பாராளுமன்றத்தில் 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீட்டு குழு நிலை விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்த குழு நிலை விவாதம் ஆரம்பிக்கப்பட்ட தினத்தில் இருந்து அதற்கான நேரத்தை விழுங்கும் வகையில் ஏதாவது வேறு விவகாரங்கள் சபையில் கொண்டுவரப்பட்டு அந்த விவகாரங்கள் தொடர்பில் ஆதரவாகவும் எதிராகவும் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் மூலம் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு தினமும் சில மணி நேரங்கள் சபையில் சர்ச்சை ஏற்படுவது வழமையாகி விட்டது.
அவ்வாறு ஏதாவது பழைய பிரச்சினையை புதிதாக உருவாக்கி அதை பூதாகாரமாக கொண்டு வராவிட்டால் தமக்கு தூக்கம் வராது என்ற நிலையில் சிலர் செயற்படுவதையும் காண முடிகின்றது.
இன்றைக்காவது சபை நடவடிக்கைகளை வழமை போன்று முன்னெடுத்துச் செல்ல முடியுமா என காலையிலேயே பெருமூச்சுடன் சபா பீடத்தில் வந்து அமரும் சபாநாயகர் மற்றும் பிரதி சபாநாயகர் ஆகியோரின் பாடு தினமும் பெரும்பாடாகி விடுகின்றது.
சம்பந்தப்பட்ட விவகாரத்தை ஒருவர் ஆரம்பிக்கும் போது அவர் அதனோடு சம்பந்தப்படுத்தி யாராவது ஒருவருடைய பெயரை சாடை மாடையாக குறிப்பிட்டாலும் உடனே அவர் எழுந்து ஒழுங்குப்பிரச்சினை என சபையில் குரல் எழுப்பி அதற்காக பல நிமிடங்களை வீணாக்குவதும் தொடர்கிறது.
அதனால் குறித்த நேரத்தில் வழமையான நடவடிக்கைகளுக்குச் செல்ல முடியாது சபாநாயகரும் பிரதி சபாநாயகரும் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகி சபையைக் கட்டுப்படுத்த முடியாத நிலை உருவாவது, அதனைத் தொடர்ந்து சில நிமிடங்களுக்கு சபையை ஒத்தி வைக்கும் நிலை கூட ஏற்படுவதும் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது.
அவ்வாறு இந்த வாரத்தில் சூடு பிடித்த ஒரு விடயம்தான் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கடந்த அரசாங்க காலத்தில் கலாசார அமைச்சராக பதவி வகித்தபோது கலாசார நிதியத்தின் நிதியை முறைகேடாக கையாண்டுள்ளார் என்ற விவகாரமாகும்.
இந்த விவகாரத்தில் கதாநாயகனாக முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவும் வில்லனாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் சிறப்பாக தமது வகிப்பாகங்களை முன்னெடுத்துச் செல்வதை காண முடிகிறது. கதாநாயகனுக்கும் வில்லனுக்கும் உதவுவதாக நினைத்து அவ்வப்போது சபையில் குரல் எழுப்புவோர் நேரத்தை வீணடிப்பதில் முக்கிய பங்கு வகிப்பதுடன் அதனை சர்ச்சையாகக் கொண்டு செல்லும் விடயத்தை கைங்கரியமாக முன்னெடுத்து செல்வதையும் காணமுடிகிறது.
கலாசார நிதியத்தின் நிதியை முறைகேடாக கையாண்டது மட்டுமன்றி எதிர்க்கட்சித் தலைவர் அவரது மனைவி நடத்தும் சலூன் நடவடிக்கைகளுக்கு கலாசார நிதியத்தின் ஊழியர்களை பயன்படுத்தினார் என்றும் அவர்களுக்கான சம்பளத்தையும் அதன் ஊடாகவே வழங்கினார் என்றும் மஹிந்தானந்த அளுத்கமகே குற்றச்சாட்டை முன் வைத்து வருகின்றார்.
