உணவுப் பொதிகளுக்கான லன்ச் சீற் (Lunch Sheet) பாவனையை தடை செய்து, அதற்குப் பதிலாக மாற்றுத் திட்டத்தை அறிமுகப்படுத்த 6 மாத காலஅவகாசம் வழங்க மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கு சுற்றாடல், இயற்கை வளங்கள் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு பரிந்துரைத்துள்ளது.
இலங்கையில் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பாவனையை குறைத்தல் மற்றும் மீள்சுழற்சி செயன்முறையை மேம்படுத்துதல் தொடர்பாக கலந்துரையாட பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும தலைமையில் சுற்றாடல், இயற்கை வளங்கள் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு கடந்த செவ்வாய் (05) கூடிய போதே, இவ்வாறு பரிந்துரைக்கப்பட்டது.
சுற்றாடல் அமைச்சு, மத்திய சுற்றாடல் அதிகார சபை, இலங்கை சுங்கம், கமத்தொழில் அபிவிருத்தித் திணைக்களம் ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் இந்தக் குழுவில் உள்ளனர்.
லன்ச் சீற்களை (Lunch Sheet) பயன்படுத்துவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு தொடர்பாகவும் அதில் காணப்படும் தலேட் எனும் புற்றுநோய்க் காரணி மனித உயிருக்கு ஏற்படுத்தும் பாதிப்பு தொடர்பாகவும் நீண்டநேரமாக கலந்துரையாடப்பட்டது. இந்நிலையில், சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பைக் கவனத்திற்கொண்டு, லன்ச் சீற்களை பயன்படுத்துவதை தடை செய்தல் மற்றும் இதற்கான மாற்றீடுகளை அறிமுகப்படுத்தவும் இந்தக் கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டது. உலகில் எந்த நாட்டிலும் லன்ச் சீற்கள் பயன்படுத்தப்படுவதில்லையென சுட்டிக்காட்டிய சுற்றாடல் அமைச்சு அதிகாரிகள், லன்ச் சீற்களை பயன்படுத்தாமல் இருப்பதன் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டினர்.
சுற்றாடல் சட்டத்தை திருத்த தற்பொழுது முன்வைக்கப்பட்டுள்ள திருத்தங்கள் தொடர்பாகவும் கவனத்திற்கொள்ளப்பட்டதுடன், பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்க விசேட விடயங்கள் முன்வைக்கப்பட்டதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிளாஸ்டிக் போத்தல்களை மீள்சுழற்சிக்கு மீண்டும் சேகரிக்கும் நடவடிக்கையை, அவற்றை உற்பத்தி செய்து விநியோகிப்பவர்களுக்கே வழங்க வேண்டுமெனவும், இந்தக் குழு முன்மொழிந்தது. புதிய தொழில்நுட்பத்தின் மூலம் QR குறியீட்டைப் பயன்படுத்தி பல்வேறு தேவைகளுக்காக விநியோகிக்கும் பிளாஸ்டிக் போத்தல்கள் மீண்டும் சேகரிக்கப்பட்டு, மீள்சுழற்சி செயன்முறைக்கு உட்படுத்தப்படுவதைக் கண்டறியும் முறையை தயாரிப்பது தொடர்பான சட்டத்தை திருத்துவதும் நோக்கமாக உள்ளதாகவும், அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர். பிளாஸ்டிக் போத்தல்கள் மீள்சுழற்சி செய்யப்படுவதை வினைத்திறனாக மேற்கொள்ள வெற்றுப் போத்தல்களுக்கு குறிப்பிட்டளவு பணம் வழங்கப்பட வேண்டுமென, இந்தக் குழுவின் தலைவர் வலியுறுத்தினார். அத்துடன், இலங்கைக்கு தற்பொழுது இறக்குமதி செய்யப்படும் ஒரு முறை மாத்திரம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் உபகரணங்கள் மற்றும் பொருட்களைக் கண்டறிந்து, அவற்றை பட்டியலிட்டு, தமது குழுவுக்கு அறிக்கை வழங்குமாறும் அதிகாரிகளுக்கு துறைசார் மேற்பார்வைக் குழுத் தலைவர் பணித்துள்ளார். இந்தக் கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெடகொட, வைத்தியக் கலாநிதி திலக் ராஜபக்ஷ, வருண லியனகே ஆகியோரும், சுற்றாடல் அமைச்சு, மத்திய சுற்றாடல் அதிகார சபை, இலங்கை சுங்கம் ஆகியவற்றின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.