உனக்குப் பிடித்தமானவர்கள்
உன்னைக் கொண்டாடுபவர்கள்
உன்னிடம் பிரியம்
கொண்டவர்கள்
உன்னைப் பெருஞ்சொந்தமென
ஏற்றவர்கள்
உன்னைப் பெருஞ்சொத்தென
நினைப்பவர்கள்
உன்னை நினைக்கும் போதெலாம்
புன்னகை பூப்பவர்கள்
உனைப் பெரிய பலமென
எண்ணிக்கொண்டவர்கள்
இப்படி…
யார் உன் நெஞ்சுக்குழிக்குள்
உட்கார்ந்து
பேருவகையின் இன்பத்தேனைக்
குழைத்து வழிந்தோடச்
செய்கிறார்களோ
அவர்களைத் தவிர
வேறு யாரும்
வேறு எதுவும்
உலகில் அழகே இல்லை
உன் கண்களுக்குள்
அழகிய சாம்ராஜ்யம்
அமைத்து
அமைதியாக
உன்னைக் கைப்பற்றியவர்கள்
அவர்கள்…
உனக்குள் அவர்களும்
அவர்களுக்குள் நீயும்
அடங்கிக் கிடப்பது
நேசத்தின் நீட்சியன்றி
வேறென்ன?
அந்நேசம் சாத்வீகமெனும்
வெள்ளையாடை தரித்த
ஒற்றைப் பூவாக
நறுமணம்
வீசிக்கொண்டிருக்கிறது…!