அதனை உறுதிப்படுத்தும் வகையில் ஆதாரமாக சில ஆவணங்களையும் அவர் சபையில் சமர்ப்பித்ததுடன் அந்த ஆவணங்கள் போலியானவை அது உரிய முறையில் உரிய அதிகாரியால் உறுதிப்படுத்தப்படாதவை என்ற தர்க்கத்தை முன் வைத்து எதிர்க்கட்சித் தலைவர் அவரது தரப்பு ஆதாரங்களான சில ஆவணங்களை சபையில் சமர்ப்பித்துள்ளதையும் குறிப்பிட வேண்டும். மஹிந்தானந்த அளுத்கமகே எம்.பி சமர்ப்பித்துள்ள ஆவணங்கள் போலியானவை என்று குறிப்பிடும் எதிர்க்கட்சித் தலைவர் அந்த ஆவணங்கள் உண்மையானவை என ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டால் தாம் பதவி விலகுவதாகவும் சபையில் சவால் விடுத்ததைக் குறிப்பிட வேண்டும். சபையில் அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீட்டு குழுநிலை விவாதங்கள் இடம் பெற்றுக் கொண்டிருக்கும் போது இடை நடுவில் யாராவது இந்த விவகாரம் தொடர்பில் ஓரிரு வார்த்தைகளை அவிழ்த்து விடும்போது அதிலிருந்து ஆரம்பமாகின்றது சர்ச்சை. இனி வாத விவாதங்களைப் பார்ப்போம்.
மஹிந்தானந்த அளுத்கமகே எம்பி
கலாசார நிதியத்தின் நிதி முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த நிதி முறையற்ற விதத்தில் உபயோகிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் விடயங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபையில் விடுத்த சவாலுக்கமையை உடனடியாக பதவி விலக வேண்டும்.
கலாசார நிதியத்தின் நிதி பிரயோகம் சட்டத்திற்கு முரணானது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் அந்த நிதியை அவ்வாறு உபயோகிப்பதற்கான அனுமதி வழங்கப்படவில்லை என மத, புத்த சாசன, சமய விவகார, கலாசார அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அதற்கான கணக்காய்வு அறிக்கையை தான் சபையில் சமர்ப்பித்துள்ளதாகவும், அதன் மூலம் இந்த மோசடி உறுதியாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் தமது மனைவியின் சலூனுக்கு ஆட்களை சேர்த்துக் கொண்டுள்ளமை தொடர்பிலும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய கலாசார நிதியத்தை பயன்படுத்தி ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகத்தின் திருத்தப்பணிகளுக்கு நிதி வழங்கப்பட்டிருக்கின்றது. அதேபோன்று சஜித் பிரேமதாசவின் மனைவிக்கு 10 பாதுகாப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு அவர்களுக்கு அரசாங்கத்தினால் சம்பளம் வழங்கப்பட்டிருப்பதாக கணக்காய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
அந்த வகையில் அவர் பாராளுமன்றத்தில் விடுத்த சவாலுக்கமைய பாராளுமன்றத்தின் கௌரவத்தை மதித்து உடனடியாக பதவி விலக வேண்டும் என்றார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச
மஹிந்தானந்த அளுத்கமகே எம்.பி கலாசார நிதியத்தில் முறைகேடு இடம்பெற்றுள்ளதாக கூறி ஆவணம் ஒன்றை சபையில் சமர்ப்பித்துள்ளார்.
எனக்கும் எனது மனைவிக்கும் சேறு பூசும் நோக்கில் மொட்டுக் கட்சி ஆதரவாளர் ஒருவரால் தயாரிக்கப்பட்டுள்ள உள்ளக கணக்காய்வு அறிக்கையே இவ்வாறு சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அது தொடர்பான உண்மையான அனைத்து ஆவணங்களையும் சபையில் நான் சமர்ப்பித்துள்ளேன்.
அந்த வகையில் எனக்கும் எனது மனைவிக்கும் சேறு பூசும் வகையில் இந்த சபையில் அரச பொறியியல் கூட்டுத்தாபன உள்ளக கணக்காய்வு அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டது.
அது தொடர்பில் ஆராய்ந்தபோது அது அரச பொறியியல் கூட்டுத்தாபன உள்ளக கணக்காய்வு அதிகாரி என்.வி.டி.தம்மிக என்ற நபரால் தயாரிக்கப்பட்ட கணக்காய்வு அறிக்கை என்பது தெரியவந்தது
இந்த தம்மிக்க என்ற நபர் 2020 பெப்ரவரி 3ஆம் திகதி முதல் வர்த்தக கைத்தொழில்கள் மற்றும் சேவைகளுக்கான முற்போக்கு சங்கத்தின் அதிகாரிகள் குழுவின் குழு உறுப்பினராக செயல்படுகின்றார்.
