்பட முற்பட்டால் அது இலங்கையின் தனித்துவத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் வலியுறுத்தினார்.
தியத்தலாவ இலங்கை இராணுவ கல்வியிற் கல்லூரியின் கெடட் அதிகாரிகள் விடுகை அணிவகுப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக (16) கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
தியத்தலாவை இராணுவ கல்வியியற் கல்லூரிக்கு வருகை தந்த முப்படைகளின் தளபதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இராணுவ மரியாதை வழங்கி பெருமையுடன் வரவேற்கப்பட்டார்.
தேசத்திற்கும் இலங்கை இராணுவத்திற்கும் வீரமிக்க தலைவர்களை உருவாக்கிய இராணுவத்தின் சிறந்த உத்தியோகத்தர் பயிற்சி நிறுவனமான தியத்தலாவ இராணுவ கல்வியற் கல்லூரியின் 98 ஆவது விடுகை அணிவகுப்பு நிகழ்வு இதுவாகும். மேலும் பயிற்சியை நிறைவு செய்த 274 கெடட் உத்தியோகத்தர்கள் இன்று அதிகாரிகளாக நியமிக்கப்பட்டனர்.
வெளிநாடுகளைச் சேர்ந்த 06 கெடட் உத்தியோகத்தர்களும் பயிற்றுவிக்கப்பட்டு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டமை விசேட அம்சமாகும்.
முப்படைகளின் தளபதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்துகொண்டு கெடட் உத்தியோகத்தர்களின் விடுகை அணிவகுப்பை பார்வையிட்டதுடன், திறமை வாய்ந்த கெடட் அணிக்கு விருதினையும், கெடட் வீரர்களுக்கு வாளையும் வழங்கினார்.