* அதிகரிக்கப்படும் சம்பளம் குறித்து 31ஆம் திகதிக்கு முன் அறியத்தரவும்
* பெருந்தோட்டக் கம்பனி பிரதானிகளுக்கு ஜனாதிபதி பணிப்பு
* சம்பள அதிகரிப்பு தொடர்பான கூட்டு ஒப்பந்தமொன்றை மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான கூட்டு ஒப்பந்தமொன்றை மேற்கொள்ளுமாறும் தோட்டத் தொழிலாளர்கள் கோரும் குறைந்தபட்ச நாளாந்த சம்பளம் 1,700 ரூபாவை வழங்குதல் அல்லது அதிகரிக்கப்படும் சம்பளம் தொடர்பாக டிசெம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் அறியத்தருமாறும் தோட்டக் கம்பனிப் பிரதானிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை வழங்கியுள்ளார். பெருந்தோட்ட நிறுவனங்களின் பிரதானிகளுடன் நேற்று முன்தினம் (08) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இப்பணிப்புரையை விடுத்துள்ளார்.
2024ஆம் ஆண்டுக்கான இம்முறை வரவு – செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தின் பிரகாரம், பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகள் தமது வேலைத்திட்டங்களை எவ்வாறு தயாரிப்பதென்பதை அறிந்து கொள்வதற்காகவே இந்தக் கலந்துரையாடல் நடத்தப்பட்டது. தோட்டத் தொழிலாளர்களுக்கு காணி உரிமை வழங்குவதற்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வேலைத்திட்டம் தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
இது தொடர்பான எதிர்கால நடவடிக்கைகளுக்காக குழுக்களை நியமிக்க எதிர்பார்த்துள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி, தோட்டத் தொழிலாளர்களின் வீட்டுத் தேவைகள் தொடர்பாக ஆலோசிக்க குழுவொன்றை நியமிக்கவும், தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் பெருந்தோட்டக் கம்பனிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இன்னுமொரு குழுவை நியமிக்கவும் முன்மொழிந்தார். நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு ஏற்றுமதிப் பொருளாதாரத்தில் தமக்கு வலுவான நம்பிக்கை இருப்பதாகத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தை வெற்றியடைய செய்வதற்கு அனைவரினதும் பங்களிப்பு அவசியமென்றார். எதிர்காலத்தில் ஆசிய நாடுகளின் சனத்தொகை அதிகரிப்புடன் உணவுத் தேவையும் அதிகரிக்குமெனவும் இதற்காக இந்நாட்டின் ஏற்றுமதிப் பொருளாதாரம் தயாராக வேண்டுமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, பொருளாதார விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எஸ்.சமரதுங்க மற்றும் பிரதேச பெருந்தோட்டக் கம்பனிகளின் பிரதிநிதிகள் பலர் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.