18, பெப்ரவரி, 2020 அன்று பொதுஜன பெரமுன தொழிற்சங்கத்தின் மற்றொரு கடிதத்தின் மூலம் இவரை செயற்பாட்டு உள்ளக கணக்காய்வாளர் பதவிக்கு நியமிக்குமாறு அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் உப தலைவருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதற்கிணங்க உள்ளக கணக்காய்வு அறிக்கை அந்தக் கட்சியிலுள்ள தொழிற்சங்க உறுப்பினர்களை பயன்படுத்தி தவறாக தயாரிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, கணக்காய்வு பதவிக்கு நியமிக்கப்படும் நபர் அடிப்படை பட்டமும் 12 வருட அனுபவமும் பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் அவரால் இத்தகைய கணக்காய்வு பதவியை வகிக்க எந்த தகுதியும் கிடையாது. குறைந்தபட்சம் AAT தகுதி கூட இல்லாத ஒரு நபரே இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளார். அதனை அடிப்படையாக வைத்துப் பார்க்கும் போது அவை அனைத்தும் போலியான உள்ளக கணக்காய்வு அறிக்கைகள் என்பது புலனாகிறது.
அத்துடன் இந்த நபர் ஏற்கனவே சுயவிருப்பின் மூலம் பதவியை விட்டு விலகியவர். அவ்வாறான நபரையே குறித்த பதவிக்கு மீண்டும் நியமித்துள்ளனர். சுயவிருப்பின் மூலம் சேவையை விட்டு வெளியேறியவரை மீண்டும் அந்த பதவியில் இணைத்துக்கொள்ள முடியாது. அதுதான் நியதி. அது மாத்திரமல்லாது அவருக்கு பதவி உயர்வும் கூட வழங்கப்பட்டுள்ளமை விந்தையானது.
தற்போதைய அரசாங்கம் ஆட்சியை பொறுப்பேற்ற ஆரம்பத்திலேயே மத்திய கலாசார நிதியத்தின் ஊடாக 11 பில்லியன் ரூபா நிதி மோசடி மற்றும் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து அதனை ஆராய்வதற்காக குழு நியமிக்கப்பட்டது.
அந்தக் குழுவில் இடம்பெற்றிருந்த ஹரிகுப்த ரோஹணதீர எனும் நபர் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் ஷவின் சட்டத்தரணிகளில் ஒருவராவார்.
அவர் 2010 தேர்தலில் போட்டியிட்ட அக் கூட்டணியின் வேட்பாளர்களில் ஒருவர். அத்துடன், அவர்கள் மேற்கொண்ட விசாரணை அறிக்கையில் உறுப்பினர்கள் எவரும் கையெழுத்திடவில்லை. எனினும் இந்த அறிக்கை 2020ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலிலுக்காக அவர்களால் பயன்படுத்தப்பட்டதையும் குறிப்பிட வேண்டும்.
இந்த அறிக்கை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு அனுப்பிவைக்கப்பட்டது. அந்த ஆணைக்குழுவோ இலஞ்ச ஊழல் சட்டத்தின் கீழ் செயற்படுவதற்கு போதிய காரணங்கள் அதில் காணப்படவில்லை என தெரிவித்திருந்தது. அதன் பின்னர் கோப் குழு அது சம்பந்தமான விசாரணைகளை முன்னெடுத்தது. சம்பந்தப்பட்ட அமைச்சுக்களின் அதிகாரிகளை அழைத்து புதிய குழுவை நியமித்தது. அந்த குழுவின் அறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை.
ஏனெனில் அந்த விசாரணையின் அறிக்கையில் இந்த குற்றச்சாட்டுக்களில் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எவரும் குற்றவாளிகள் அல்ல என நிரூபிக்கப்பட்டுள்ளமையே அதற்குக் காரணம் என்றும் தெரிவித்தார்.
இதில் உண்மை – எது பொய் எது என்பதெல்லாம் ஒரு புறம் இருக்க, இந்த விவகாரம் தொடர்பில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் அவ்வப்போது விடயங்களை கிளறி விடுவதும் அதற்கு எதிர்க்கட்சியினர் பதிலளிக்கப் போய் விவகாரம் பூதாகரமாவதும் அதனால் சபை நடவடிக்கைகளில் நேரம் வீண் விரயமாவதும் அடிக்கடி நடக்கின்றது.
சபைக்கு ஒவ்வாத வார்த்தைப் பிரயோகங்கள் முன்வைக்கப்படுவதாலும் அடிக்கடி இந்த பிரச்சினை சர்ச்சைகளுக்கு வழிவகுப்பதாலும் அதற்கு ஏதாவது ஒரு வகையில் முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். அத்துடன் உயரிய சபையில் சிறுபிள்ளைத்தனமான செயற்பாடுகள், மோசமான வார்த்தைப் பிரயோகங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்பதே எமது தாழ்மையான கருத்து.
லோரன்ஸ் செல்வநாயகம்